திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்

Share this:

நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி தொடர் குண்டு வெடிப்புகளால், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருந்தனர். கடந்த வெள்ளி, செப்டம்பர் 19 அன்று காலை, ஏறத்தாழ முழுதும் நடுத்தர முஸ்லிம்கள் வாழும் டில்லி ஜாமிஆ நகரில் பரபரப்பான காட்சிகள் சில அரங்கேறின.

“என்கவுண்ட்டர்” என்று காவல்துறையினரால் வர்ணிக்கப்படும் அந்நிகழ்வில், அண்மையில் அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி ஆகிய நகரங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்கான மூலகர்த்தா என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிஃப் என்பவரும் அவருடைய தோழர் ஃபக்ருத்தீன் (எ) சாஜித் என்பவரும் கொல்லப் பட்டனர். தீவிரவாதி என்று ‘கருதப்படும்’ மூன்றாமவர் சம்பவ இடத்திலும் தப்பியோடிய இருவரில் ஒருவர் அன்று மாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். இதில், டில்லி காவல்துறை சிறப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ மோகன் சந்த் சர்மா காயமடைந்து, மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

பல்வேறு தேசிய ஊடகங்களிலிருந்து, சாதாரண மக்கள் வரை அனைவராலும் போலியானது எனக் கருதப்படும் இந்த என்கவுண்ட்டர் நிகழ்வைக் குறித்துக் காவல்துறை வெளியிட்டுள்ளத் தகவல்களிலிருந்து:

செப்டம்பர் 19 வெள்ளி காலை 10 மணி:

* அஹமதாபாத் குண்டுவெடிப்புத் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட அபூ பாஷிர் கொடுத்தத் தகவலின்படி தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகள் தங்கியிருந்த டில்லி ஜாமிஆ நகரின் செய்லிங் க்ளப் சாலையிலுள்ள பட்லா ஹவுஸ் அடுக்கு மாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியிலுள்ள எல்-18 ப்ளாட்டை, டில்லி துணை கமிஷனர் சஞ்சீவ் யாதவின் தலைமையில் 20 காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

செப்டம்பர் 19 வெள்ளி காலை 11 – 11.45 மணி:

* 80க்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர் கொலைகள் நடத்திய அனுபவம் கொண்ட இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா, குண்டு துளைக்காத ஆடை எதுவும் அணியாமல் பைஜாமா மற்றும் குர்தா ஆடையில் தனியார் நிறுவன விற்பனையாளர் போன்று வேடமிட்டு, எல்-18 ப்ளாட் கதவைத் தட்டுகிறார்.

* கதவைத் திறந்த வீட்டினுள் இருந்தத் தீவிரவாதிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் சர்மாவை .3 எம்.எம் கைத்துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் உடலில் பாய்ந்ததில் இரு குண்டுகள் உடலைத் துளைத்து வெளியேறின. இதில் தலைமை கான்ஸ்டபிள் பல்வான் சிங்கிற்கும் காயம் ஏற்பட்டது.

* சர்மா உடனடியாகப் பக்கத்திலிருந்த ‘ஹோலி குடும்ப மருத்துவமனை’க்கு எடுத்துச் செல்லப்பட்டு, வயிற்றில் துளைத்திருந்த குண்டை அகற்றுவதற்காக மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

* ஸ்பெஷல் செல் துணை கமிஷனர்கள் கர்னால் சிங் மற்றும் அலோக் குமார் ஆகியோர் உடனடியாக ஜாமிஆ நகர் வந்தனர்.

* ஸ்பெஷல் செல்லிலுள்ள பல்வேறு குழுவினர் உடனடியாக ஜாமிஆ நகருக்கு வரவழைக்கப்பட்டனர்.

* 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஜாமிஆ நகரைச் சூழ்ந்து வளையம் அமைத்தனர்.

* பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்ட அதிரடிப்படையினர் மீண்டும் எல்-18 ப்ளாட்டைச் சுற்றி வளைத்தனர்.

* இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் காரணமாகப் பொது மக்களை வீட்டிலிருந்து வெளியே வரக் காவல்துறை அனுமதிக்கவில்லை.

* காவல்துறை 22 முறை துப்பாக்கிசூடு நடத்தியது. தீவிரவாதிகள் 8 முறை சுட்டனர்.

* இதில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருவர் தப்பியோடினர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.

* இறந்த தீவிரவாதிகளின் உடல்களைக் காவல்துறை அப்புறப்படுத்தி விட்டு, பிடிக்கப்பட்ட தீவிரவாதியை விசாரிப்பதற்காக இரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர்.

செப்டம்பர் 19 வெள்ளி காலை 11.45 மணி:

* “என்கவுண்ட்டர் முடிவுக்கு வந்தது” என காவல்துறை அறிவித்தது.

* ஜாமிஆ நகர்வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து, காவல்துறையினருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அங்கிருந்து கொண்டு, “பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக”ப் புரளி கிளப்பி விட்ட ஊடகங்களுக்கு எதிராகவும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

செப்டம்பர் 19 வெள்ளி மாலை 4.00 மணி:

டில்லி கமிஷனர் ஒய். எஸ். டாட்வால், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, “கொல்லப்பட்டவரில் ஒருவர், குண்டுவெடிப்புகளுக்கு மூலகர்த்தாவாகச் செயல்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தலைவர் ஆதிஃப்” என்று அறிவித்தார். மேலும், இத்தீவிரவாதிகளைக் குறித்து முன்னர் கைது செய்யப்பட்ட அபூ பாஷிர் எந்தத் தகவலும் தரவில்லை எனவும் டில்லி காவல்துறையினரின் தனிப்பட்ட புலன்விசாரணையில்தான் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுமான தீவிரவாதிகளைக் குறித்துத் தகவல் கிடைத்தது எனவும் கூறினார்.

செப்டம்பர் 19 வெள்ளி மாலை 7.00 மணி:

என்கவுண்ட்டரில் தீவிரவாதிகளால் சுடப் பட்ட என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சர்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

***

பதில் கூறமுடியாத பல சந்தேகங்கள் நிறைந்த, காவல்துறை நடத்தியதாகக் கூறப்படும் இந்த என்கவுண்ட்டரைக் குறித்து நாட்டில் பல தரப்பினரிடையே “நீதி விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பிரபல தேசிய ஊடகங்களிலிருந்து மனித உரிமைக் கழகத்தினர்வரை முன்வைக்கும் பல்வேறு கேள்விகள் இன்னும் காவல்துறையினால் பதில் அளிக்கப்படாமல் அப்படியே அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளன. இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக சம்பவம் நடந்த அன்றே பிரபல பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கழகத்தினர் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழு சம்பவ இடத்தை ஆய்ந்துத் தங்களின் சந்தேகங்களை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர். மனித உரிமைக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கைக் குறித்துப் பெட்டிச் செய்தியில் காண்க.

மனித உரிமைக் குழுவினரால் கேட்கப் படும் விடைகள் வெளிவராத கேள்விகள்!

தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைக் காவல்துறை சுட்டுக் கொன்ற டெல்லி ஜாமிஆ நகர் L-18 அடுக்குமாடி வீட்டை, ஷப்னம் ஆஸ்மி உள்ளிட்ட பொதுநல ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களைக் கொண்ட மனித உரிமைக் குழு கடந்த சனிக்கிழமை 20.09.08 அன்று பார்வையிட்டது

ஜாமிஆ நகர் குடியிருப்பாளர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமிருந்து திரட்டப் பட்ட தகவல்களையும் ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கைகளையும் அலசிப்பார்த்த பார்வையாளர் குழு, இதுவரை விடை வெளிவராத கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைக்கிறது:

  1. ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவங்களின் மூலகர்த்தா என்று டெல்லி காவல்துறை அறிவிக்கும் ஆதிஃபும் அவரது நான்கு நண்பர்களும், ஜாமிஆ நகரில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக சென்ற ஆகஸ்டில்தான் தங்களைப் பற்றிய சொந்த விவரங்களை காவல்துறையினரிடம் முறையாகத் தெரிவித்திருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையும் இதை மறுக்கவில்லை. இந்த ஐந்து பேரும் தெரிவித்த அவர்களது நிரந்தர முகவரி, ஓட்டுனர் உரிமம், இதற்கு முன் அவர்கள் தங்கியிருந்த வீட்டு முகவரி உள்ளிட்ட சொந்த விவரங்களைப் பரிசீலித்த டெல்லி காவல்துறை அத்தகவல்கள் சரியானவை என்று உறுதிப் படுத்தியிருக்கிறது. ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய புள்ளி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர், அகமதாபாத் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையிலும் டெல்லி குண்டு வெடிப்பிற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையிலும், எந்த காரணத்திற்காகவேனும் காவல்துறையினரிடம் தம்மைப் பற்றிய உண்மையான தகவல்களை தெரிவித்திருப்பார் என்பதை நம்ப முடிகிறதா?

  2. ஜாமிஆ நகரில் தீவிரவாதிகள் என்று ‘கருதப்பட்ட’ நபர்கள் தங்கியிருந்த வீடு நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் அமைந்திருக்கிறது. அதற்குப் படிகள் மூலம் மட்டுமே செல்லத்தக்க இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட ஒரே ஒரு வாசலைத் தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை. படிகள் மூலமாக அல்லாது வேறு எந்த வழியிலும் அந்த வீட்டை விட்டு வெளியேறுவது இயலாத காரியம். ‘என்கவுண்ட்டர்’ சம்பவத்தின்போது அந்தப் படிக்கட்டு காவல்துறையினரின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்ததாக எல்லா ஊடக அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. அந்த வீட்டையும் அந்த அடுக்குமாடிக் கட்டிடம் முழுவதையுமே காவல்துறை சுற்றி வளைத்து நின்றிருந்தது. அப்படியிருக்க, அச்சம்பவ நேரத்தில் இரண்டு நபர்கள் அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர் என்று காவல்துறையினர் சொல்வது எப்படிச் சாத்தியமாகும்?

  3. ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட படுபயங்கரமான தீவிரவாதிகள் தங்கியிருக்கும் வீட்டை திடீர் சோதனை நடத்தப் போவதாக ‘காவல்துறைத் தரப்பு’ சொன்னதாக ஊடகங்கள் தெரிவித்தன. அப்படியிருக்க, அந்த நடவடிக்கையில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளில் மரணமடைந்த இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா மட்டும், இதற்கு முன் டஜன் கணக்கில் ‘என்கவுண்ட்டர்’களை நடத்திய அனுபவசாலியாக இருந்தும், முன்னெச்சரிக்கையாக குண்டு துளைக்காத ஆடை அணிந்திருக்காதது ஏன்? அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையா? அல்லது அந்த நடவடிக்கையின்போது நிகழ்ந்த அவரது மரணத்தில் வேறு ஏதாவது மர்மம் இருக்கிறதா? அவரைக் கொன்ற துப்பாக்கிக் குண்டு பற்றிய தடய அறிக்கை பொதுவில் வெளியிடப்படுமா?

  4. சோதனை நடவடிக்கை முடிந்த பிறகு காவலர்கள் சிலர் L-18 கட்டிடத்தின் கூரையில் ஏறி நின்று வானத்தை நோக்கிப் பலமுறை சுட்டதாக நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். வேறு சில காவலர்கள் L-18-க்கு அருகிலும் எதிர்புறத்திலும் இருந்த கட்டிடங்களின் சன்னல்களை உடைத்தனர். பூத்தொட்டிகளையும் மேலிருந்து கீழே எறிந்து நாசப் படுத்தினர். ‘என்கவுண்ட்டர்’ முடிந்த பிறகு காவல்துறை பிறர் சொத்துகளை நாசப்படுத்தவும் வானத்தை நோக்கிச் சுடவும் என்ன காரணம்?

  5. L-18 வீட்டிலிருந்து ஏகே-47 மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவற்றுள் இன்ஸ்பெக்டர் சர்மாவைக் கொன்ற ஆயுதம் எது? ஏகே-47 உபயோகிக்கப் பட்டது என்றால் அதை யார் உபயோகித்தார்கள். சில பத்திரிக்கைத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் (உதாரணமாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 20.09.08), காவல்துறையினர் மட்டுமே ஏகே-47 உபயோகித்திருக்கின்றனர். சந்தேக நபர்கள் ஏகே-47 வைத்திருந்தது உண்மையென்றால் அதிகக் கேடு விளைவிக்கும் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் கைத்துப்பாக்கிகளை மட்டுமே பயன்படுத்தினார்கள் என்பது வினோதமாக இல்லையா?

ஜாமிஆ நகர் L-18 வீட்டில் நடந்த ‘என்கவுண்ட்டர்’ பற்றி டெல்லி காவல்துறை சொல்லும் கதைகளில் இது போன்ற பல முரணான தகவல்கள் இருப்பதாக பார்வையாளர் குழு கருதுகிறது. எனவே, பதிலில்லாத இது போன்ற கேள்விகளுக்கு விடைகாணவும், முரண்பாடான விஷயங்களுக்கு விளக்கம் பெறவும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக்குழு வலியுறுத்தியது.

குழு உறுப்பினர்கள்:

ஷப்னம் ஹாஷ்மி, சத்ய சிவராமன், மனிஷா சேத்தி, தன்வீர் ஃபஜல், அர்ஷத் ஆலம் மற்றும் பல்லவி தேகா.

நாட்டில் நடந்தப் பலவேறு என்கவுண்ட்டர்களைப் போலல்லாமல், சம்பவம் நடந்த அன்றே பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் எதிர்கொண்டுள்ள இந்த என்கவுண்ட்டரைக் குறித்துக் காவல்துறை கூறுவதை அப்படியே ஏற்று முடிவுக்கு வராமல் பல முனைகளிலிருந்தும் ஆய்வு செய்ய வேண்டியது நடுநிலையான அரசின் கடமையாகும்.

நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டுள்ளார்கள் எனக் குற்றம் சுமத்தி, விசாரணை அதே வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில்தான் மற்றொரு தொடர் குண்டு வெடிப்பு டில்லியை உலுக்கியது.

ஏற்கெனவே தீவிரவாதிகளை ஒடுக்க பொடா போன்ற கடின சட்டங்கள் தேவை எனவும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மத்திய அரசு செயல் இழந்து விட்டது எனவும் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நடந்த டெல்லித் தொடர்குண்டுவெடிப்பு மத்திய காங்கிரஸ் அரசுக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் செப்டம்பர் 19 க்கு முந்தைய மூன்று தினங்களில், தலை நகர் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடுமையான நெருக்கடியைத் தரும் பல்வேறு சம்பவங்களும் குண்டுவெடிப்புகள் நடந்த நிமிடத்திலேயே சம்பவத்துக்கு காரணம் முஸ்லிம்களே என்ற முன்முடிவோடு செயல்படுபவர்களுக்குத் தோல்வியைத் தரும்படியான சில சம்பவங்களும் நடந்தேறின.

அவற்றில் சில முக்கிய நிகழ்வுகள்:

1. டில்லி குண்டு வெடிப்பு நடந்த அடுத்தடுத்த நாட்களில், “உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றக் கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில் துறைக்கு நேரடித் தொடர்புடைய உள்துறை அமைச்சருக்கு அழைப்பு அனுப்பாமல், கட்சித் தலைவி சோனியாவின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

2. தீவிரவாதத்தை ஒடுக்க பொடா சட்டம் கொண்டு வர வேண்டும் என நெருக்கிய பாஜகவிற்கு, பின்னர் நடந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டம், “பொடா தேவையில்லை” என்ற பதிலை முடிவாக அறிவித்தது.

3. நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் உள்ள காவல்துறை மற்றும் உளவுத்துறை சரியாகச் செயல்படாததே காரணம் எனவும் நாட்டைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய உளவுத்துறை செயல் இழந்து விட்டது எனவும் பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்தார்.

4. என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் செப்டம்பர் 19 வெள்ளிக்கு இரு தினங்கள் முன்னர், அதாவது கடந்த புதன் செப்டம்பர் 17 அன்று இரவு கூடிய மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் “குண்டு வெடிப்புகள் தொடர்பாக முன்விதியுடன் ஒரே ஒரு சமுதாயத்தை நோக்கியே விசாரணை கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக” வெளிப்படையாக பெரும்பாலான அமைச்சர்கள் ஆவேசத்துடன் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கையினைத் தாக்கல் செய்த பாதுகாப்புத் துறை செயலர் நாராயணனுக்கு எதிராக மத்திய அமைச்சர் திரு. அந்துலே வெளிப்படையாகக் குற்றம் சுமத்தினார்.

“பத்திரிக்கைகளில் ஏற்கெனவே வெளியான கட்டுக்கதைகளைக் கட்டிக் கொண்டு வந்து வாயடைக்க முயல்வது பைத்தியக்காரத்தனமானது” என கடுமையாக நாராணனை விமர்சித்தார்.

“சிமியின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை வாங்கிய மத்திய அரசின் செயல்பாட்டைக் கடுமையாகக் கண்டித்த மத்திய அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான், “தடை செய்யப்பட வேண்டிய இயக்கங்களைக் குறித்து விசாரித்து முடிவுக்கு வரத் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்” எனக் கோரினார்.

“பஜ்ரங்தளம் முதலான சங்கபரிவார் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு இவர்களைக் குறித்து எவ்வித விசாரணையும் நடக்க விடாமல் முன்முடிவுடன் முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமே குற்றவாளிகளாகச் சித்தரித்து நடத்தப்படும் விசாரணைகள் மீது கேள்வி எழுப்பி, இந்த அணுகுமுறையினை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக் கொள்வதோடு, சங்கபரிவார அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் பஜ்ரங்தளை உடனடியாகத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஸ்வானும் அந்துலேயும் கோரிக்கை விடுத்தனர்.

5. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் செப்டம்பர் 19 வெள்ளி அன்று காலை, பாதுகாப்பு விஷயமாக ஆலோசனை நடத்தக் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் டில்லி ஜாமிஆ நகரில் காவல்துறை சிறப்புப் பிரிவு துணைக் கமிஷனர் தலைமையில் என்கவுண்ட்டர் நடத்தப் பட்டது.

என்கவுண்ட்டரின் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள்!

உண்மையில், “அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிஃப் ஒரு நிரபராதி” என்ற உண்மையை அன்று மாலை ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்ற பத்திரிக்கைக்குப் பேட்டிக் கொடுத்து விட்டு ‘ஆஜ்தக்’ தொலைக்காட்சிக்குச் செய்தி கொடுக்கப் போய்க் கொண்டிருந்த ஷிஸான் என்பவரை இடைமறித்து அழைத்துச் சென்ற பின்னர், டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்றும் என்கவுண்ட்டர் நடந்த பிளாட்டிலிருந்து தப்பியோட முனையும் பொழுது ‘சுற்றிவளைத்து’ப் பிடித்ததாகவும் காவல்துறை விட்ட கதை வெளிவந்துள்ளது.

தீவிரவாதிகள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் மூன்றாவது மாடியில் உள்ள பிளாட்டிலிருந்துத் தப்பியோட முனைந்த பொழுது ஸீஷான் பிடிக்கப் பட்டார் எனவும் மற்று இருவர் தப்பியோடி விட்டனர் எனவும் டில்லி காவல்துறை கூறியவை அனைத்தும் பொய்க்கதைகள் என அப்பொழுதே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருந்தது. தீவிரவாதிகள் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த நிலையில் பிளாட்டைச் சுற்றி காவல்துறை வளைந்திருந்த நிலையில் எவ்வாறு இருவர் தப்பியிருக்க முடியும்? என்ற சாதாரண கேள்வி அப்பொழுதே எழுந்திருந்தது. இவை அனைத்திற்குமான விடையாக ஷிஸான் விவகாரம் பதிலளிக்கின்றது.

