வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11

இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி நம் வாழ்வில் மீண்டும் வராது; இதை நாம் வீணாகக் கழித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய நேர்ச்சிந்தனை நம் அனைவருக்கும் தேவை.

நோன்பு நாட்களிலோ மற்ற நாட்களிலோ இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். எதிலும் வீண் விரயமோ பகட்டோ, தற்பெருமையோ கலக்காமல் ‘இக்லாஸ்’ எனும் உளத்தூய்மையுடன், இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்நேரமும் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)

இன்னும், உறவினர்களுக்கு அவர்களுடைய உரிமைகளைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக! (எதையும்) வீண் விரயம் செய்யாதீர். (அல்குர்ஆன் 17: 26)

நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)

நோன்பு துறக்கும் இப்தார் விருந்துகள் முதல், தனி நபர் வாழ்க்கையில் அவரவர் உண்ணும் போதும் பருகும் போதும் வீண் விரயம் செய்யும் விஷயத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்து அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

உலகில் நோன்பில்லாத நிலையிலும் பசியிலும் பட்டினியிலும் தாகத்திலும் மக்கள் வாடும் நிலையில், அதை மறந்தவர்களாக நாம் செயல்படாமல், வறிய நிலையில் வாடுவோருக்குச் செலவிட நமது பொருட்களை ஒதுக்குவது இம்மாதத்தில் அதிகம் நன்மைகள் பெற்றுத்தர வல்லது. மேலும் இயன்றால் தொடர்ந்து நாம் செய்ய வேண்டிய நல்லறங்களில் ஒன்று இது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி, இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.

oOo

(மீள்பதிவு)
– தொடரும் இன்ஷா அல்லாஹ் …

இதை வாசித்தீர்களா? :   மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி!