
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு |
ஆணுரிமை / ஆணுரிமைப் போராட்டம் / ஆணியவாதி என்ற சொல்லாடலை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? எந்த ஊடகத்திலாவது சமஉரிமைக் கேட்டு ஆண்கள் போராட்டம் நடத்தியதாகப் பார்த்ததுண்டா? எவராவது தன்னை, “ஆணியவாதி” என்று சொல்லிக் கொண்டதுண்டா? இத்தகைய சொல்லாடல்களைக் கேள்விப் படுவதற்கான வாய்ப்புகள் அரிது.
பொதுவாக உரிமைகள் பற்றிய விவாதங்களில் MALE CHAUVINIST என்ற சொல்லுக்கு “Someone who does not believe in the social or economic or political equality of men and women” அதாவது சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளில் பெண்ணுக்குச் சமஉரிமை கிடையாது என்று நம்புபவருக்கு, ஆணாதிக்கவாதி (MALE CHAUVINIST /ANTI-FEMINIST) என்ற விளக்கம் கொடுக்கப் படுகிறது! ஆணாதிக்கவாதி என்ற சொல்லுக்கு எதிர்மறையாகப் பெண்ணியவாதி (FEMINIST) என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது A supporter of feminism, Of or relating to or advocating equal rights for women பெண்ணிய ஆதரவாளர், ஆண்- பெண் சமஉரிமையை ஏற்பவர் என்று விளக்கப்பட்டிருந்தது.
இன்றைய நவீன நாகரிக உலகில் எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்ட பெண்கள் எந்த நாட்டிலாவது உண்டா? அவர்கள் கேட்கும் பெண்ணுரிமைகள் என்ன? இத்தனை நூற்றாண்டுகளாகப் போராடியும் இன்னும் ஏன் அவை முழுமையாகக் கிடைத்த பாடில்லை? அதிகபட்ச உரிமைகளை வழங்கி விட்டதாகச் சொல்லும் மேற்கத்திய நாடுகளிலும்கூட இன்னமும் ஏன் பெண்ணுரிமைப் போராட்டங்கள் தொடருகின்றன? ஆண்களிடம் இருந்து தங்களுக்கு உரிமையை வேண்டும் பெண்கள் வீதியில் போராடும் அளவுக்கு அப்படி எத்தகைய உரிமைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்? என்றெல்லாம் ஆராய்ந்தால் நூற்றாண்டுகளாகத் தொடரும் பெண்ணுரிமைப் போராட்டத்தின் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும்.
மேற்கத்திய நாடுகளில் பெண் விடுதலை மற்றும் உரிமைகள் கோரிப் போராடப் பெண்ணிய இயக்கங்கள் இருநூற்றாண்டுகளுக்கு முன்புதான் தோன்றின. பெண் என்பவள், பாலியல் நிலையில் ஒரு கீழ்த் தரமான இனமாக எண்ணி, சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் பெண்களை ஒதுக்குவதை எதிர்த்தும், இத்தகைய நிலைகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் சமூகப் பாகுபாடு, துரோகங்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆணும் பெண்ணும் சமம்; ஆணைப் போலவே பெண்ணுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளில் சமஅந்தஸ்து வேண்டியும், இவற்றுக்கான சட்டப்பாதுகாப்பு பெற்றுத் தரவும்தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையினால் உலகப் பெண்ணுரிமை தினம் என்று ஒவ்வொரு வருடமும் மார்ச் 08ஆம் தேதியில் கொண்டாடப் படுகிறது. 1909ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தாலும் இன்னும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்களெல்லாம் தங்களுக்கான உரிமைகளைப் பெற்று விட்டதாகச் சொல்லிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன? குட்டைப் பாவடையின் உயரம் மேலேறுவதே பெண்ணுரிமை அடைந்ததற்கான அடையாளமாக விளக்கம் கொடுக்கப்பட்டு, உண்மையான பெண்ணிய உரிமைகள் மிகத்தந்திரமாகத் திசைதிருப்பப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களும் இவற்றை கிளிப்பிள்ளையாய் உச்சரித்து மூளைச்சலவை செய்து வருகின்றன. வருடத்தில் ஒரு சிலரை உலக அழகிகளாக அறிவிப்பதிலும், வீனஸ் வில்லியம்ஸ் பாரம்பரிய வெள்ளை அல்லாத வேறு கலரில் குட்டைப்பாவடை அணிந்து விம்பிள்டனில் ஆடியதையும், சானியா மிர்ஸா டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் ஐம்பது இடத்தில் வந்ததையும் ஊடகப்படுத்தி பெண்ணுரிமையின் வெற்றியாகக் காட்டி, மதி மயங்கச் செய்கின்றனர்.
