நம்பிக்கைத் துளி C.M.N சலீம் (நேர்காணல்)

சகோதரர் CMN சலீம்
சகோதரர் CMN சலீம்

மிழக முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு களப் பணியாற்றி வருபவர் சகோதரர் சி.எம்.என் சலீம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நலிந்த நிலையிலிருக்கும் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை இலட்சியமாகக் கொண்டு சிறப்பான திட்டமிடலுடன் செயலாற்றி வரும் சகோதரர் சி.எம்.என் சலீமுடனான கலந்துரையாடலை, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

 

{youtube}1aglMVn9kl8{/youtube}

“தமிழக முஸ்லிம்களின் அடுத்த தலைமுறையைக் கல்வியறிவு பெற்றவர்களாக்கிட ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்” என்ற முழக்கத்துடன் “சமூகநீதி அறக்கட்டளை” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தமிழகமெங்கும் கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துவதோடு, பொருளாதார மேம்பாட்டு மாநாடுகளிலும் பங்கு கொண்டு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பள்ளி மாணவர்கள், தமது மேல்வகுப்பினை முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பது குறித்துக் கல்வி மலர் என்ற பெயரில், மாணவர்களுக்காக விரிவான விளக்க ஏடு ஒன்று வெளியிட்டிருக்கும் அவர், அவ்வப்போது பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் தந்துள்ளார்.

அதே நேரத்தில், வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மறைக்கப்பட்ட இஸ்லாமிய நிகழ்வுகளை ஆவணங்களாக வெளிக் கொண்டு வருவதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது நடந்த வேலூர் புரட்சி குறித்து அவர் எழுதியுள்ள நூல், மறைக்கப்பட்ட பல அரிய தகவல்களைத் தாங்கி நிற்கிறது.

“திட்டமிட்டே மறைத்தார்கள்!”, “நாளைய உலகம் நமதாகட்டும்!” ஆகிய பெயர்களில் அவர் வெளியிட்டுள்ள காணொளி வெளியீடுகள், சமுதாயத்தின்மீது அவர் கொண்டுள்ள அக்கறைக்கும் அதற்காக அவர் ஆற்றும் துடிப்புமிக்க செயலாற்றலுக்கும் உதாரணங்கள் எனலாம்.

மேலும், அவர் நிறுவியுள்ள அறக் கட்டளையின் பெயரிலேயே பதிப்பகம் ஒன்றையும் துவங்கியுள்ளார். மேற்கூறிய காணொளிகளை இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளதோடு “நிர்வாக இயலின் தந்தை ஷெர்ஷா”, “வக்ஃபு சொத்துக்கள்”, “சேரமான் பெருமாள்” போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளது. மேலும், “சமூகநீதி முரசு” என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் சகோதரர் சி.எம்.சலீம் வெளியிட்டு வருகிறார்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவராகவும் செயல்படும் சகோதரர் சலீம், “இஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிட வேண்டும்” என்ற உயர்ந்த இலட்சியத்தோடு காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையிலுள்ள அம்மாப்பட்டிணம் என்ற ஊரில் “அன்னை கதீஜா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி” ஒன்றைக் கட்டியெழுப்பி வருகிறார்.

அடுத்த கல்வியாண்டு முதல் செயல்பட இருக்கும் இக்கல்லூரியின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

சகோதரர் சி.எம்.என் சலீமின் இத்தகைய சிறப்பான முயற்சிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி கிடைக்க, வாசகப் பெருமக்களுடன் இணைந்து சத்தியமார்க்கம்.காம் குழுமம் இறைவனைப் பிரார்த்திக்கிறது.

இதை வாசித்தீர்களா? :   தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி!

சமூக நீதி அறக்கட்டளை பற்றி சில வரிகள்:
ன்ஷா அல்லாஹ் 2030க்குள் தமிழக முஸ்லிம்கள் பள்ளிக் கல்வியை மீண்டும் இஸ்லாமிய அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு சமூக நீதி அறக்கட்டளையின் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு
ப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிக் கல்வியை இஸ்லாமியப் படுத்திட வேண்டும் என்றால் அதற்கு ஆயிரக்கணக்கான இஸ்லாமிக் நர்ஸரி & பிரைமரி மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். சமீபகாலமாக தமிழகத்தில் பரவலாக இத்தகைய பள்ளிகள் துவக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல ஊர்களில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்க வேண்டும் என்ற வேட்கை பெருகி வருகிறது.

இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களை துவங்குவதில் எதிர்கொள்கின்ற அடிப்படையானச் சிக்கல் ஆசிரியை பற்றாக்குறைதான். திறனான ஆசிரியர்கள் இல்லாததாலேயே பல இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் தடம் மாறிப் போகின்றன.

