உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால் …?

Active Image

சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான முதற்பரிசினை வென்ற கட்டுரை – சத்தியமார்க்கம் நடுவர் குழு.

முன்னுரை

“கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்” (அல் குர்ஆன் 67 :1).

சிறந்த ஆட்சி என்பது உயர்ந்த ஒழுக்க ஆன்மீக அடிப்படையில் இறைக்கட்டளைகளின்படி அமைவதே ஆகும். இஸ்லாமிய ஆட்சி என்பது வெற்று வேதாந்தமல்ல; எதேச்சதிகாரமுமல்ல; பரம்பரைச்சொத்துமல்ல; முதலாளித்துவமுல்ல; ஜனநாயகமுமல்ல. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகாணும் தனித்தன்மை கொண்ட இறைவனின் ஆட்சி.


ஆட்சியும் அதிகாரமும் அல்லாஹுக்கே!

ஆட்சியும் அதிகாரமும் அரசனுக்கும் சொந்தமல்ல; மக்களுக்கும் சொந்தமல்ல; எல்லாம் வல்ல அல்லாஹுக்கே சொந்தம். அவனே விண்ணுக்கும் மண்ணுக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் ஆட்சியாளன். ஆண்டவனின் ஆட்சியை அமானிதமாகப் பெற்ற ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்களுக்குப் பணி செய்பவர்களே. அவர்களுக்கெனத் தனி அதிகாரம் இல்லை. இதுவே முறையான ஆட்சி.

ஆட்சியாளருக்குரிய பண்புகள்:

“… நாம் அவர்களுக்கு பூமியில் (ஆட்சி புரியும்) வாய்ப்பை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் செலுத்துவார்கள். மேலும் நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள் (அல்-குர்ஆன் 22 :41).

தக்வா : (இறையச்சம்)

ஆட்சித் தலைவர்கள் இறையச்சமுடையவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள்: “… ஓர் ஆட்சித் தலைவர், அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்துக் கேள்வி கேட்கப்படுவார்” (புகாரி-884; முஸ்லிம்-3408) மறுமையில் தனது செயல் குறித்து இறைவனிடம் கேள்வி உள்ளது என்ற இறையச்சம் உடைய தலைவரே மக்களை நேர்வழியில் செலுத்த முடியும்.

இறையச்சம் உடையவருக்கே இக்குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் (2:2) இறைவேதத்தின்படி அவர் மக்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

வழிகாட்டுதல்:

“மேலும் நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்டு (அதனால் ஏற்பட்ட இன்னல்களில்) அவர்கள் பொறுமை காத்தபோது நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்தே ஏற்படுத்திக் கொடுத்தோம்” (32:24).

தலைவர்கள் இறைவனின் கட்டளையைக் கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டுதல் வேண்டும். திருமறையிலும் ஹதீஸ்களிலும் ஆதாரம் காட்டி எந்த முடிவும் எடுக்க வேண்டும். வணக்க-வழிபாடு, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளாக இருந்தாலும் சரியே.

இஸ்லாமிய அறிவு:

இஸ்லாமிய ஆட்சியாளர் என்பவர், இஸ்லாம் பற்றிய முழுமையான அறிவுடையவராகவும் நாட்டிலிருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள், அஞ்ஞான சக்திகள், இஸ்லாத்தை வேரறுக்க விளையும் சக்திகள் ஆகிய அனைத்தையும் அறிந்தவராக இருக்க வேண்டும்.

எளிமை:

இஸ்லாமியத் தலைவர் என்பவர், இஸ்லாம் கூறும் அடிப்படையில் எளிய வாழ்க்கை வாழ்பவராகவும் உறுதியான நெஞ்சம் கொண்டவராகவும் எளிதில் பொதுமக்கள் அணுகக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.

இஜ்திஹாத்:

மாறிவரும் வாழ்க்கைக்குத் தகுந்தாற்போல் இஸ்லாமிய உலகை முன்னேற்றிக் கொண்டே செல்ல வேண்டும்.

மக்களின் உரிமைகள்:

ஆட்சித் தலைவருக்கு மக்கள் மீது ஏகோபித்த அதிகாரம் கிடையாது. அவர் மக்களுடைய பிரதிநிதி, இறைச்சட்டதின்முன் அனைவரும் சமமே. தலைவரும் மக்களும் இறைவனின் சட்டத்திற்குப் பணிந்து அவரவர் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இறைக்கட்டளைப்படி ஆட்சி செய்யும் தலைவருக்கு ஒத்துழைப்பது மக்கள் கடமை. இறைக்கட்டளைகளின்படி ஆட்சி செய்யும் ஓர் ஆட்சியாளரை எதிர்ப்பது, இறைவனை எதிர்ப்பதாகும்.

இதை வாசித்தீர்களா? :   ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

“ஆட்சியாளர் இறைவனின் சட்டத்தைப் பின்பற்றத் தவறினால், அதை மக்கள் ஆதரிக்கத் தேவையில்லை” என இறைத்தூதர் (ஸல்) தனது இறுதி உரையில் கூறியுள்ளார்கள். இதையே அவர்களுக்குப்பின் வந்த ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பாக விடுத்துள்ளார்கள்: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விட்டு விலகிச் சென்றால் பணிந்து நடப்பது உங்கள் மீது கடமையாகாது”.

ஓர் ஆட்சியாளரை மக்கள் தேர்ந்தெடுக்கும்போது குலம், கோத்திரம், பணம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட சிறந்த தனித் தகுதிகளான தக்வா, ஹிதாயத், இல்ம் ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டியதும், அவரைப் பின்பற்ற வேண்டியதும் மக்கள் கடமை.

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் … (4:59).

பரம்பரை அரசுரிமை, ஆயுள் முடியும்வரை அரசுரிமை ஆகியவை இஸ்லாத்தில் கிடையாது. ஆட்சி என்னும் அமானிதத்தைத் தவறாகப் பயன் படுத்தினால் அதை அவர்கள் இழக்கும் நிலை ஏற்படும்; அதை மாற்றும் அதிகாரம் மக்களுக்கு உண்டு.

நீதி:

“தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத அந்த மறுமை நாளில், ஏழு வகையினருக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிழல் தருவான். (அவர்களில் ஒருவர்) நீதிவழுவாத அரசன்” (புகாரி-6308; முஸ்லிம்-1712). இவ்வளவு பெரும் பாக்கியம் பெறக்கூடிய தலைவர்கள் ஹலாலை நிலைநிறுத்தி, ஹராமைத் தடுத்து, இறைவன் நமக்களித்த சட்டப் புத்தகமாம் குர்ஆனில் அருளியுள்ளபடி நீதியை நிலைநாட்டி குடிமக்களை நிறம், குலம், கொள்கை பேதமின்றிப் பாதுகாக்க வேண்டும்.

“… நீதியின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள் …” (4:135).

அல்லாஹ்வின் ஆட்சியை நிலை நாட்டும் இஸ்லாமிய அரசு எந்த மாற்றுச் சக்திக்கும் கட்டுப்படாத சுதந்திர அரசாக இருக்க வேண்டும்.

கலந்தாலோசித்தல்:

குடிமக்களுக்கும் அறிஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்குக் கருத்து தெரிவித்திடும் உரிமையும் கடமையும் உண்டு. கலீஃபாக்களின் ஆட்சியில் அறிஞர்களும் அனுபவம் முதிந்தவர்களும் சாதாரணக் குடிமக்களும் தங்கள் யோசனைகளை வழங்கியுள்ளனர். இது மார்க்கக் கட்டளையாகும். நமது நபிமார்களும் இதைப் பின்பற்றி வந்தனர் ஆலோசனை கேட்பதும் வழங்குவதும் இஸ்லாமியக் கடமை; ஈமானின் ஒரு பகுதி. இதையே நபி(ஸல்) அவர்களுக்கும் இறைவன் தன் திருமறையில் அறிவுறுத்துகின்றான்:

“… (நடைமுறைப் படுத்தவிருக்கும்) எல்லாச் செயல்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! முடிவு செய்து விட்டால் (முடிவை நிறைவேற்றித் தருவதற்கு) நீர் அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவீராக … (3:159).

உரிமையும் சுதந்திரமும்:

நம்பிக்கை, சுதந்திரம், பேச்சு, சிந்தனை, தொழில், உழைப்பு, பொருளீட்டல், விரும்பியதை ஏற்க, வேண்டாததை மறுக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு. இவை அனைத்தும் இறைவனின் சட்ட வரையரைக்குட்பட்டு இருக்க வேண்டும். இவை அனைத்தும் பிறருக்கு பயனுள்ள நன்மை பயக்கக் கூடிய விதத்தில் இருக்க வேண்டும். இல்லையேல் பிறருக்கு கஷ்டம்-குழப்பம் விளைவிக்காததாக இருக்க வேண்டும். பொதுப் பிரச்சினைகளில் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய இறைச் சட்டத்திற்குட்பட்ட பெரும்பான்மையோரின் கருத்தையே அமல் படுத்த வேண்டும்.

சமுதாய ஒற்றுமை:

நீங்கள் எல்லோரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள் …” (3:103).

முஸ்லிம்களிடையே பிளவு, பிரச்சினை ஏற்படும்போது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவற்றைக் களைந்து வேரறுத்து அன்பின் அடிப்படையில் சகோதரர்களாக வாழ வழி வகுக்க வேண்டும்.

இதை வாசித்தீர்களா? :   ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன ?

“.. உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்தான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள் …” (3:103).

அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தந்த மார்க்கச் சகோதரர்களுடன் மார்க்க விஷயங்களிலும் பொது விஷயங்களிலும் இணைந்து வாழ்ந்து, அடுத்தவரின் உரிமைகள், உடமைகள், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்து வாழ்வது ஒரு முஸ்லிமின் சமுதாயக் கடமையாகும்.

கல்வி:

முஸ்லிம்களையும் முஸ்லிம் உலகையும் மார்க்கக் கல்வியிலும் உலகக் கல்வியிலும் முன்னேற்றி வழிநடத்துபவர்களாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும்.

“… இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! என்று நபியே நீர் வேண்டுவீராக!” (20:114).

மனிதன் தனது அறிவுச் செல்வத்தை உண்மையான, தீவிரமான தொடரான முயற்சிகள் மூலம் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் அறிவு நிறைந்தவனாக விளங்க வேண்டும். கல்வி அறிவை முஸ்லிம்கள் அவசியம் தேடிப் பெற்றிட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. “கல்வியைத் தேடியவராக ஒரு வழியில் ஒருவர் நடந்தால் அவருக்கு அல்லாஹ் சொர்கத்தின் பாதையை இலகுவாக்குகிறான்” என்று நபி (ஸல்) கூறினார்கள் (முஸ்லிம்-4867).

ஜிஹாத்:

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள். இது அமைதியான மார்க்கமாகும். எதுவரை என்றால் மற்ற மதத்தவர்கள் முஸ்லிம்களின் மீதோ, இஸ்லாத்தின் மீதோ ஆக்கிரமிப்புச் செய்யாத வரை. அநீதி, முறையற்ற ஆசை, அடக்குமுறை, ஆணவம் உலகில் இருக்கும்வரை போர்களும் போராட்டங்களும் இருக்கும் எனக் குர்ஆன் கூறுகிறது. எனவே இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட, எல்லைகளைப் பாதுகாக்க ஜிஹாதிற்காக முஸ்லிம் சமுதாயத்தை தயார் நிலையில் ஆட்சியாளர்கள் வைத்திருக்க வேண்டும்.

“… நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத (திரைமறைவில் செயல்படும்) வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் நன்கறிவான் …” (8:60).

“… மக்களில் (நன்மை செய்யும் ) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரை அல்லாஹ் தடுக்காவிட்டால் உலகம் சீர் கெட்டுவிடும் …” (2:251).

முடிவுரை:

“மனிதர்களின் அரசன் அல்லாஹ் ஒருவனே!” (114:2).

இறைவனுக்குச் சொந்தமான ஆட்சியையும் அதிகாரத்தையும் அமானிதமாகக் கிடைக்கப் பெற்றவர், ஆட்சியதிகாரத்தை விரும்பிக் கேட்காதவருக்கு அது வழங்கப் பட்டால் அதற்காக அல்லாஹ் உதவி செய்வான் (புகாரி). அல்லாஹ்வின் உதவி கொண்டு குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் பின்பற்றி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தைச் செலுத்தி நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, நீதி-நேர்மையை நிலைநாட்டி, சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்து, உறுதி கொண்ட நெஞ்சுடன் எளிதில் யாவரும் அணுகக் கூடியவராகவும் மறுமையில் தனது பொறுப்புப் பற்றிக் கேள்வி கேட்கப்படும் எனும் இறையச்சத்துடன் சிறந்த வழிகாட்டியாக ஆட்சி புரிய வேண்டும். அவரே இஸ்லாமிய ஆட்சித் தலைவர். அவ்வாறான ஒரு தலைவரை உலக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்த வேண்டும். இஸ்லாமிய ஆட்சியை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.


ஆக்கம்: சகோதரி Mrs. பேகம். J


2008-09 -ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளைப் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.