இடதுசாரி தலைவர் பன்சாரே படுகொலை வழக்கு- இந்துத்துவா தீவிரவாதி கைது

மும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் சமீர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி மர்ம நபர்களால் பன்சாரே சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த நிலையில் பிப்ரவரி 20-ந் தேதி சிகிச்சை பலனின்றி பன்சாரே உயிரிழந்தார்.

பன்சாரே படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பன்சாரே குடும்பத்தினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் பன்சாரே படுகொலையில் முக்கிய குற்றவாளியான சமீர் கெய்க்வாட் என்ற இந்துத்துவா தீவிரவாதி போலீசில் சிக்கியிருக்கிறார். இது குறித்து சிறப்பு புலனாய்வு படையின் விசாரணை அதிகாரி சஞ்சய் குமார் வர்மா கூறுகையில், 1998 ஆம் ஆண்டு முதல் சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவா அமைப்பில் சமீர் கெய்க்வாட், அவரது குடும்பத்தினர் உறுப்பினராக உள்ளனர். தொலைபேசி தொடர்புகளை கண்காணித்து பின்னர் சமீர் கெய்க்வாட்டை சுற்றி வளைத்து கைது செய்துள்ளோம் என்றார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமீர் கெய்க்வாட் வரும் 23-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளார்.

நன்றி: தட்ஸ் தமிழ் (18-09-2015)

இப் படுகொலையைச் செய்தவர் பயங்கரவாதி என்று தெரிந்தும், அவரை Activist என்றே பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பிட்டு வரும் வேளையில், “இந்துத்துவ தீவிரவாதி” என்று குறிப்பிடும் தட்ஸ்தமிழில் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது.

இதை வாசித்தீர்களா? :   மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்!