தேர்வு தொடர்பாக அதிகாலையிலேயே பிளாட்டிலிருந்து வெளியே சென்றிருந்த ஷிஸான், திரும்பி வரும் பொழுது தனது பிளாட்டைச் சுற்றிக் காவல்துறை நிற்பதைக் கண்டு பக்கத்தில் உள்ளவர்கள் விவரம் அளித்த பின்னரே விஷயத்தைப் புரிந்துக் கொண்டார். இதற்கிடையில் தனது பிளாட்டிலிருந்து “ஆதிஃப் அடங்கிய தீவிரவாதிகள் துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கிச் சுட்டதாகவும் அதனாலேயே என்கவுண்ட்டர் நடத்த வேண்டிய நிலைக்குக் காவல்துறை தள்ளப்பட்டதாகவும்” சுற்றியிருந்தவர்கள் கூறியதைக் கேட்டு விக்கித்துப் போய்த்தான் பக்கத்தில் நின்றிருந்த ‘ஹெட்லைன்ஸ் டுடேக்கு’ பேட்டியளித்துள்ளார். “ஆஃதிப் ஒரு நிரபராதி என்றும் 4 வருடங்களுக்கும் மேலாக ஒரே அறையில் ஆதிஃபுடன் தான் தங்கியிருப்பதாகவும் இதுவரை மற்ற மதத்தினரைக் குறித்து ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசாத ஆதிஃபினைக் குறித்துத் தனக்கு நன்றாகத் தெரியும்” என்றும் பேட்டிக் கொடுத்த ஒரு சில நிமிடங்களில்தான் காவல்துறை ஷிஸானைப் பிளாட்டிலிருந்துத் தப்பியோட முனைந்ததாகக் கூறி கைது செய்து பொய்ச் செய்தியையும் பரப்பியது.

காவல்துறையின் இத்தகைய தகிடுதத்தங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக அரசும் ஊடகங்களும் இணைந்து நடத்தும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஜமா அத்தே இஸ்லாமி தலைமையில் பல இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய “இந்தியன் முஸ்லிம் கோ-ஆர்டினேசன்” என்ற கமிட்டி உடனடியாகச் சம்பவத்தை ஆய்வதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இக்கமிட்டியில் ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா, ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், ஜமாஅத் அஹ்லே ஹதீஸ், ஷியா அரசியல் அமைப்பு, முஸ்லிம் அரசியல் கவுன்சில், மஜ்லிஸே உலமாயே ஹிந்த் முதலான முஸ்லிம் அமைப்புகள் அங்கத்தினர்களாவர்.

இந்தக் கமிட்டி சம்பவம் நடந்த வெள்ளியன்று மாலை என்கவுண்ட்டர் இடத்தைப் பார்வையிட்ட பின்னர், அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து, “நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் போலியானது” என்றும் “குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் “முஸ்லிம் சமுதாயத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இந்த அநியாயத்தை அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” எனவும் அறிக்கை வெளியிட்டது. இவ்விசாரணைக் குழுவின் ஆய்வு குறித்த விரிவான விளக்கங்களைப் பெட்டிச் செய்தியில் காண்க.

என்கவுண்ட்டர் போலியானது – விசாரணை குழு!

செப்டம்பர் 19 வெள்ளியன்று காலை டில்லி, ஜாமிஆ நகரில் காவல்துறையால் நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் போலியானது என விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டவர்களும் கைது செய்யப் பட்டவர்களும் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் எனவும் குழு கண்டறிந்துள்ளது.

என்கவுண்ட்டர் போலியானது என்றச் சந்தேகம், மக்களிடையேயும் தேசிய ஊடகங்களிடையேயும் பரவலாக நிலைநிற்கும் வேளையில், பீப்பிள் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ் (பி.யூ.சி.எல்) தலைமையில் புதிதாக துவக்கப்பட்ட இந்தியன் முஸ்லிம் கோ-ஆர்டினேசன் கமிட்டி சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியது. ஆய்வில் அது கண்டறிந்த சில முக்கிய விவரங்கள்:

  1. காவல்துறை என்கவுண்ட்டர் நடத்தியதாகக் கூறப்படும் பட்லா ஹவுஸின் எல்-18 வீட்டில் வசித்தவர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழக மாணவர்களாவர். இதில் இருவர் தேர்வு தொடர்பாக அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தனர். வீட்டில் இருந்த மீதம் இருவரைத்தான் காவல்துறை சுட்டுக் கொன்றது.

  2. காவல்துறை கூறுவது போன்று என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது காலை 11 மணிக்கல்ல. காலை 10 மணிக்கே காவல்துறை சுட ஆரம்பித்தது. அப்பகுதி மக்களிடம் தங்கள் வீடுகளை அடைத்துக் கொண்டு வீட்டினுள் இருப்பதற்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. வெளியிலிருந்து எவரும் அங்கு நுழைவதைத் தடுக்கவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. என்கவுண்ட்டர் நாடகத்தை நேரில் கண்ட சாட்சிகள் இல்லாமல் ஆக்குவதற்காகக் காவல்துறை மேற்கொண்ட தந்திரமாகும் இது. கடந்த வியாழக்கிழமையே காவல்துறை இப்பிரதேசத்தைச் சுற்றி வளைத்திருந்தது.

  3. காவல்துறைக் கதவில் தட்டியதாகவும் உடனேயே வீட்டினுள்ளிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் காவல்துறை கூறுவது பச்சைப் பொய்யாகும்.

  4. அந்தப் பிளாட்டில் நுழைந்த காவல்துறை, பெரும் ஓசையோடு செடித் தொட்டியை இழுத்துத் தரையில் போட்டு உடைத்தது. இந்தச் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்துப் பார்த்தவர்களைத்தான் காவல்துறை சுட்டுக் கொன்றது. அங்கு இருபக்கத் தாக்குதல் எதுவும் நடைபெறவே இல்லை. ஒரு பக்கமிருந்து மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

  5. என்கவுண்ட்டர் நடந்த பிளாட்டிலிருந்து வெளியேற ஒரே ஒரு கதவு மட்டுமே உள்ளது. இதுவல்லாமல் நான்காம் மாடியிலிருந்துக் கீழே குதிப்பதற்கான வழிகள் எதுவும் இல்லை. காவல்துறையினர் இடையே நுழைந்து இருவர் தப்பிச் சென்றனர் என்ற வாதம் பச்சைப் பொய் என்பது இதிலிருந்து விளங்கும். சம்பவம் நடந்த ப்ளாட் இருக்கும் குறுகலான சந்தில் 1500 காவலர்கள் நிற்பதே மிகவும் சிரமத்திற்குரிய காரியமாகும். அப்படிப்பட்ட இடத்தில்தான் 2500 காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

காவல்துறையினரால் சுடப் பட்டுத்தான் இன்ஸ்பெக்டர் சர்மா இறந்திருக்க வாய்ப்பு உள்ளது என அப்பிரதேசவாசிகள் கூறினர். வெள்ளிக்கிழமை மாலை ஆஜ்தக் தொலைகாட்சிக்குப் பேட்டி வழங்கச் சென்ற ஷிஸானைத்தான் காவல்துறை “தப்பிச்சென்ற தீவிரவாதி கைது” எனக் கூறி பிடித்துச் சென்றது. அதிபயங்கர தீவிரவாதி யாராவது இதுவரை நேரடியாக தொலைகாட்சிக்குப் பேட்டியளிக்கச் சென்றுள்ளனரா? எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

பி.யூ.சி.எல் உறுப்பினர்களுடன் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினரான எஸ்.கியூ.ஆர். இல்யாஸ், வழக்கறிஞர் ஃபெரோஸ் காந்தி, வழக்கறிஞர் தாஹிர் சித்தீக்கி போன்றவர்களும் இவ்விசாரணை குழுவில் உடன் சென்றிருந்தனர்.

