ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்!

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டது. அதற்காகப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல்  கைகளில் உணவு, உடைகளோடு செருப்புகளையும் சுமந்தவாறே ஆற்றில் நீந்திச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார் ஓர் ஆசிரியர். உலகையே வியக்க வைத்திருக்கும் அந்த கணித ஆசிரியரின் பெயர் A.T அப்துல் மாலிக்.

கேரளாவில் மஞ்சேரி அருகிலுள்ள அனக்கயம் பஞ்சாயத்து பெரும்பலம் கிராமத்தில் உள்ள AMLP பள்ளி ஆசிரியரான அப்துல் மாலிக் தினசரி நீச்சலடித்து ஆற்றைக் கடந்து போய் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். ஆற்றில் நீந்தி அக்கரை சேர்ந்த பிறகும் மலைப் பிரதேசத்தில் ஒரு கி.மீ தூரம் நடந்து பள்ளியை அடைகிறார். மாலையிலும் இதேபோலத் திரும்பிப்  பயணம்.

சரி, ஏன் நீந்திச் செல்ல வேண்டும்? அவரே விளக்கம் அளிக்கிறார். “12 கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்வதற்கான மலைப்பிரதேசத்தின் சீரற்ற பாதையில் மூன்று பஸ்கள் மாறிச் சென்று பள்ளியை அடைய 3 மணி நேரம் ஆகும். இதன் மூலம் பொன்னான நேரம்  வீணாகிறது.  கடலுண்டிபுழா ஆற்றின் குறுக்கே நீந்திக் கடந்தால் பதினைந்தே நிமிடத்தில் சென்றுவிடலாம் என்பதால் இவ்வாறு செய்கிறேன்”

பள்ளியில் கற்பிக்கும் பணிகள் மட்டுமின்றி, நீர் சேமிப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி, மாணவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று களப்பணியாற்றுகிறார் அப்துல் மாலிக். அத்துடன் கூடவே நீச்சல் பயிற்சியையும் அளிக்கிறார்.

மிகச் சிறிய மலைக் கிராமத்திலுள்ள இப்பள்ளியை விட நகரத்தின் வேறு இடங்களில் அதிகமான சம்பளத்துடன் சட்டை மடிப்புக் கசங்காமல் பணி செய்ய இயலும் என்ற சூழலிலும் தமது பள்ளியைக் காதலிக்கும் அப்துல்மாலிக் மாணவர்களிடையே ஹீரோவாகத் திகழ்வதில் வியப்பில்லை. தமது எதிர்காலக் குறிக்கோள் பற்றிய கேள்விகளுக்குப் பல மாணவர்கள் உறுதியாக அளித்த பதில், தாமும் அப்துல் மாலிக் போன்ற ஆசிரியராக வந்து சேவை செய்ய வேண்டும் என்பதே!

உயர்வர்க்கக் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை வலிந்து உருவாக்கிக் கொண்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்தியில், சத்தம் போடாமல் மகத்தான சேவையைப் புரிந்து வரும் இத்தகைய ஒருசிலர் மூலம் மட்டுமே மனிதநேயமும் பணியில் அர்ப்பணிப்பும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது நினைவுக்கு வருகிறது.

அப்டேட்:  மேற்கண்ட செய்தியை, ஊடகங்கள் வாயிலாக, லண்டன் மனநல மருத்துவரான மன்சூர் ஆலம்  கேள்விப்பட்டார். தொடர்ந்து இணையதளம் வாயிலாக, இப்பள்ளியை தொடர்பு கொண்டார். (ஆங்கிலத்தில் வாசிக்க: https://www.satyamargam.com/english/2290-no-more-swims,-teacher-gets-a-boat.html )

சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த 70 வயதான டாக்டர் மன்சூர் ஆலம், குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் உரையாடினார். தொடர்ந்து ஆசிரியர் மாலிக் தினமும் இரண்டு முறை நீந்தி கடக்கும் ஆற்றையும் சென்று பார்த்தார்.

இதை வாசித்தீர்களா? :   குஜராத் படுகொலைகள் - அமைச்சர் தலைமறைவு

மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஃபைபர் படகை வாங்கி பரிசளித்து விட்டார். அதுமட்டுமின்றி பள்ளியில் கூடுதல் வகுப்பறை அமைத்து தருவதாகவும், கம்ப்யூட்டர்கள் வாங்கித் தருவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு சென்ற மன்சூர் ஆலம், அங்கேயே பணியாற்றி வருகிறார். டாக்டர் மன்சூரின் உதவிக்கு நன்றி கூறிய ஆசிரியர் அப்துல் மாலிக் ‘ஃபைபர் படகு கிடைத்து விட்டதால் தனது சிரமங்கள், நேர விரயங்கள் தீர்ந்து விட்டதாகவும் இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுக்க முடியும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

– அபூ ஸாலிஹா