இஸ்ரேலின் தொடரும் அன்னாபொலிஸ் வாக்குமீறல்கள்!

இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிகளான கிழக்கு ஜெருஸலம் மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.

இவற்றில் கிழக்கு ஜெருஸலம் பகுதியில் உள்ள ஹர் ஹோமா என்ற பகுதியில் 500 புதிய வீடுகளைக் கட்டவும், அதற்கருகிலுள்ள மாலேஹ் ஆதுமிம் பகுதியில் 240 வீடுகளைக் கட்டவும் இஸ்ரேலிய குடியிருப்புகள் அமைப்பு அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி (Tender) விளம்பரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பரில் இஸ்ரேல் பிரதமர் யஹூத் உல்மர்ட், அமெரிக்க அதிபர் புஷ் முன்னிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் புதிய குடியேற்றங்கள் நிறுத்தப்படும் என்றும், ஏற்கனவே அவ்விடங்களில் இருப்பவை இடிக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.

ஆனால் அதற்கு மாற்றமாக இருக்கும் இஸ்ரேலின் இந்தப் புதியத் திட்டம் பாலஸ்தீனர்களுக்குக் கடும் அதிருப்தி அளித்துள்ளது. “மீண்டும் உயிர்பெற்றுள்ள அமைதிப் பேச்சுக்களை இந்நடவடிக்கை பாதிக்கும்; இஸ்ரேல் அமைதி முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குகிறது” என்று பாலஸ்தீனத் தரப்பு அமைதிப்பேச்சுக் குழு உறுப்பினர் ஸயீப் எர்காத் கூறியுள்ளார்.

ஆனால் ஜெருஸலம் விவகாரங்களுக்கான இஸ்ரேலிய அமைச்சர் ராஃபி எய்த்தான், “ஜெருசலம் என்றென்றும் இஸ்ரேலின் ஒரு பகுதியே; அப்பகுதியில் குடியிருப்புகள் கட்டுமான வேலைகளை நிறுத்துவதாக இஸ்ரேல் ஒரு போதும் வாக்களிக்கவில்லை” என்று கூறி இஸ்ரேல் பிரதமரின் வாக்குறுதிக்கு மாற்றமாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பான இன்னொரு செய்தியை இங்கு படிக்கலாம்.

இதை வாசித்தீர்களா? :   கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு!