கத்னா செய்வது கட்டாயக் கடமையா?

Share this:

ஐயம்:

அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் குழுவினருக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்,

*கத்னா செய்வது கட்டாயக் கடமையா என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கவும்.

– மின்னஞ்சல் வழியாக வாசகச் சகோதரர் முஹம்மது ரஃபீக்

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

*கத்னா எனும் விருத்த சேதனம் செய்வது இறையன்பர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழக்கமாகத் துவக்கப்பட்டது என ஆதாரப் பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறியமுடிகிறது!

(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் ‘கதூம்’ (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்).

முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் பெரும் பாட்டனாராகிய இப்ராஹீம் (அலை) அவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்றுவரை கத்னா செய்துகொள்வது வழக்கில் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்துக் குரைஷியரும் மதீனாப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவந்த யூதர்களும் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையோராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்று நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

கத்னா செய்தல் இஸ்லாத்தில் கட்டாயக் கடமை என்று சொல்வதற்கில்லை. கத்னா செய்யாமலும் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிமாக இருக்க முடியும். ஆயினும், கத்னா செய்வது வலியுறுத்தப்பட்ட ஓர் இயற்கை வழிமுறையாகும்.

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 5889, 5891, 6297, முஸ்லிம் 377, 378, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா மாலிக்)

அக்குள் முடி நீக்குதல், பாலின உறுப்புப் பகுதிகளின் முடி நீக்குதல், மீசையைக் கத்தரித்தல், நகங்களை வெட்டுதல் ஆகியவற்றை நாற்பது நாள்களுக்கு மேல் வளரவிடாமல் (முஸ்லிம் 379) நீக்குவதும் வெட்டுவதும் இயற்கை மரபு (இஸ்லாத்தின் மரபு) என இஸ்லாம் அறிவித்துள்ளது. எனவே, கத்னா எனும் விருத்த சேதனம் செய்தல் இயற்கை மரபாகும்! மற்றபடி கட்டாயம் கத்னா செய்தே ஆகவேண்டும் என்று இஸ்லாம் அறிவித்திடவில்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

oOo

பி.கு:

*கத்னா என்பது (خِتَانُ) எனும் அரபுச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீக்குவது எனப் பொருள்.

புகாரீ ஹதீஸ் 6298இன் அறிவிப்பாளர் அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள், “கதூம் என்பது (சிரியாவிலுள்ள) ஓர் இடத்தின் பெயராகும்” எனக் கூறுகிறார்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.