இந்திய முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள் – அறிக்கை

புதுதில்லி: இந்திய முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் இவைகளில் பிற சமுதாயத்தினரை விட மிகவும் பின்தங்கி இருப்பதாகப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்த ஓய்வுபெற்ற தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி திரு ரஜிந்தர் ஸச்சார் தலைமையிலான குழு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையை இன்று பிரதமரின் இல்லத்தில் திரு. ஸச்சார் பிரதமரிடம் அளித்தார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பிரதமர் “இது உண்மைகளின் அடிப்படையிலான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தயாரிக்கப்பட்ட நம்பகத்தன்மையுடைய அறிக்கை” என்று தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்களிடையே அதிர்ச்சி தரத்தக்க வகையில் காணப்படும் மிகக்குறைந்த கல்வியறிவால் அவர்கள் பிற சமுதாயத்தினருடன் போட்டி போட முடியாமல் சமூகப் பொருளாதார அளவில், வேலை வாய்ப்புகளில் மிகப் பின்தங்கி இருப்பதை முடிந்த வரை நிறைவு செய்யும் அரசின் உறுதியை நிலை நாட்டி அவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்யவே இந்த அறிக்கைக்கு ஆணையிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 94.9 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பதாகவும், 60.2 விழுக்காட்டினர் சொந்தமாக ஒரு வயல் கூட இல்லாத நிலையில் இருப்பதாகவும், வெறும் 2.1 விழுக்காட்டினர் மட்டுமே சொந்தமாக டிராக்டர் வைத்திருப்பதாகவும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே நீரிறைக்கும் கைப்பம்புகள் வைத்திருப்பதாகவும், 3.2 விழுக்காட்டினருக்கு மட்டுமே மானியத்துடன் கூடிய கடன் கிடைப்பதாகவும், 1.9 விழுக்காட்டினருக்கு மட்டுமே மானியத்துடன் கூடிய விலையில் தானியங்கள் கிடைப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் இவ்வளவு பரிதாப நிலையில் இருக்கும் முஸ்லிம்கள் நகர்ப்புறத்திலும் அவ்வளவு சொல்லிக் கொள்வது போல இல்லை. நகர்ப்புறங்களில் 3.1 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 0.8 விழுக்காட்டினரும் மட்டுமே பட்டதாரிகளாக இச்சமூகத்தில் உள்ளனர் 60 விழுக்காட்டினர் பள்ளிகளில் மழைக்குக் கூட ஒதுங்கியதில்லை (வறுமை காரணமாக) என்றும் இந்த அறிக்கையில் அதிர்ச்சியான தகவல்கள் உள்ளன.

இந்தியச் சமூகத்தில் ஒரு பிரிவினரான இந்திய முஸ்லிம்களின் அவல நிலையை மேம்படுத்த அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து வர இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த அறிக்கை சிறுபான்மையினரின் வாக்குகளை அறுவடை செய்ய காங்கிரஸ் செய்யும் நாடகம் என்றும், இதற்கு முன் ஆட்சியில் இருந்த போது முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யாத காங்கிரஸ் தற்போது வாக்குவங்கியைக் குறி வைத்தே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் எதிர்க்கட்சி பாஜக பொதுச்செயலாளர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்த அறிக்கைக்கு எதிரான கருத்துகளை நாடாளுமன்றத்தில் பாஜக தெரிவிக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

14 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்திய நாட்டில் ஒருவர்கூட உளவுத்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததும், இந்தியச்சிறைகளில் அதிக அளவில் முஸ்லிம்களே வாடி வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இதை வாசித்தீர்களா? :   ஆர்.டி.எக்ஸ் + அமோனியம் நைட்ரேட் = சாத்வீ (துறவி)