கண்படுதல் / கண்ணேறு / திருஷ்டி உண்மையா?

கேள்வி: கண்படுதலைக் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டம் என்ன? அதற்கு பரிகாரமாக முட்டை போன்ற பொருள்களை தலையில் ஓதி சுற்றி போடலாமா?


பதில்:


கண்படுதல் உண்டு என்பதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்படுதலைக் குறித்து மிகுந்த கவனமுடன் இருக்க எச்சரித்து சென்றுள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944, இப்னுமாஜா 3506)


கண்ணேறு உண்மையே…விதியை ஒன்று மீறிவிடும் என்றிருந்தால் அது கண்ணேறு தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதல்ஹா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.


ஆனால் கண்ணேறிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறோம் என்ற பெயரில் உப்பு, சூடம், முட்டை, படிகாரம், மிளகு போன்ற பொருள்களை தலையில் சுற்றி எறிவது, அவற்றை நெருப்பிலிடுவது போன்ற செயல்களுக்கு இஸ்லாத்தில் ஆதாரமில்லை.


‘அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)


விதியையே மாற்றி விடும் வலிமை வாய்ந்த கண்ணேறிலிருந்து பாதுகாப்பு பெற திருக்குர் ஆனின் 113 மற்று 114 ஆவது அத்தியாயங்களான “சூரத்துந்நாஸ் ” மற்றும் “சூரத்துல் ஃபலக்” என்ற இரு அத்தியாயங்களை ஓதிக் கொண்டால் போதுமானது. (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)


நபி(ஸல்) அவர்கள் ஷைத்தானை விட்டும் மனிதக் கண்ணேறைவிட்டும் (பல வகைகளில்) பாதுகாப்பு தேடி வந்தார்கள். ஆனால் சூரத்துல் பலக், சூரத்துல் நாஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்கள் இறங்கியதும் அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: திர்மிதி, இப்னுமாஜா

 

எனவே கண்ணேறாக இருந்தாலும் ஷைத்தானின் ஊசலாட்டமாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இரண்டு அத்தியாயங்களை ஓதி அல்லாஹ்விடம் பாதுகாவலைத் தேடுவதைத் தவிர வேறுவழியைத் தேடுவது தவறாகும்.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

இதை வாசித்தீர்களா? :   இறந்தவர்கள் பெயரால் குர்ஆன் ஓதலாமா?