வியன்னா பல்கலையில் இஸ்லாம் பற்றி முதுகலை பட்டப்படிப்பு தொடக்கம்

{mosimage}ஐரோப்பாவில் இஸ்லாத்தின் மீதான ஊடகங்களின் எதிர்மறையான செய்திப்பரப்புத் தந்திரங்கள் அதன் உண்மையான கொள்கைகளை விளங்கப் பலரும் முயற்சி செய்து வருவதை அதிகரிக்கவே செய்கிறது. இதனால் ஜெர்மனியில் மிக அதிகமாக இஸ்லாம் வளர்ந்து வருவது தெரிந்ததே.

இஸ்லாத்தினையும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து அறியும் ஆர்வம் அங்கிருக்கும் எல்லாத்தரப்பினரிடையே அதிகமாவதால், ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகம் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் குறித்து முதுகலைப் பட்டப் படிப்பு இக்கல்வியாண்டு முதல் தொடங்கி உள்ளது. இதற்கு ஐரோப்பியர்களிடையே குறிப்பாகப் பெண்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதாக இப்பாடத்திட்டத்தினை வகுத்து மேற்பார்வையிடும் பேராசிரியர் அத்னான் அஸ்லன் கூறியுள்ளார்.

இப்பட்டப்படிப்பில் சேர அரபி மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பும் இஸ்லாம் குறித்த சிறு அளவிலான அறிமுகமும் இருத்தல் அவசியமாக வியன்னா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ளது.

இந்தப்படிப்பில் அருள்மறை குர்ஆன் முழுமையாக அதன் பொருளுடன் போதிக்கப்படுகிறது. அதோடு பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் ஹதீதுகளும் போதிக்கப்படுகிறது.

இந்தப் புதியப் பட்டப்படிப்பு ஐரோப்பியர்களிடையே இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு உதவும் என பேராசிரியர் அஸ்லன் கூறியுள்ளார். ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உள்ளது. ஆஸ்திரிய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் நான்கு விழுக்காட்டினர் ஆவர்.

இதை வாசித்தீர்களா? :   இஸ்லாம் குறித்து போப் புகழ்மாலை