ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – மஜ்லிஸ்.

ஹைதராபாத்: “மக்கா பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்;  தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இல்லையெனில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்” என அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லிஸே இஜ்திஹாதுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்தது.

 

இக்கட்சிக்கு மாநில சட்டமன்றத்தில் 5 எம்.எல்.ஏக்களும், ஒரு எம்.எல்.ஸியும் லோக்சபாவில் ஒரு எம்.பியும் உள்ளனர்.

இக்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் தலைமையான United Muslim Action Committee யும் ஆந்திர முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக அதன் பிரதிநிதிகள் இன்று முதலமைச்சரை நேரில் காண்கின்றனர். இதே கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் யு.பி.எ தலைவர் சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து வலியுறுத்த செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மரணம் சம்பவித்தமைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளையும், காவலர்களையும் உடன் சஸ்பெண்ட் செய்யக் கோரி இக்கட்சியின் தலைவரும் எம்பியுமான அஸதுத்தீன் உவைஸியின் தலைமையில் நேற்று பைஸாபாபாத்தில் டி.ஜி.பி அலுவலகம் முன்பு இக்கட்சித் தொண்டர்கள் தர்ணா நடத்தினர். காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பிய தொண்டர்கள் அலுவலகம் முன் டி.ஜி.பி எம் ஏ பாஸிதின் உருவம் வரைந்த கொடும்பாவி எரித்தனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை, உண்மையான குண்டுகளுக்கு பதிலாக ரப்பர் குண்டுகளைத் தான் உபயோகித்திருந்தனர் என டி.ஜி.பி அறிக்கை விட்டிருந்தார். ஆனால் காவல்துறையினர் மக்களை கலைக்க துப்பாக்கிச் சூட்டிற்கு உண்மையான குண்டுகளைத் தான் பயன்படுத்தினர் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என்று அஸதுத்தீன் உவைஸி கூறினார்.

 
அகில இந்திய அஹ்ரார்-ஏ-இஸ்லாமின் தலைவர் மெளலானா ஹபிபுர் ரஹ்மான் தானி லுதியானி, ஆந்திர காவல்துறையின் முஸ்லிம்களுக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டை கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில், “ஆந்திர காவல்துறையின் வன்முறையை” துரதிஷ்டவசமானதென்றும், வெட்கப்பட வேண்டிய செயலென்றும் விமர்சித்துள்ளார்.  காவல்துறையின் இந்த செயல் உயர் மட்டத்திலிருக்கும் வன்முறையாளர்களை தோலுரித்து காட்டியிருப்பதாகவும், கிடைக்கும் எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் முஸ்லிம்களை அழிக்க பயன்படுத்தும் காவல் துறை அதிகாரிகளின் குள்ளநரித்தனத்திற்கு காங்கிரஸ் கட்சியே முழுமையாக பொறுப்பேற்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
 
மேலும் அவர், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவும், நிராயுதபாணிகளான ஏழு குடி மக்களை அநியாயமாகக் கொன்றதற்கான தண்டனையை வழங்கவும் குடியரசு தலைவர் A.P.J. அப்துல் கலாமிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  பஞ்சாப் டேரா சச்சா செளதா-வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக கையாண்ட பஞ்சாப் காவல்துறை, எவ்வித அசம்பாவிதமும், குறிப்பாக உயிர்சேதமும் நடக்காமல் தவிர்த்திருப்பதை சுட்டிக்காட்டிய லுதியானி, முஸ்லிம்களின் ஆதரவினால் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசுக்கு இது பற்றி எந்தவித உத்தரவும் பிறப்பிக்காத காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை வன்மையாக கண்டித்தார்.

 
ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த இந்த கொடுமைக்கு தமிழக முஸ்லிம்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் குண்டு வெடிப்பை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதில், “சமூகநல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் ஒரு குறிப்பிட்ட ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் மீது மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டிய அந்த கோணத்தில் புலனாய்வு செய்யப்படவேயில்லை. உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. ஹைதராபாத்தில் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைதுச் செய்ய வேண்டுமென தமுமுக கோருகிறது. வழக்கம் போல் அந்த குண்டுவெடிப்பிற்கும் முஸ்லிம்கள் மீது பழிப் போடக் கூடாது என்று கோருகிறோம்.” எனக் கூறியுள்ளார். ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தும் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றது.

நாடு முழுவதும் முஸ்லிம்களிடையே எழுந்து வரும் கொந்தளிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சி.பி.ஐ விசாரணைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை வாசித்தீர்களா? :   தேர்தல் பிரச்சார குறுந்தகடு: பாஜக தடைசெய்யப்படுமா?