என்கவுண்ட்டர் நடைபெற்ற வேளையில் தப்பியோடும் போது பிடிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை கூறும் ஸெய்ஃப் ஒரு நிரபராதி என அவரின் தந்தை ஷதாப் அஹ்மத் கூறினார். இவர், அஸங்கட் சமாஜ்வாதி கட்சியின் துணைத் தலைவரும் ஆவார். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஸாஜிதின் மாமா பாதோஹி, நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிகிறார்.

சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைவருமே உயர்கல்வி கற்ற இளைஞர்களாவர்.

“காவல்துறை முஸ்லிம்களில் உயர்கல்வி கற்ற இளைஞர்களைக் குறி வைத்து வேட்டையாடுகின்றது. என் மகன் உண்மையில் தவறிழைத்திருந்தால், என் முன்னிலையில் வைத்தே காவல்துறை அவனைச் சுட்டுக் கொல்லட்டும். ஆனால், அது தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்” ஸெய்ஃபின் தந்தை ஆவேசப்படுகிறார்.

அண்டர்வேல்ட் தலைவன் அபூ ஸலீம், ஜாமிஆ நகரைச் சேர்ந்தவன் என்பதால் காவல்துறை இந்நகரை எப்பொழுதுமே ஏதாவது விஷயத்தில் சிக்க வைக்கச் சுற்றி வருவதாகவும் தற்பொழுது நடந்த சம்பவம் காவல்துறையினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தீவிரவாதி வேட்டை, காவல்துறையின் கட்டுக்கதையா?

“தலைநகரில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டவர்களைக் கைது செய்து விட்டோம்” என்றும் “இரண்டு தீவிரவாதிகளை என்கவுண்ட்டரில் கொன்று விட்டோம்” என்றும் கூறும் டில்லி காவல்துறையின் அறிவிப்பில் சந்தேகத்திற்கிடமான விஷயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தினந்தோறும் காவல்துறை புதுப்புதுப் பெயர்களையும் கதைகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது.

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டான ஸ்பெஷல் செல் அதிகாரி மோகன் சந்த் சர்மா உயிரிழந்ததை மட்டுமே தீவிரவாத வேட்டை நடந்ததற்கான ஒரே ஆதாரமாகக் காவல்துறை கூறுகிறது. தீவிரவாதிகளைச் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்குத் தேவையான எல்லாவித வாய்ப்புகளும் உபகரணங்களும் கைவசம் இருந்தபோதிலும் என்கவுண்ட்டர் நடத்துவதில் ஸ்பெஷலிஸ்டான சர்மாவிற்கு மட்டும் துப்பாக்கி சூடு பட்டிருக்கிறது. தீவிரவாதிகள் வசித்திருந்ததாகக் காவல்துறை கூறும் ஜாமிஆ நகரிலுள்ள எல்-18 வீட்டுக்குள் குர்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்த சர்மாதான் முதலில் நுழைந்துள்ளார். மற்ற காவல்துறையினரைப் போன்று குண்டு துளைக்காத ஆடை அணியாமல், மிக அனுபவம் மிக்க சர்மா வெறும் விற்பனையாளரைப் போன்று உடையணிந்து தீவிரவாதிகளின் முன்பு சென்று நின்றார் என்பதைக் குறித்தும் சந்தேகங்கள் வலுக்கின்றன.

என்கவுண்ட்டர் நடந்து கொண்டிருக்கும்போதே இரு தீவிரவாதிகள் இந்த வீட்டில் இருந்துத் தப்பிச் சென்றனர் எனக் காவல்துறை கூறுவதும் வலுவான சந்தேகத்திற்குரியதாகும். அதிகாலை மூன்று மணி முதல் இவ்வீடு இருக்கும் பிரதேசம் முழுவதும் அதிதீவிர காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. நான்காம் மாடியில் ஒரே ஒரு வாசல் மட்டுமே உடைய அந்த வீட்டிலிருந்து காவல்துறையினரின் இடையினூடே நுழைந்து இருவர் தப்பிச் செல்வது என்பது நடக்கவே முடியாத காரியமாகும்.

“தவ்கீப் என்ற முஹம்மது குரேஷிதான் டில்லி குண்டு வெடிப்புகளுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர்” எனக் காவல்துறை அடித்துக் கூறிக் கொண்டிருந்தது. ஆனால், என்கவுண்ட்டர் நாடகத்துக்குப் பின்னர், “துப்பாக்கிச் சூட்டுக்கு இரையான ஆதிஃப்தான் தலைமை ஏற்று நடத்தியவர்” என மாற்றிக் கூறுகிறது. குரேஷி என்பவரை ஆண்டுகணக்கில் கண்டவர் யாருமே இல்லை.

சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிஃபும் கைது செய்யப்பட்ட ஸெய்ஃபும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அசங்கடைச் சேர்ந்தவர்கள். இவர்கள், “ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிப்பதற்காகவே டில்லி சென்றனர்” என அவ்விருவரின் குடும்பத்தினரும் ஊர் மக்களும் கூறுகின்றனர். என்கவுண்ட்டர் நடந்த நாளிற்கு முந்தைய தினம் இரவு, ஜாமிஆ நகரிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரைக் காவல்துறை கஸ்டடியில் எடுத்திருந்ததாகவும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தின. கொல்லப்பட்டவர்கள் அந்த மூவர்தாமோ? என்றொரு சந்தேகமும் நிலவி வருகின்றது. இதனைக் காவல்துறை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், கைது செய்யப் பட்டிருக்கும் ஸெய்ஃபிடம் வழக்கம்போல் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்காமல், நீதிமன்றத்தில் அவரை சாட்சி கூறச் சொன்னால் அதிர வைக்கும் உண்மைகள் வெளிவரக் கூடும்.

