சிறைபிடிக்கப்பட்ட கொரிய நாட்டினரை தாலிபான் விடுதலை செய்தது!

Share this:

{mosimage}கடந்த 2007, ஜூலை 19 அன்று கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்காக ஆப்கானிஸ்தான் வந்திறங்கிய 23 கொரிய நாட்டினரைத் தாலிபான் பணயக் கைதிகளாகச் சிறை பிடித்தது. முதலில் சிதைந்து போயுள்ள ஆப்கனை மீளக் கட்டியெழுப்ப வந்த பொறியாளர்களாக இவர்களைச் சித்தரித்த ஊடகங்கள், பின்னர் கொரிய அரசின் அறிக்கையின் பின்னர், சியோலில் இருக்கும் சேம்முல் ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் (Saemmul Presbyterian Church)சைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை வெளியிட்டன.

ஆப்கன் அரசினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 10 தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; கொரியப் படைகளை ஆப்கனிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை இந்த பணயக் கைதிகளை விடுவிக்க தாலிபான் நிபந்தனை விதித்தது. இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஒவ்வொருவராகக் கொரியப் பணயக் கைதிகளைக் கொன்றுவிடப்போவதாவும் மிரட்டியிருந்தது.

இம்மிரட்டலுக்குப் பணியாத ஆப்கன் அரசு தாலிபான் கைதிகள் எவரையும் விடுவிக்கமுடியாது என அறிவித்தது. ஆப்கன் அதிபர் ஹமீத் கார்சாய், அமெரிக்காவுக்குப் பயணம் செய்து அதிபர் புஷ்ஷைச் சந்தித்தார். இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தாலிபானை ஆப்கனும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து ஒடுக்கி அழிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டனர்.

இதற்கிடையே ஒருவர் பின் ஒருவராக இரு ஆண் பணயக் கைதிகளைத் தாலிபான் கொன்றது. உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் பலரும் தாலிபானின் இக்கொடுஞ்செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மீதமுள்ள பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தென் கொரிய அரசு, உடனடியாக அரசுப் பிரதிநிகள் சிலரை, தென்கொரிய நாட்டிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களின் உதவியுடன் தாலிபானுடன் பேச்சு நடத்த முன்வந்தது. தென்கொரிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்ட தாலிபான் இரு பெண் பணயக் கைதிகளை விடுவித்தது.

தாலிபானுடன் பேச்சு நடத்திய கொரிய முஸ்லிம்கள் ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களை நடுவர்களாக வைத்து தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் தென்கொரிய அரசு இவ்வாண்டு இறுதிக்குள் ஆப்கனிலிருக்கும் தனது 200 படையினரைத் திரும்பப் பெறுவதாகவும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பணியை ஆப்கனில் இனி அனுமதிப்பதில்லை என்றும் உறுதி அளித்தது.

இதனால் திருப்தி அடைந்த தாலிபான் தரப்பினர் இன்று பணயக் கைதிகளாக மீதமுள்ள 19 கொரியர்களையும் விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட கொரியர்கள் அனைவரும் ஆப்கன் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இப்பேச்சு வார்த்தையில் கொரிய அரசு தரப்புக் குழுவில் முனைப்புடன் பங்கு பெற்ற கொரிய முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் லீ, ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.