ஸச்சார் அறிக்கையில் என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?

ஓய்வுபெற்ற தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் தலைமையில் இதுவரை எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு முயற்சியான இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையில் அவர்களின் பின்தங்கிய நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க தற்போதைய பிரதமர் டாக்டர் மன்மோஹன்சிங் ஒரு குழுவை அமைத்து அதன் ஆய்வுகளை நேற்று (1/12/2006) இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையை நிதர்சனமாக எழுதியுள்ளார் திரு ஸச்சார். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக "தேசத்துரோகிகள்" என்று சந்தேகத்துக்கு உட்படுத்தப்படுவது ஒருபுறமிருக்க,  இன்னொரு புறமோ தேவைக்கதிகமாக "ஆதாயம் அளிக்கப்படுகிறவர்கள்" (appeased) என்று இந்திய முஸ்லிம்கள் முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்த இரட்டிப்புச் சுமையை அறிந்தோ அறியாமலோ பலரும் இன்று முஸ்லிம்கள் மீது சுமத்துகிறார்கள் என்று கூறுகிறார்.

இந்தச் சுமையை சுமத்தியதில் இஸ்லாத்திற்கு எதிரான சங் பரிவார் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் இடைவிடாத பொய்ப் பிரச்சாரங்களின் பங்களிப்பு மிக அதிகம் எனில் அது மிகையாகாது.

எண்பது விழுக்காட்டிற்கு அதிகமாக இந்துக்கள் வாழும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் உள்பட பல சிறுபான்மையினர் உள்ளனர்.

1947-ல் நடந்த நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்த இந்திய விடுதலைக்குப் பின் இந்திய முஸ்லிம்கள் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப்பட்டு வந்துள்ளனர். இதனால் தான் RAW எனப்படும் வெளிநாடுகளில் உளவறியும் இந்திய உளவுநிறுவனத்திற்கு இன்று வரை ஒரு முஸ்லிம் கூட தேர்வு செய்யப்படவில்லை. இவ்வாறான சந்தேகக் கண்காணிப்புக்கு இதுவரை உறுதியான அடிப்படை எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.

நாட்டுப் பிரிவினைக்குப் பின் நிகழ்ந்த வகுப்பு மோதல்களில் பெரும்பாலும் கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர். இது குறித்து காவல்துறை அறிந்தே சரியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதும் வேதனைக்குரிய விஷயம். குஜராத் கலவரங்கள் இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு.

மிகச் சமீபமாக நடந்த மும்பை ரயில் குண்டு வெடிப்புகளில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்களே. எனினும் சரியான ஆதாரம் இல்லாததால் இவர்களில் பெரும்பாலோர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஒருவர் முஸ்லிம்கள் போல உடையணிந்திருந்தாலோ, தாடி வைத்திருந்தாலோ அல்லது பெண்களாக இருந்தால் ஹிஜாப் அணிந்திருந்தாலோ சந்தேகத்துக்கு உட்படுத்தத் தகுதியானவர் ஆகிறார் என்பது வேதனையான உண்மை. காவல்துறை இராணுவம் இவற்றில் மிகக்குறைவான அளவிலேயே முஸ்லிம்கள் உள்ளனர்.

ஸச்சார் அறிக்கை குறித்து சமூகவியல் நிபுணரான திரு மகேஷ் ரங்கராஜன், "முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைக் குறித்து இனியும் அரசு பாராமுகமாக இருக்கக்கூடாது. உலகிலேயே மூன்றாவது அதிக அளவு முஸ்லிம்களைக் கொண்டுள்ள இந்தியாவில் அவர்கள் இனியும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், தேசநலனுக்கும் வளர்ச்சிக்கும் கடும் பின்னடைவு ஏற்படும். முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நிலை இவற்றை உடனடியாக உயர்த்த அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதை வாசித்தீர்களா? :   மோடியின் இஸ்ரேல் பயணம்...