“ஒரு ஏ.கே 47 துப்பாக்கியும் இரு கைத்துப்பாகிகளும் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக”க் காவல்துறை கூறியுள்ளது. காவல்துறை கூறியுள்ளபடி, இரு பக்கமிருந்தும் கடின போராட்டத்திற்குப் பின்னரே தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனில், இரு பக்கமிருந்தும் நீண்ட நேரத்திற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் கொல்லப் பட்டவர்கள் ஏ.கே 47 துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் எட்டு முறை சுடும் சக்தியுள்ள இரு கைத்துப்பாக்கிகளை மட்டுமே உபயோகித்துக் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனக் கூறுவது எவ்வகையிலும் நம்பும் படியானது அல்ல. ஒரு பக்கமிருந்து மட்டுமே இடைவெளி விட்டுத் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதாகவும் ஆதிஃபையும் சாஜிதையும் ஏற்கனவே கொன்று, உடல்களை அவ்வீட்டில் கொண்டு வந்து போட்டப் பின்னர் என்கவுண்ட்டர் கதை காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப் பட்டதாகவும் ஜாமிஆ நகர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

என்கவுண்ட்டருக்கு இடையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இன்ஸ்பெக்டர் சர்மாவின் கொலையிலும் முடிச்சவிழ்க்கப்படாத பல சந்தேகங்கள் நிறைந்துள்ளன. குர்தா,பைஜாமா தரித்த வேடத்தில் தீவிரவாதிகள் வசித்திருந்த கட்டிடத்தினுள் நுழைந்த சர்மா, குண்டடிபட்டுத் திரும்பி வரும் வேளையில் கருநீல நிறத்தில் பேண்டும் வெள்ளை நிறச் சட்டையும் அணிந்தவராகக் காட்சி தருகிறார். “தீவிரவாதிகள் தங்கியிருந்த பிளாட்டின் கதவைத் தட்டிய சர்மாவைக் கதவைத் திறந்தவுடன் தீவிரவாதிகள் சுட்டனர்” என்று காவல்துறை கூறுவதை, “கட்டுக்கதை” என்று வெளியே கொண்டுவரும் சர்மாவின் உடலின் முன்பக்கம் எவ்விதக் காயமும் இல்லாதது மறுக்கிறது. அவருக்குப் பின்பக்கதிலிருந்தே இரத்தம் வருகிறது. இதனைக் குறித்த விரிவான அலசலைப் பெட்டிச் செய்தியில் காண்க.

சர்மாவைச் சுட்டது யார்? காவல்துறையை உலுக்கும் புகைப்படம்!

ஜாமிஆ நகரில் நடந்த என்கவுண்ட்டரில், என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் சர்மாவைக் கொன்றது யார்? அவர் சாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார்?

“குர்தா மற்றும் பைஜாமா உடையணிந்து தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி போன்ற வேடத்தில் சென்று தீவிரவாதிகள் வசித்திருந்த வீட்டுக் கதவைத் தட்டிய சர்மாவை, கதவைத் திறந்து நிமிட நேரத்தில் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக” காவல்துறை கூறும் வாதத்தைக் காவல்துறையே வெளியிட்ட மேற்காணும் புகைப்படம் அப்பட்டமான பொய் எனச் சான்று பகர்கின்றது.

காவல்துறை வெளியிட்ட இப்புகைபடத்தில், தீவிரவாதிகள் வசித்திருந்த வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு பெற்றுக் காயமடைந்த சர்மாவை, சக அதிகாரிகள் தாங்கிப் பிடித்து வருகின்றனர். ஆனால், சர்மாவின் முன்பக்கம் எங்கும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இல்லை என்பதை இந்தப் புகைப்படத்திலிருந்தே தெளிவாக அறிந்துக் கொள்ள இயலும். காவல்துறை கூறுவது போன்று கதவைத் திறந்த நிமிடத்திலேயே திவிரவாதிகள் சர்மாவைச் சுட்டிருந்தால், துப்பாக்கிச் சூடு அவரின் முன்பக்கத்தில் எங்காவதுதான் பட்டிருக்க வேன்டும்.

வெள்ளைச் சட்டை போட்டிருக்கும் சர்மாவின் முன்புறம் எங்குமே துப்பாக்கிச் சூடு பட்ட அடையாளமோ ஒரு சிறு இரத்தக் கறையோ காணப்படவில்லை. அதே சமயம் சர்மாவின் இடது கையைத் தாங்கி அழைத்து வரும் சக அதிகாரியின் சட்டையில் தெரியும் இரத்தக் கறையிலிருந்து, சர்மாவின் பின்பக்கமிருந்து இரத்தம் வெளியாகி இருப்பது தெளிவாகின்றது.

அவ்வாறெனில் சர்மாவின் பின்பக்கமிருந்துதான் யாரோ சுட்டிருக்க வேண்டும். குண்டு, அவரின் சக அதிகாரிகளின் துப்பாக்கிலிருந்து வெளியானதாகவே இருக்க முடியும். ஏனெனில், அவர் கதவைத் தட்டும் பொழுது அவரது பின்னால் அம்மாடியில் அவரின் சக அதிகாரிகள் அல்லாமல் வேறு யாரையும் காவல்துறை அங்கு அனுமதித்திருக்கவில்லை. AIIMS வெளியிட்ட முதல் அறிக்கையும் “சர்மா, பின்பக்கமிருந்து வெகு அருகாமையில் சுடப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கிறது.

மேலும், காவல்துறை கூறுவது போன்று சர்மா குர்தாவும் பைஜாமாவும் அணிந்திருக்கவில்லை என்பதும் புகைப்படத்தில் காணப்படும் சர்மா அணிந்திருக்கும் கடும்நீல நிற பேன்டும் வெள்ளைச் சட்டையும் காவல் துறையின் பொய்யை வெட்ட வெளிச்சமாக்குகிறது. தீவிரவாதிகளால் சுடப்பட்ட சர்மாவை வெளியே கொண்டுவருவதற்கு முன்பு, அவருடைய “குர்தா மற்றும் பைஜாமை வேடத்தைக்” கலைத்து, அவருக்குப் புகைப்படத்தில் தெரியும் உடையை நாங்கள் தான் அணிவித்து வெளியே கொண்டு வந்தோம் என்று ஒரு புதிய கதையைக் காவல்துறை கூறாது என நம்புவோம்.

சர்மா பணி செய்திருந்த காவல்துறையினுள் அவர்களிடையே நிலவி வந்த பகைமையே சர்மா கொலைக்குக் காரணம் என்ற ஒரு கருத்து ஏற்கெனவே வெளியாகியுள்ளது. டெல்லி காவல்துறை சிறப்புப்பிரிவிற்குத் தலைமை வகிக்கும் கர்ணால் சிங்கிற்கும் சர்மாவிற்கும் இடையே சுமூகமான தொடர்புகள் இல்லாமல் இருந்தது எனவும் சில மாஃபியா குழுக்களுடனான தொடர்பின் பெயரில் இவர்களிடையே பிரச்சனைகள் நிலவி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

நாட்டின் தலைநகரான டில்லி, போலி என்கவுண்ட்டர்களின் தலைநகராகவும் விளங்கியிருந்தது. சர்மா உட்பட பல காவல்துறை அதிகாரிகளுக்கு மறைமுகமாகப் பல அண்டர் வேல்ட் மாஃபியாக்களுடன் தொடர்பும் இதன் மூலம் பல கோடி சொத்துக்கள் அவர்கள் சேகரித்திருந்த விவரங்களும் இத்தகைய பணம் கொடுக்கல் வாங்கல்களில் காவல்துறையினருக்குள்ளேயே பிரச்சனைகள் நிலவி வந்ததும் நாடறிந்த விஷயமாகும்.

