
ஒரிஸ்ஸாவின் கிராமப் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் தீவிரமானவை என்றும் அப்பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்றும் கூறி, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கும் சங் பரிவாரத்தின் வாதம் பச்சைப் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 27 அன்று ஒரிஸ்ஸா மாநில உள்துறை அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கை, "கடந்த ஏழு ஆண்டுகளில் கேந்த்ரப்பாறை மாவட்டத்தில் சங் பரிவாரம் கூறுவது போன்று எவ்வித மதமாற்றங்களும் நடைபெறவில்லை" என்கிறது.
இம்மாவட்டத்திலுள்ள ராஜ் நகர், மஹாகால்பாடா போன்ற தாலுகாக்களில் செயல்படும் வெளிநாட்டு மிஷனரிகள், நூற்றுகணக்கான இந்துக்களைக் கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் அவற்றைக் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் சங் பரிவார அமைப்புகள் முன்னரே அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ரெவன்யூ-தாலுகா மட்டத்திலுள்ள அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இத்தாலுகாக்களில் உள்ள திகாய நகர், பகமாரி, அமராவதி, ப்ரவாதி, கர்தா, ராதமாலிப்பூர், பனிபாலா, கருவான்பள்ளி, கனகநகர் முதலிய இடங்களில் 1998 க்குப் பிறகு ஒருவர்கூட மதம் மாறவில்லை என்பது புலனாகியது.
அதற்கு முன்னர் ஒரே ஒரு குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருப்பினும் இவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே மதம் மாறியதாகவும் ஒரிஸ்ஸாவில் நடைமுறையில் உள்ள மதச் சுதந்திர சட்டத்திற்கு எதிரானதாக அதனைக் காணமுடியாது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகக் கூறி, மாநிலம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சங் பரிவாரம் கொடூரமான அக்கிரமங்களை நடத்தியிருந்தது. இன்றும் ஆங்காங்கே தொடரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலுக்குச் சங் பரிவாரம் கூறிய காரணம், பச்சைபொய் என்பது அரசின் அதிகாரபூர்வ இவ்வறிக்கையிலிருந்து தெளிவாகிறது.
சிறுபான்மையினர் மீது சங் பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஏதாவது ஒரு புனையப் பட்ட காரணத்தைக் கூறுவதும் ஜனநாயக, மதசார்பற்ற இந்நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க அரசு அமைப்பு ஒன்று இருந்தபோதிலும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் வகையில் அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடும் சங் அமைப்புகளின் அக்கிரமங்களை நியாயப்படுத்தும் விதத்திலேயே அரசின் பெரும்பாலான அணுகுமுறைகளும் இருக்கின்றன.
ஒரிஸ்ஸா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என கிறிஸ்தவ மக்களின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட சங் பரிவாரத்தின் தாக்குதல்களை நடத்தியது சங் பரிவாரத்தின் குண்டர்கள் அமைப்பான பஜ்ரங்தளமாகும். இதனை அந்த அமைப்பின் தலைவர்கள் எனக் கூறப்படும் ரவுடிகளே வெளிப்படையாக ஒத்துக் கொண்ட நிலையில் கூட அதனைத் தடை செய்வதற்கு முயலாத அரசு மீது மக்களுக்குச் சந்தேகங்கள் வலுத்து வருகின்றது.
சங் பரிவாரத்தின் குண்டர் அமைப்பான பஜ்ரங்தளத்திற்கு, அட்டூழியங்கள் புரிவதற்கு உதவியாக இராணுவத்திற்கு ஒப்பான பயிற்சிகளை வழங்கியது, அரசின் இராணுவப் பயிற்சி பள்ளி என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், இந்நாட்டின் அனைத்து அமைப்புகளுமே ஹிந்துத்துவமயமாக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது.
நாட்டைத் துண்டாடும் விதத்தில் செயல்படும் இத்தகைய சங் அமைப்புகளைத் தடை செய்து, அட்டூழியம் புரியும் சங் பரிவார பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன் வர வேண்டும் என்பதே இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.