இஸ்லாமிய மார்க்கப் பாடங்களோடு பள்ளிப் பாடங்களையும் ஒரு சேர படித்து பட்டம் பெற்றுள்ள ஆசிரியைகள்தாம் இத்தகைய பள்ளிக்கூடங்களில் பணியாற்றத் தகுதி உடையோராவர். தமிழகத்தில் இதுபோன்று ஆசிரியைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். எம்.ஏ. ஆங்கிலம் படித்துப் பட்டம் பெறுகின்ற முஸ்லிம் பெண்களுக்கு அல்குர்ஆனின் அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறது. ஒரு சிலர் அல்குர்ஆனை மந்திரம் ஓதுவது போல ஓதுகின்றனர்.

அதேபோல பெண்கள் மதரஸாவில் இஸ்லாத்தைப் பயின்று வருகின்ற ‘ஆலிமா’வுக்கு அல்குர்ஆனை விளங்கும் ஆற்றல், அதைக் கற்பிக்கின்ற ஆற்றல் இருக்கிறது. ஆனால் ஆங்கில மொழித்திறனோ பள்ளிப் பாடங்கள் குறித்த அறிவோ அறவே இல்லை – ஒரு சிலரைத் தவிர. முஸ்லிம்களின் கல்வியில் ஏற்பட்ட இந்த இடியாப்பச் சிக்கல்தான் முஸ்லிம்களின் சமூகப் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணமாக அமைந்துவிட்டது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி அதை உலக அறிவோடு பொருத்திப் பார்க்கும் ஆற்றல் படைத்த, ஒருங்கிணைந்த கல்வியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியைகளை உருவாக்கிட வேண்டும். அதுதான் முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்ட (ஹலால்) கல்வி முறை. அதுபோன்ற சிறப்புத் தகுதியுடைய ஆயிரக்கணக்கான ஆசிரியைகளை உருவாக்கினால்தான் முஸ்லிம்களின் பள்ளிக் கல்வியை இஸ்லாமியப்படுத்த வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேறும். அதற்கு, முதலில் ஆசிரியைகளை உருவாக்குவதுதான் நம்முன் இருக்கும் தலையாயக் கல்விப்பணி. இதற்காகவே B.I.S.Ed., (Bachelor of Islamic Shoool Education) என்ற பட்டப்படிப்பை கற்றுத்தரும் அந்நிஸா அகாடமி காரைக்காலில் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதலாமாண்டு 40 பெண்கள் பயின்று வருகின்றனர்.

அடுத்தக் கட்டமாக, வரும் கல்வியாண்டு முதல் புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அம்மாப்பட்டிணம் அருகில் அன்னை ஹதீஜா பெண்கள் கலைக் கல்லூரி என்ற புதிய பெண்கள் கல்லூரியை இறைவன் உதவியால் உருவாக்கி வருகிறோம்.

பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.ஸி. கணிதம் போன்ற பட்டப்படிப்புகளோடு மூன்றாண்டு ‘ஆலிமா’ படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. வாழ்வை நெறிப்படுத்தும் இஸ்லாமிய ஒழுக்கவியல் பயிற்சியோடு பெண்கள் தங்கிப் படித்திட தேவையான சிறப்பான கட்டமைப்பு வசதிகளோடு அன்னை ஹதீஜா பெண்கள் கல்லூரி உருவாகி வருகிறது.

கல்வியின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறையுடைய 100 சகோதரர்களின் அர்ப்பணிப்பால் உருவாகி வரும் அன்னை ஹதீஜா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகிறோம். தங்களது பெண் மக்களை இஸ்லாமிய நெறிகளோடு கூடிய சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற வேட்கையுடைய அனைவரும் அன்னை ஹதீஜா கல்லூரியை இன்ஷா அல்லா வரும் கல்வி ஆண்டு முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அன்னை ஹதீஜா போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும். அதில் பயின்று பட்டம் பெறும் பெண்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பள்ளிகளை உருவாக்கிட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பள்ளிக் கல்வியை இன்ஷா அல்லாஹ் 2030க்குள் இஸ்லாமியப்படுத்திட வேண்டும். முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமிய கலாச்சாரத்தை கண்ணும் கருத்துமாக பேணி வாழக்கூடிய சமுதாயமாக மாற வேண்டும். இதுதான் நமது முழுமையான இலக்கு.

முஸ்லிம் சமுதாயத்தை இஸ்லாமிய மார்க்கத்தில் பற்றும் பேணுதலும் உடைய சமூகமாக மாற்றிடும் இந்த அறப்பணியில் ஆர்வமுடைய சகோதர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். (சமூக நீதி)

இதை வாசித்தீர்களா? :   'புர்கா' என்னும் திரை வன்மம்