இதே ரீதியில், கடந்த 24.03.2008இல் மரணிக்கும் வரை மிகப் பெரிய என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மதிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் ஆபரேஷன் ஸ்க்வாட் துணை ஆணையர் ராஜ்பீர் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

போலி என்கவுண்ட்டர் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பீப்பிள் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ்(பி.யூ.சி.எல்) தலைமையிலான இந்தியன் முஸ்லிம் கோ-ஆர்டினேசன் கமிட்டியிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து, “சர்மாவின் உடலில் துளைத்தக் குண்டுகள் யாருடைய துப்பாக்கிக்குச் சொந்தமானவை என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து விவரங்களைப் பொதுவில் வெளியிட வேண்டும்” எனவும் “என்கவுண்ட்டரைக் குறித்து நீதிமன்ற விசாரணக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், “சர்மாவில் உடலில் குண்டுகள் எதுவும் இருக்கவில்லை” என அவர் உடலைப் பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்.

உடலில் நான்கு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும் அதில் இரண்டு மட்டுமே குண்டுகள் துளைத்தக் காயமாக இருக்கலாம் எனவும் மிக அண்மையில் இருந்து சுடப்பட்டதால் குண்டுகள் உடலில் தங்கியிராமல் மறுபக்கமாக வெளியேறியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுடப்பட்ட சர்மாவைத் தாங்கிப் பிடித்து வரும் புகைப்படத்தில் அவரது முன்பக்கம் எந்த ஒரு காயத்திற்கான அறிகுறியும் இல்லாத நிலையில், மருத்துவர் கூறியுள்ள தகவலிலும் சந்தேகங்கள் மிகைந்துள்ளன.

அஹமதாபாத் குண்டுவெடிப்புத் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ள அபூ பாஷிர்தான் ஜாமிஆ நகரில் தீவிரவாதிகள் தலைமறைவாக இருக்கும் துப்புக் கொடுத்ததாகக் காவல்துறை முதலில் கூறியிருந்தது. ஆனால், பின்னர் அதனை அவர்களே மறுத்தனர். “தங்களின் தீவிரமான விசாரணையின் பலனாகவே தீவிரவாதிகளைப் பிடிக்க முடிந்ததாகவும் முன்னர் கைது செய்யப்பட்ட அபூ பாஷிருக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” எனவும் டில்லி காவல்துறை கமிஷனர் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.

காவல்துறை கதைகளைக் கேள்விக்குட்படுத்தும் மேலும் அதிக ஆதாரங்கள்.

ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் கொலையில் காவல்துறை கூறுபவை அனைத்தும் கட்டுக்கதைகளே என்பதற்கான மேலும் அதிகமான சான்றுகள் வெளியாகி உள்ளன. தீவிரவாதிகளின் லஷ்கரே தொய்பா தொடர்புகளைக் குறித்தான புதுப்புதுக் கதைகளைக் காவல்துறைக் கூறும் போதெல்லாம் தேசிய ஊடகங்கள் அவை ஒவ்வொன்றின் மீதும் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. கொலை செய்யப்பட்ட ஆதிஃப், ஸாஜித், கைது செய்யப்பட்ட ஸெய்ஃப், ஸிஷான் ஆகியோர் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழக மாணவர்கள் என்பதும் ஜாமிஆப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மற்ற மாணவர்களைப் போன்று சாதாரண வாழ்க்கை அவர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

டில்லி, அஹமதாபாத் குண்டு வெடிப்புகளின் மூலகர்த்தா என இப்போது காவல்துறை கூறும் ஆதிஃப், ஜாமிஆ மில்லியாவில் மனித வள மேம்பாடு கோர்ஸ் படிப்பதற்காக டில்லி வந்தவராவார். டில்லி காவல்துறை கமிஷனர் இவரைத் தீவிரவாதி என்பதற்கான ஆதாரமாக, ஆதிஃப் தவறான முகவரி கொடுத்து வீடு எடுத்திருந்ததாகக் கூறுகிறார்.

ஆனால், இக்குற்றச்சாட்டு பச்சைப் பொய் எனக் காவல்துறையின் கைவசம் உள்ள சான்றுகளே தெளிவு படுத்துகின்றன. ஜாமிஆ நகரில் வீடு எடுத்தப் பின்னர், காவல்துறையின் பரிசீலனைச் சான்றிதழுக்காக ஆதிஃப் ஆதாரங்கள் நல்கியது அஹமதாபாத் குண்டு வெடிப்புகள் நடந்த மூன்றாவது வாரத்திலாகும். அதாவது ஆகஸ்டு 15 அன்று அவர் தன்னைக் குறித்தத் தகவல்களையும் உத்தரப் பிரதேசத்திலுள்ள தன் வீட்டின் சரியான முகவரியையும் வீட்டுச் சொந்தக் காரரிடம் கொடுத்தார். ஆதிஃப் வசித்திருந்த, L18 வீட்டைப் பராமரிக்கும் அப்துல் ரஹ்மான் என்பவர், ஆகஸ்ட் 20 அன்று அந்த ஆதாரங்களை ஜாமிஆ நகர் காவல்நிலையத்தில் சமர்ப்பிக்கவும் செய்தார். ஆகஸ்ட் 25 அன்று, வாடகை ஒப்புதல் நோட்டரி முன்னிலையில் இருவரும் கையெழுத்தும் போட்டனர்.

“பவாய்லாத்பூர், ஸராய்மீர் பி எஸ், அஸங்கட் மாவட்டம், உத்தரப்பிரதேசம்” என்ற தனது உண்மையான வீட்டு விலாசத்தையே வாடகை ஒப்பந்தத்தில் ஆதிஃப் தனது முகவரியாகக் கொடுத்திருந்தார். முகவரிக்கு ஆதாரமாகத் தனது ஓட்டுனர் உரிமத்தையும் அவர் கொடுத்திருந்தார். இதற்காக ஆதிஃப் நேரடியாக காவல்நிலையத்தில் ஆஜராகவும்செய்தார்.

“ஆதிஃப் ஒரு தீவிரவாதியாகவும் அஹமதாபாத் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவருமாக இருந்திருந்தால் தனது உண்மையான முகவரியைக் காவல்துறைக்கு அவர் கொடுத்திருப்பாரா? தனது உண்மையான வீட்டு முகவரியோடு டில்லியில் வசிப்பதற்காக வாடகை வீடு எடுத்திருப்பாரா? ஆதிஃபும் அவரின் நண்பர்களும் சாதாரண மாணவர்களைப் போலவே அங்கு வசித்திருந்ததாகவும் “மடிக்கணினியும் மற்றும் புத்தகங்களுடன் எப்பொழுதும் படிப்பிலேயே கவனமாக இருந்தனர்” எனவும் பக்கத்து வீட்டுக்காரரான எ.மொய்து கூறுகிறார்.

கனாட் ப்ளேசிலுள்ள பாரஹ்கம்ப ரோட்டில் குண்டு வைத்ததாகக் காவல்துறை கூறும் ஸீஷான் அஹ்மத், ஐ.ஐ.பி.எம்மில் படிக்கும் மாணவராவார். தனது மதிப்பெண்ணை அதிகப்படுத்துவதற்காக, ஸீஷான் இரண்டு முறை மீண்டும் தேர்வு எழுதியதாக ஐ.ஐ.பி.எம் டீன் அரிந்தாம் சௌத்ரி உறுதிப் படுத்துகின்றார்.

“ஸீஷான், ஆதிஃபோடு உடன் வசித்திருந்த தீவிரவாதி” என்பதே காவல்துறையின் வாதம். ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்கு, “ஆதிஃப் நிரபராதி” என்று ஸீஷான் பேட்டி அளித்த வேளையில்தான் காவல்துறை இவரைக் கைது செய்தது.

ஸீஷான் தீவிரவாதி எனில், காவல்துறையினரின் என்கவுண்ட்டரிலிருந்து தொலைகாட்சியின் ஸ்டுடியோவிற்கா தப்பி ஓடி இருப்பார்?. கமர்சியல் லாவில் 87 சதவீதம், ஆர்கனைஸேசனல் பிகேவியரில் 92 சதவீதம் மதிப்பெண்கள் ஸீஷான் பெற்றுள்ளார். முதல் இரு செமஸ்டர்களில் 64 சதவீத மதிப்பெண்ணும் மூன்றாம் செமஸ்டரில் 60 சதவீத ஓவரால் மதிப்பெண்ணும் இவர் பெற்றிருந்தார் என அரிந்தாம் சௌத்ரி கூறுகின்றார். இது, ஸீஷான் படிப்பதற்காகவே டில்லியில் வீடு எடுத்து வசித்திருந்தார் என்பதைத் தெளிவாக்குகின்றது..

நடந்த குண்டு வெடிப்புகளைச் சிமியின் மீது பகீரத பிரயத்தனப்பட்டு கட்டிவைக்க முயலும் பொழுது, இவை அனைத்தினூடாக எளிதில் அனைவரும் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றனர். 2001இல் தடை செய்யப்பட்ட சிமியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கோ, அது சட்டவிரோதமாகவோ, தேசவிரோதமாகவோ செயல்படுவதற்கான ஒரு சிறு ஆதாரம் கூட கடந்த 7 ஆண்டு காலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத மத்திய அரசைக் கடுமையாகச் சாடி, சிமியின் மீதான தடையை நீக்கிய டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மித்தலின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் அடுத்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரையே நீட்டித்து வைத்துள்ளது.

இக்காலவரம்பிற்குள் சிமியின் மீதான குற்றச்சாட்டைக் குறைந்தபட்சம் வலுப்படுத்தும் விதமாக ஏதாவது ஒரு துரும்பையாவது மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அளிக்கவில்லை எனில், டில்லி உயர்நீதிமன்றத் தடை நீக்க உத்தரவு அமுலில் வரும் நிலை உருவாகலாம். அதாவது சிமியின் மீதான தடை நீங்குவது மட்டுமின்றி, கடந்த 7 ஆண்டு காலமாக சிமியைத் தடை செய்து வைத்திருந்த மத்திய அரசின் செயல்பாடு சட்டவிரோதமானது என்னும் நிலை ஏற்படும்.

சிமியின் மீதான தடையினை நீட்டிக்க சங்கபரிவாரம் எவ்வளவு அதிகம் விரும்புகின்றதோ அதனைவிட மேலாக, என்ன விலை கொடுத்தாவது தடை நீக்கத்தைத் தடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. ஆகவேதான் கடந்த 7 ஆண்டு காலமாக சிமியின் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு சிறு துரும்பு ஆதாரம் கூட இல்லாத நிலையில், பிடிக்கப்படும் அப்பாவிகளையெல்லாம் சிமி உறுப்பினர்கள் என்ற முத்திரையுடன் குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்தி ஊடகங்களுக்கு அரசு செய்தி வழங்கி வருகிறது.

நாட்டைச் சுடுகாடாக்கும் தீவிரவாத குண்டு வெடிப்புகளை வெறும் 12 முஸ்லிம்களின் மீது சுமத்தி விட்டுத் தப்ப முயலும் காங்கிரஸ் அரசு, இதன் மூலம் உண்மையான தீவிரவாதிகள் தப்புவதற்கு உதவுவதோடு நாட்டை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ள முயல்கின்றது.

உண்மையான தீவிரவாதிகள் கண்டு பிடிக்கப் படவேண்டும். அவர்களை மக்கள் மத்தியில் மிகக் கடுமையான முறையில் தண்டிக்கப் பட வேண்டும். அல்லாமல் அப்பாவி முஸ்லிம்களைத் தொடர்ந்து பலிகடாவாக்கிக் கொண்டிருந்தால், தப்பியிருக்கும் உண்மையான தீவிரவாதிகளால் நாட்டுக்கு மென்மேலும் ஆபத்துதான்.

குண்டு வெடிப்புகளால் நெருக்கடியில் இருக்கும் பாட்டீலையும் 7 ஆண்டு காலமாகத் தடை செய்யப்படுள்ள சிமியின் சட்டவிரோதச் செயல்பாடுகள் என்று சொல்லப் படுவதற்கு ஆதாரமாக உறுதியான ஒற்றைச் சான்றைக் கூடச் சமர்ப்பிக்க இயலாத மத்திய அரசையும் நெருக்கடியிலிருந்து மீட்டு, எதிர்கட்சிகளிலிருந்து நாட்டு மக்கள் வரை அனைவராலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி விடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, கொல்லப்பட்டு விட்டவர்களின் தலைமீது நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் கட்டி வைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்ற கீழ்த்தரமான அணுகுமுறையை மத்திய காங்கிரஸ் அரசு கடைபிடிக்க முடிவெடுத்திருந்தால் அது காங்கிரஸின் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைப்பது மட்டுமல்லாது, இப்பொழுதும் நாட்டில் சுதந்திரமாக உலா வரும் குண்டுவெடிப்பின் உண்மையான மூலகர்த்தாக்களால் ஆபத்துத் தொடரும் என்பதையும் அதனால் உலக நாடுகளிடையே பன்மைத்துவத்திலும் ஜனநாயகத்திலும் முன்மாதிரியாக நிற்கும் இந்திய பூகண்டத்தையும் சிதறடிக்கும் என்பதையும் அரசுக்கு ஓர் முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

***

தொடர்புடைய செய்திகள் :

புதுடெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்,

சிமி மீதான தடை நீக்கம் – டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அஹமதாபாத் குண்டுவெடிப்பு: சிபிஐ விசாரணை கோரி ஏ.ஐ.எம்.எம்.எம்!,

குண்டு வெடிப்புகள் கூறும் இரண்டு செய்திகள்!

 

 

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.