இறைவன் ஆணா? பெண்ணா?

Share this:

ஐயம்: இறைவன் ஆணா? பெண்ணா? – மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj

தெளிவு:
இஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன!

அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்” (அல்குர்ஆன் 1:2).
தீர்ப்பு நாளின் அரசன்” (அல்குர்ஆன் 1:4).
அரசுகளின் அரசன்” (அல்குர்ஆன் 3:26).
மனிதர்களின் அரசன்” (அல்குர் ஆன் 114:2).
நானே (நித்திய) அரசன்; பூமி(யை ஆண்ட) அரசர்கள் எங்கே?” என்று அல்லாஹ் கேட்பான் (நபிமொழி-புகாரி 6519).

அகிலங்களைப் படைத்து, இரட்சித்து ஆட்சியதிகாரம் செய்யும் இறைவன், தன்னை “இறைவன்” என்றும் “அரசன்” என்றும் தன் மறையில் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். நபிமொழிகளின் சொல்லாட்சிகள் சிலவற்றிலும் இறைவன், ‘அரசன்’ எனக் குறிப்பிடப்படுகின்றான். நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியான “இறைவன்” என்கிற சொல்லிலும் ஆண் பால் உள்ளது!

இறைவன் உருவகமாக:
நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது (அல்குர்ஆன் 2:115).
அவன் பார்ப்பவன்; செவியுறுபவன் (அல்குர் ஆன் 4:58).
அல்லாஹ்வின் இரு கைகள் விரிக்கப்பட்டே இருக்கின்றன (அல்குர்ஆன் 5:64).
அல்லாஹ் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான்!” (நபிமொழி-முஸ்லிம் 131).
இறைவன் சிரித்துவிட்டான்” (நபிமொழி-புகாரி 6573).

மேலும், இறைவன் பார்க்கிறான், கேட்கிறான், பேசுகிறான்; அவன் இரக்கமுள்ளவன், கருணையுள்ளவன், பேரறிவாளன், விருப்பு, வெறுப்பு உள்ளவன் போன்ற இறைவனின் தன்மைகள் மனிதர்களுள் ஆண்களை ஒத்து இருக்கின்றன. மேலும், இறைமறைக்கும் நபிமொழிக்கும் பொதுவான அரபு மொழியில் இறைவன் ஆண் பாலாகக் குறிக்கப்படுகின்றான்.

எனினும்,
மனிதர்களின் பார்வை, செவிப்புலன், பேச்சு, அறிவு, கருணை, விருப்பு, வெறுப்பு ஆகியன குறிப்பிட்ட எல்லைவரை/வயதுவரை வரையறைக்கு உட்பட்டவை; இறைவனுக்கு அவ்வாறன்று என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை.

இறைவன் ஆண் என்றால் அவனுக்குப் பெண் துணை அவசியமல்லவா? என்கிற கேள்வி இங்கு எழலாம்.

இது நியாயமானக் கேள்வியாக இருந்தாலும், இக்கேள்விக்கு, இறைமறையின் 112வது அத்தியாயத்தில் விளக்கம் உள்ளது.

112:1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே.

112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இறைவனின் உருவகம், உணர்வுகள் – குணம் – பண்பு இவற்றை மனிதனை ஒத்து இறைமறையும் நபிமொழிகளும் விளக்கினாலும், மனிதன் தேவையுள்ளவனாகவும், இறைவன் தேவையற்றவனாகவும் இருப்பதில் மனிதத் தன்மையும் இறைத் தன்மையும் வேறுபட்டு விடுகின்றன! இறைவன் நித்திய ஜீவன்! ஊன் உறக்கம் என அவனுக்கு எவ்விதத் தேவையுமில்லை! அதுபோல் இறைவன் ஆண் என்பதால் பெண் துணையும் அவனுக்குத் தேவையற்றுப் போய்விடுகிறது!

குல் ஹுவல்லாஹூ அஹத் – அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக!(112:1)

அவன்” என்பதைக் குறிப்பிட அரபு மொழியில் “ஹுவ” என்ற சொல் பயன்படுத்தப்படும். இறைவன் தன்னைப்பற்றிக் கூறும்போது “ஹுவ – அவன்” என்றே சொல்லிக்கொள்கிறான். தமிழில் “அவன்” என்ற வாசகம் ஆண் பாலினத்தைக் குறித்து நிற்பதால் இறைவன் என்பவன் ஆண் பாலினம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.