
ஈரோடு : முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி தயாரித்த வழக்கில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
சுவரொட்டி
ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கடந்த வாரம் வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் இணையதளங்களில் பரபரப்பு சுவரொட்டியின் படம் வெளியானது. இந்த சுவரொட்டியில் முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கி இருந்தது. இந்த சுவரொட்டி ஈரோட்டில் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளிவந்தது.
சமூக இணையதளங்களில் இந்த சுவரொட்டி படம் வெளியானதை அறிந்த முஸ்லிம் அமைப்பினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தனர். இதுபோல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தேசிய செயலாளர் ஜோதிமணி, மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி ஆகியோர் தலைமையில் காங்கிரசாரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நா.விநாயகமூர்த்தி ஆகியோரும் புகார் மனு கொடுத்தனர்.
தனிப்படை
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுபற்றி சென்னை சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தில் எந்த இடத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை என்றும், எந்த அச்சகங்களிலும் சுவரொட்டி அச்சடிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
இருப்பினும் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட சுவரொட்டி படம் எப்படி அனுப்பப்பட்டது என்று சைபர் கிரைம் போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தினர். அப்போது ஈரோட்டில் இருந்துதான் படம் வெளியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த சுவரொட்டி குறித்து கண்டுபிடிக்க வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர்
தனிப்படை போலீசார் அதிரடியாக பல்வேறு அச்சகங்களுக்கும் சென்று விசாரணையை தொடர்ந்தனர். அப்போது ஈரோடு கோட்டை கோவலன் வீதியில் ஒரு தனியார் ஆப்–செட் அச்சகத்தில் உள்ள கணினியில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி வடிவமைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக அச்சகத்தின் உரிமையாளரான ஈரோடு சத்திரோடு தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) என்பவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் இந்த சுவரொட்டியை வடிவமைக்க கூறியதாகவும், ஆனால், சுவரொட்டியில் இருந்த வாசகங்களை பார்த்து செந்தில்குமார் அச்சிட மறுத்ததாகவும் தெரியவந்தது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் சுவரொட்டி நகலை ஒரு பிரிண்ட் மட்டும் போட்டு வாங்கியதாவும், பதிவிறக்கம் செய்ததாகவும் செந்தில்குமார் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சுவரொட்டி அச்சடிக்க வந்தவர் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பிரபுராம் (வயது 33) என்பது தெரியவந்தது.
கைது
அதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள இந்து முன்னணி புறநகர் மாவட்ட செயலாளர் பிரபுராமின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால், பிரபுராம் தலைமறைவாகி இருந்தார். பின்னர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பிரபுராமை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது சுவரொட்டியை வடிவமைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மாந்த்ரீகம், பில்லி சூனியத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் ரூ.1 கோடி பரிசு அறிவித்து பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டி இருந்ததால், அதை கண்டிக்கும் வகையில் முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் சுவரொட்டியை அச்சடித்து ஒட்ட முயற்சித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பிரபுராமை போலீசார் கைது செய்து உடனடியாக ஈரோடு 1–ம் எண் மாஜிஸ்திரேட்டு அருண் சபாபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
நன்றி: தினத்தந்தி (ஜனவரி 11, 2015)
முந்தைய செய்தி:
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி வடிவமைப்பு: ஈரோடு அச்சக உரிமையாளர் கைது
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி வடிவமைத்தது தொடர்பாக ஈரோடு அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்களுக்கு எதிராக சுவரொட்டி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஒரு சுவரொட்டியை இந்து முன்னணி அமைப்பின் பெயரில் ஒட்டப்பட்டு உள்ளதாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் ஆகிய இணையதளங்களில் தகவல் பரவின. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முஸ்லிம் அமைப்புகள், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியை சந்தித்து மனு அளித்தனர்.
கைது
இதனைத்தொடர்ந்து இணையதள சுவரொட்டி விவரம் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரும், ஈரோடு போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஈரோடு மேட்டூர் ரோட்டை சேர்ந்த அச்சக உரிமையாளரான செந்தில்குமார் (வயது 43) என்பவர்தான் அந்த சுவரொட்டியை வடிவமைத்து கொடுத்து உள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அச்சக உரிமையாளர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த இணையதள சுவரெட்டியை அச்சடிப்பதற்காக வந்த ஈரோட்டை சேர்ந்த நபரை தேடி அவருடைய வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை அடுத்து அச்சக உரிமையாளர் செந்தில்குமாரின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நன்றி: தினத்தந்தி (ஜனவரி 9, 2015)
முந்தைய செய்தி: (ஜனவரி 6, 2015)