மீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 1

ண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்.

உலக மாந்தர் அனைவருக்கும் சோதனையாக உருவெடுத்திருக்கும் Covid-19 எனும் கொரோனா வைரஸ் அழிவதற்கு முன்னர் இவ்வாண்டின் (ஹிஜ்ரீ 1441) ரமளான் நம்மை வந்து அடைந்துள்ளது. உலகம் முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உலக முஸ்லிம்கள் நெருக்கடியோடு இவ்வாண்டின் ரமளானை எதிர்கொண்டுள்ளனர். எத்துணை நெருக்கடிகள் வந்தாலும் இறையருளில் குறையில்லாத ரமளானை நாம் வாழும் காலத்தில் வழங்கியதற்காக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறைவனுக்குக் கட்டாயம் தங்கள் நன்றியினைச் சொல்லாலும் செயலாலும் அவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


இம்மாதத்தின் மகத்துவத்தினைக் குறித்து நபி(ஸல்) அவர்கள்,
‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன”…. – (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 1957) என்றும், ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761) என்றும் அறிவித்தார்கள்.


ரமளான் மாதம் நன்மைகளை அதிகமதிகமாகப் பெற்றுத் தரும் மாதம். ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்குவரை நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் மாதம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.

இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் ரமளானை எதிர்பார்த்து அதில் நோன்பு நோற்ற நிலையில் அதிகமான வணக்க வழிபாடுகள், தர்மங்கள், குர்ஆன் ஓதுதல், அதிகமாக மார்க்க விஷயங்களில் ஈடுபடுதல் போன்று நன்மைகளில் தமது நேரத்தை முஸ்லிம்கள் அதிகமாகக் கழிக்கின்றனர். தம்மிடமிருந்து சொல்லாலோ செயலாலோ பார்வையாலோ எந்த ஒரு தவறும் நிகழக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லாவித சிறிய, பெரிய பாவங்களிலும் இருந்தும் நோன்பாளியான நிலையில் தவிர்த்துக் கொள்கின்றனர்.


முஸ்லிம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நோன்பு நோற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தமது ஐவேளைத் தொழுகைகளை மற்ற நாட்களில் சரியாக நிறைவேற்றாதவர்களும்கூட மிக ஆர்வமாக இம்மாதத்தில் நோன்பு நோற்பதையும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதையும் அதிகமாகக் குர்ஆன் ஓதுவதையும் காணலாம்.


அதிகமாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், முஸ்லிம்களிடம் இம்மாதத்தில் மிகுந்து இருப்பதைக் காணமுடியும். “எப்படியாவது அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; தான் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்புப் பெற்று மீட்சி அடைந்திட வேண்டும்” என்று முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.


புனித ரமளானின் ஒரு மாத கால அளவில் காணப்படும் நற்செயல்களின் மீதான ஆர்வம் நோன்பு மாதம் முடிந்ததும் மீண்டும் தலைகீழாக மாறிவிடும் நிலையைச் சமூகத்தில் பரவலாகக் காண முடிகிறது. நோன்பின் சமயங்களில் செய்த நல்லறங்கள், பேணிய ஒழுக்கங்கள், காட்டிய நற்பண்புகளை அடுத்த பதினொரு மாதங்களுக்குப் பூட்டி வைக்கும் நிலையைக் குறித்து இச்சமூகம் இன்னும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? புனித ரமளான் மூலம் தான் அடைந்த நன்மை என்ன? அதற்கான பிரதிபலன் பெறும் தகுதி தனக்கு உள்ளதா? எனத் தன்நிலையைக் குறித்து சுயபரிசோதனை செய்ய முஸ்லிம்கள் தவறி விடுகின்றனர்.

oOo

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

(மீள் பதிவு)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.