காஷ்மீர்: தொடரும் தீவிரவாதி வேட்டையின் மறுபக்கங்கள்

காஷ்மீர் அடிவாரங்களில் சாதாரண அப்பாவிப் பொதுமக்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி இராணுவ எதிர்தாக்குதலில் தீவிரவாதிகள் பலி என பொய் கதைகள் உருவாக்கிக் கொலை செய்வதில் மூன்று தனி இராணுவ பிரிவுகள் பங்கெடுத்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வருடம் நடந்த பல தொடர் என்கவுண்டர்கள் அனைத்தும் இவ்வாறு பொய்யாக உருவாக்கப்பட்டவைகளாகும்.


இந்த பொய் என்கவுண்டர்களை மத்திய காஷ்மீர் மாவட்டமான கண்டர்பாலின் உயர் காவல்கண்காணிப்பாளர் (SP) ஹன்ஸ்ராஜ் பரிஹார் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) பகதூர் ராம் ஆகிய இரு உயர் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து நடத்தியதாகவும் தி ஹிந்து வெளிப்படுத்தியிருக்கும் இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கிறது. அப்பாவிப் பொதுமக்களை காவல்துறையும் இராணுவமும் இணைந்து கொடூரமான முறையில் செய்த தொடர்படுகொலைகளை குறித்த விவரங்கள் இச்செய்திக் கட்டுரையில் விவரமாக வெளியிடப்பட்டுள்ளது.


ஒரு குற்றமும் செய்யாதவர்களைக் கொடூரமாக கொலைசெய்து பின்னர் பொய்யான முதல் தகவலறிக்கைகளை(FIR) இவர்கள் தயாராக்கி வந்துள்ளனர். இதன் அடிப்படையில் இராணுவ நடவடிக்கையின் பொழுது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பொய் ஆதாரங்களை உருவாக்கிப் பத்திரிக்கைகளுக்கு கொடுத்து வந்துள்ளனர்.


கோக்கர்நாக்கைச் சேர்ந்த தச்சுவேலை பார்க்கும் அப்துல் ரஹ்மான் பத்தரின் மரணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இத்தொடர் கொலைகளைக் குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விருதுகள் மற்றும் பதவி உயர்வுகளைக் குறிக்கோளாகக் கொண்டு இவர்கள் இக்கொடூர கொலைகளைச் செய்து வந்துள்ளனர்.


பாகிஸ்தானில் கராச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவந்த அபூஸாஹிப் என்ற தீவிரவாதி இராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இராணுவம் சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கை கூறியது. இத்தீவிரவாதியிடமிருந்து பல பயங்கர ஆயுதங்களையும் தாக்குதலின் போது கைப்பற்றியதாக இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் தோடா மாவட்டத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தை சேர்ந்த ஷௌகத் கான் என்ற இஸ்லாமியப் போதகர் தான் இவர்கள் தாக்குதலில் இறந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.


அதேபோன்று கடந்த வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதி தீவிரவாதிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய போது பெயர் அறியப்படாத ஒரு தீவிரவாதியை இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் சம்பவ இடத்திலிருந்து பயங்கர ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றியதாகவும் தேசிய ரைஃபிள்ஸ் 5 என்ற இராணுவப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். தற்போது நடந்த விசாரணையில் இந்த பெயர் அறியாத தீவிரவாதியின் பெயர் நசீர் அஹ்மத் என்றும் ஏழு சகோதரிகளை கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரே ஆண் துணை என்றும் கண்டறிந்துள்ளனர். கடந்த வெள்ளியன்று நசீர் அஹமதின் உடலை விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். பாக்கட்டில் ஒரு நறுமண பாட்டிலையும் விசாரணை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அக்குடும்பத்திற்கான வருமானத்திற்கு நசீர் அஹ்மத் ஒரே வழியாக இருந்தார். வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாத தங்களது சகோதரன் சம்பவம் நடந்த தினம் எப்பொழுதும் போல் அடுத்துள்ள வேலை இடத்திற்குப் போனதாக சகோதரிகள் தெரிவித்தனர்.

இதை வாசித்தீர்களா? :   மோடியின் இஸ்ரேல் பயணம்...


இதே போன்று மற்றொரு நபர் தான் லர்னூ பகுதியை சேர்ந்த அலி முஹம்மத் பத்ரு. இவர் கடந்த வருடம் காணாமல் போயிருந்தார். தேசிய ரைஃபிள்ஸ் 24 சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கையில் பத்ருவை பயங்கரமான தீவிரவாதியாக சித்தரித்திருந்தனர். இவரும் இராணுவத்தினரின் கொடுஞ்செயல்களுக்கு பலியாகி விட்டதாக விசாரணையின் அறிக்கை தெரிவிக்கிறது. குலாம் நபி வாஹியின் கதையும் இதே போன்றதே. காவல்துறை கண்டுபிடித்த இவரின் உடலை உறவினர்கள் அடையாளம் கண்டனர். அப்பாவியான இவரும் முதல் தகவலறிக்கையில் பெயர் அறியாத பயங்கர தீவிரவாதி தான்.


காஷ்மீரின் மலையடிவாரத்திலிருந்து இவ்வாறு தோண்டியெடுக்கப்படும் ஒவ்வொரு உடலும் மேலெழுப்பப்படும் பொழுது எதிர்ப்பு கோஷங்களுடன் ஒன்றிணையும் மக்களைப் பிரித்து விட காவல் துறையும் இராணுவமும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் காலம் காலமாக காஷ்மீர் அடிவாரப்பகுதிகளில் இராணுவமும் காவல்துறையும் நடத்திக் கொண்டிருந்த கொடூரமான கொலைகளின் பட்டியல் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்த ராய்ட்டர்ஸ் செய்தியும் இதனை உறுதி செய்கிறது.


இதற்கு முன்பு 2004 ஏப்ரல் மாதம் தேவஸர் லோலாப் என்ற இடத்தில் நான்கு தொழிலாளிகளை தீவிரவாத முத்திரை குத்தி கொலைசெய்த வழக்கில் 12 இராணுவத்தினர் இப்பொழுதும் விசாரணையில் உள்ளது நினைவு கூரத்தக்கது.