உலகிலேயே பெண்ணுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்றதோடு பலவந்தமாக அவ்வுரிமையை வழங்கவும் செய்த தத்துவம்/ கோட்பாடு/கொள்கை/அமைப்பு எங்கே என்று யாராவது உள்ளார்ந்த ஆர்வத்தோடு தேடினால், அவர் இறுதியாக வந்து நிற்குமிடம் இஸ்லாமாகத்தான் இருக்கும். “பெண்களுக்கு ஆன்மா என்று ஒன்று இருக்கிறதா?” என்று இங்கிலாந்து சர்ச்சுகளில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த பாதிரிமார்களுக்கு மத்தியில், இறைவனின் படைப்பில் ஆண்-பெண் பேதமில்லை; இருவரும் சமம் என்ற உலகின் முதல் மற்றும் முழுப் பெண்ணுரிமைப் பிரகடனம் அரேபியாவில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே முழங்கப்பட்டது.
பேச்சளவில் நில்லாமல் அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது ஆண்களின் மார்க்கக் கடமையெனவும் வலியுறுத்தியது. பெண்ணாய் பிறத்தலே இழிவு என்று கருதி உயிருடன் புதைக்கும் மனப்பான்மையை அடியோடு குழிதோண்டி புதைத்ததில் இஸ்லாம் சாதித்த அளவுக்கு வேறு எந்தக் கோட்பாடும் சாதிக்கவில்லை என்பதைப் பெண்ணியவாதிகள் திறந்த மனதுடன் அணுக வேண்டும்.
இன்று, மேற்கத்தியப் பெண்களும் உலகின் பிறபாகங்களிலுள்ள பெண்களும் தம் தேவை என்ன என்பதை அறியாமலேயே போராடிக் கொண்டிருக்கும் உண்மையான பெண்ணுரிமைகள் ஏற்கனவே இஸ்லாத்தினால் வழங்கப்பட்டு விட்டன என்பதை உணர்ந்து, இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டு விடுவார்களோ என்ற மிரட்சி (Islamophobia) மிகைத்ததால்தான் ஒட்டுமொத்த மேற்குலகமும் அவர்கள் பிடியிலிருக்கும் ஊடகங்களும் இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என்ற கோயபல்ஸ் ஒப்பாரிப் பாட்டை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து அவர்களின் கண்ணியம் காக்கப் படுவதைப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என்று நம்ப வைக்கத் துடிக்கிறார்கள். பெண்கள் போகப்பொருளாக இருக்கும் வரையில்தான் முதலாளித்துவ பருப்பு வேகும்; இஸ்லாமியச் சிந்தனை இருக்கும்வரை இந்த முதலாளித்துவ பருப்பு வேகாது என்பதை உணர்ந்ததால்தான், மேற்குலக முதலாளிகளின் முதல் எதிரியாக இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானதாகப் புனைந்துரைக்கப் படுகின்றது.
இஸ்லாம் வழங்கிய பெண்ணுரிமைகளை 1400 ஆண்டுகளாகச் சுவைத்துக் கொண்டிருக்கும் அரபுப்பெண்களைப் பார்த்தாவது இனிமேல் போலிப் பெண்ணியவாதம் பேசும் பெண்கள் பர்தா அணியத் தொடங்கட்டும்!
பெண்ணுரிமைக் கேட்டு போராடும் பெண்களே! நீங்கள் கேட்கும் உரிமைகளால் பெண்மையின் கண்ணியம் உண்மையில் காக்கப்படுகிறதா? என்று யோசியுங்கள். பெண்கள், ஆண்களுக்குப் போகப் பொருளாக இருப்பதே பெண்ணுரிமை என்ற ஆணாதிக்கச் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளுங்கள். கண்ணியம் போற்றப்படாத பெண்ணுரிமையால் உங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை; கண்ணியத்துடன் கூடிய உரிமைகளே பெண்ணுரிமை என்பதை உணருங்கள்! இதுதான் உண்மையான பெண்ணுரிமை என்று இஸ்லாமியப் பெண்களை உதாரணம் காட்டி, உங்கள் உரிமையை – கேட்க வேண்டாம் – நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!
N. ஜமாலுத்தீன் (https://www.satyamargam.com/author/jamaluddin/)
தஞ்சை மாவட்டம் அதிரையைச் சேர்ந்த சகோதரர் N. ஜமாலுத்தீன் அவர்கள் சென்னை புதுக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். கல்லூரி சஞ்சிகையில் இவரது இரு சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. பள்ளி இலக்கிய மன்றப்போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்ற அனுபவமும் இவருக்கு உண்டு. இவையன்றி துபை கல்ஃப் நியூஸ் நாளிதழ் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதிக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதியிருக்கிறார். 2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் N. ஜமாலுத்தீன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம் |