கிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்

நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன்.

தற்சமயம் உங்களுக்கு ஏராளமான உபரி நேரம் இருக்குமாதலால் உங்களை உள்ளாய்வு செய்து அவதானிக்கும்படி வேண்டுகிறேன். கையில் காபியுடன் அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு வெந்நீர் நிரம்பிய வாளியில் காலை விட்டுக்கொண்டு முதலில் ஆசுவாசமாகும்படி பரிந்துரைக்கிறேன்.

அவர்கள் உங்களை எப்படி ஆக்கிவிட்டார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நான் தங்களுடைய ரசிகையாக இல்லாமலிருக்கலாம், ஆனால் தாங்கள் துணிவார்வமிக்கத் தொழில் வல்லுநராக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு மனிதரிடமும் குறைபாடுகள் உள்ளன; நாம் ஓயாது முனைந்து அவற்றை மேம்படுத்துகிறோம். ஆனால் அந்தக் குறைபாடுகளுக்காகப் பொதுவெளியில் ஏளனப்படுவதென்பது பெரும் அவமானமாகும்.

தாங்கள் பாதி குனிந்த நிலையில் மோடியைப் பார்த்தபடி அவரிடம் ஏதோ கேட்பதாக உள்ள ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். கையாலாகாத நிலையில், அவரிடமிருந்து ஒப்புதல் வேண்டி நிற்கும் முகபாவம் அதில் உங்களிடமிருந்தது.

அது என்னைக் கடுமையாக வருத்தமுறச் செய்தது. உங்களிடம் எனக்கு முரண்பாடு இருக்கலாம். அதற்காகத் தாங்களோ, சொல்லப் போனால் தொழில் வல்லுநரான எந்தப் பெண்மணியோ இப்படியான ஒரு நிலைக்கு உள்ளாவதை ஒரு சமூகச் சேவகியாக, மனுஷியாக நான் விரும்பவே மாட்டேன்.

திருமதி பேடி அவர்களே, உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்; ஆனால் 2002ஆம் ஆண்டு, குஜராத் எரிந்து கொண்டிருக்கும்போதே, கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகிப் பிழைத்தவர்களின் வாக்குமூலங்களை நான் பதிவு செய்துள்ளேன்.  பத்து மாவட்டங்களில் பரவியுள்ள கிராமங்களில் ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேல் நான் பயணம் புரிந்துள்ளேன். பிரேதப் பரிசோதனை நிகழ்த்திய மருத்துவர்களைச் சிறு கிராமங்களில் அவர்களுடைய மருத்துவ மையத்தில் சந்தித்தேன். பல பெண்களின் கருகிய சடலங்களைக் கண்டேன். அவர்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டு கர்ப்பத்திலுள்ள சிசுக்கள் இறந்துபோய் அவர்களுடைய உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்தன. நரோடா பாட்டியாவிலுள்ள ஒரு கௌஸர் பானுவின் வழக்கு அனைவருக்கும் தெரியும்; அந்தப் பெண்ணைப் போன்ற பலர் இருந்தனர். திருமதி பேடி அவர்களே, 15-20 ஆண்களால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி, தங்களது பெண்ணுறுப்பு கிழிந்து நாசமாகி, பல மாதங்களுக்கு எழவே முடியாத நிலையில் இருந்த பல பெண்களை நான் சந்தித்திருக்கிறேன்.

திருமதி பேடி அவர்களே, 2002ஆம் ஆண்டுப் படுகொலைகளுக்குப் பிறகு மோடி கௌரவ் யாத்திரை என்ற ஒன்றை மேற்கொண்டார். அனைத்து உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் அடைக்கலம் பெற்றிருந்த மக்களை, தன்னுடைய அந்த யாத்திரையில், பிள்ளைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று அழைத்தார் அவர். விஷத்தைக் கக்கிய, அருவருப்பான, மோடி உரைகளின் காணொளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக யூட்யூபிலிருந்து நீக்கப்பட்டுத் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.

இதை வாசித்தீர்களா? :   குஜராத் சாதனையல்ல... வேதனை!

திருமதி பேடி அவர்களே, பல்கீஸை கூட்டு வன்புணர்வு புரியும்போது அவருடைய சிறு மகளின் தலையை அவர்கள் கல்லில் மோதி, அந்த இடத்திலேயே இறந்து போனாள் அவள். மதீனா என்பவரின் மகளையும் அவருடைய உடன்பிறப்பின் மகளையும் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கி அதை அவரைக் கட்டாயப்படுத்தி காணச் செய்தனர்.

திருமதி பேடி அவர்களே, இந்த மனிதனுக்குமுன் தாங்கள் குனிந்துள்ளதைக் காணும்போது எனக்கு வலித்தது.

தூய்மைச் சான்றிதழைப் பற்றி நீங்கள் எனக்குச் சொல்லலாம். அத்தகைய தூய சான்றிதழ் கதைகளை ஏற்க முடியாத அளவிற்கு சற்று மேலதிகமாகவே எனக்கு விஷயம் தெரியும்.

இந்த மனிதன் பிரதமராவதற்காகத் திறமையான வகையில் காரியங்களைச் சாதிக்க முனைந்தபோது நான் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டேன். உச்சபட்சமாக என்னை துன்புறுத்தவோ, கைது செய்யவோ அல்லது கொல்லவோ மட்டுமே முடியும் என்று அந்த நண்பர்களிடம் கூறினேன்.. கொள்கைகளால் கொல்லப்படுவதைவிட உடலால் கொல்லப்படுவது எனக்கு உத்தமம்.

திருமதி பேடி அவர்களே, நீங்கள் உங்களுடன் மட்டுமே தனியாக இருக்கும் பொழுது அவர்கள் உங்களுடைய சுய மரியாதையை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணாகச் சிந்தியுங்கள். ஒரு தாயாகச் சிந்தியுங்கள். தன் தலையை உயர்த்தித் தொழில் வல்லுநராகத் தன் வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு பெண்ணாகச் சிந்தியுங்கள்.

தன்னைப் பற்றிய உண்மையைத் தனக்கே சொல்லிக் கொள்வதற்கும் தன்னையே பகுத்தாராய்வதற்கும் இரக்கமற்ற துணிவு வேண்டும். அது மிகக் கடினமான விஷயம். உங்களுடைய நன்மைக்காகத் தயவுசெய்து அதை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். (சத்தியமார்க்கம்.காம்)

தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

– ஷப்னம் ஹாஷ்மி

மொழியாக்கம்: சத்தியமார்க்கம்.காம்