பெண்களின் சமூகப்பொறுப்புகள்

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியருக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு

முன்னுரை:

இஸ்லாம் சுமத்தும் பொறுப்புகளும் கடமைகளும் ஆண்களுக்கு மட்டும் உரித்தானவையல்ல, பெண்களுக்கும் சமூகச் சேவையில் பங்களிப்பு உண்டு. ஆண்களைப் போலவே பெண்களும் உயரியதொரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டு இருக்கின்றார்கள். சில சிறப்பான துறைகளில் ஆண்களை விடப் பெண்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகின்றது.

சமூகத்தின் இன்னொரு அங்கமான பெண்களுக்கு வழி காட்ட வேண்டிய தேவை, அதாவது தான் சார்ந்த சமூகம் மட்டுமின்றி, ஏனைய சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் வேறுபாட்டை உணர்த்திக் காட்டுவதன் மூலம், இஸ்லாத்திற்கும் ஏனைய சமூகத்திற்கும் பாலம் அமைக்கும் பெரும் பணியைச் செய்யக் கூடியவர்களாக முஸ்லிம் பெண்கள் திகழ வேண்டியது கட்டாயமாகும்.


எங்கெல்லாம் முஸ்லிம் பெண்கள் சமூகமளிக்கின்றார்களோ, அங்கு சமூகச் சீர்திருத்தத்தைக் காண முடியும்.  வழிகாட்டியாக, கல்வியறிவு ஊட்டுபவளாக, தன் சொல்லாலும் செயலாலும் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கக்  கூடியவளாக அவள் இருப்பாள்.

ஒரு முஸ்லிம் பெண், தனது வழிகாட்டியாக குர்ஆனையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது அறிவுரைகளையும் தன் வாழ்வியல் நெறிகளாக ஏற்றுக் கொண்டு செயல்படுவதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிமுறைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் சீர்திருத்தக் கூடியது என்பதை முழுமையாக உணர்ந்தவளாகவும் இருக்க வேண்டும். வாழ்வின் இருண்ட பக்கங்களில் வசித்துக் கொண்டு, அறியாமைக் காலச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை இஸ்லாத்தின் தூதுத்துவத்தின் பக்கம் அழைப்பதன் மூலம், தன்னுடைய சமூகப் பொறுப்பை முழுமையாக உணர்ந்து செயல்படும் உன்னதமான பெண்மணியாக இறைவனால் கண்ணியமளிக்கப்படுகின்றவளாக மாற்றம் பெறுகின்றவளாக அவள் ஆகி விடுகின்றாள்.

வரலாற்றின் உன்னதமான பக்கங்களை நிறைத்துக் கொண்டிருக்கும் ஏராளமான சாதனைப் பெண்களைப் பற்றி குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் இன்றளவும் இயம்பிக் கொண்டிருப்பதை, அவர்களது சாதனைகளை உலகத்துப் பெண்களுக்கு உதாரணங்களாகக் காட்டி இருப்பதை நாம் வாசித்துப் பார்க்க முடியும்.

எவ்வாறு ஓர் ஆண் மகன் தனது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறும் பொழுது, இறைவனின் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி வைக்கப்படுவதைப் போலவே பெண்களும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறும் பொழுது குற்றம் சாட்டப்படுவார்கள்.

இஸ்லாத்தைப் பற்றியும் தன்னைப் படைத்தவனின் கட்டளைகள் பற்றியும் முழுமையாக அறிந்து வைத்துள்ள பெண், பெண்களின் சந்திப்புகளின் பொழுது அவற்றைத் தவறாது கடைபிடிக்கக் கூடியவளாகவும், அதனைப் பிற பெண்களுக்கு எடுத்தியம்பக் கூடியவளாகவும் அவள் இருப்பாள். இதன் மூலம் இஸ்லாத்தின் ஒழுக்க விழுமியங்களை பிற மக்களுக்கு எடுத்துக் கொண்டு செல்லும் பாலமாக அவள் இருப்பாள், இறைவனின் நெருக்கத்தை அதன் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியவளாகவும் அவள் இருப்பாள்.

பிறருடன் பழகும் விதமும், பிறரை நடத்தும் விதமும்


முஸ்லிம் பெண்கள் நன்னடத்தை கொண்டவர்களாக இருப்பதோடு, நட்புடன் பழகக் கூடியவர்களாகவும் இரக்கமனப்பான்மை மிக்கவர்களாகவும் கனிவாகப் பேசக் கூடியவர்களாகவும் இன்னும் சமயோசிதமாக நடக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும். மற்றவர்களோடு நட்புடன் பழகக் கூடியவர்களாக இருப்பதோடு, அதன்மூலம் மற்றவர்களும் இவர்களை நேசிக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறருடன் பழகும் விதத்தில் மிகச் சிறந்தவர்களாக இருந்தார்கள். (புகாரீ, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
(புகாரீ)

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அல்லது மறைந்து விட்ட எவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போன்று பிறரிடம் சிறந்த முறையில் நடந்து கொண்டதில்லை என்பதற்கு அனஸ் (ரலி) அவர்களின் நபிமொழிகளே சாட்சியங்களாகும். மேலும் அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பண்புநலன்கள் பற்றி இவ்வாறு மேலும் குறிப்பிடுகின்றார்கள் :

அனஸ்(ரலி) அறிவித்தார் :

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ”ச்சீ”” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் சொன்னதில்லை. (புகாரீ 6038)

இறைவன் தன்னுடைய இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் பண்புநலன்கள் இவ்வாறு இருந்ததென்றும் தன்னுடைய திருமறையின் வாயிலாக உலக மக்களுக்கு இவ்வாறு அறிவித்துத் தருகின்றான் :

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (அல்குர்ஆன் 68:4)

பிறரிடம் இஸ்லாமியப் பண்பாடுகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளும் பொழுது, இறைவன் அவரை கண்ணியமிக்கவனாக அல்லது கண்ணியமிக்கவளாக ஆக்கி வைக்கின்றான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அடிக்கடி ஞாபகமூட்டி வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

“பிறரிடம் யார் நல்ல முறையில் நடந்து கொள்கின்றாரோ, அவரே உங்களில் சிறந்தவர்” (புகாரீ, முஸ்லிம்)

“மறுமை நாளின் பொழுது எனக்கு மிகவும் பிரியத்திற்கும் சிநேகத்திற்கும் உரியவர்கள் யாரென்றால், உங்களில் நற்குணம் உள்ளவர்களே” என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்னும் “மறுமை நாளில் என்னுடைய வெறுப்பிற்குள்ளாகி எனக்கு மிகவும் தூரமாக்கப்படுகின்றவர்கள் பெருமையும் கர்வமும் கொண்டு திரிவோர்தாம்” என்றார்கள். (ஃபத்ஹுல் பாரி 10-456). முஸ்லிம் 15-78.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை நபித்தோழர்களும் நபித்தோழியரும் செவிமடுத்ததோடல்லாமல், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் அதனை எவ்வாறு நிறுவிக் காட்டினார்கள் என்பதனையும் அவர்கள் தங்கள் கண்களாலேயே கண்டார்கள்; பாடம் படித்துக் கொண்டார்கள். எனவே அவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது அறிவுரைகளுக்குக் கட்டுப்பட்டார்கள். இன்னும் அதனைத் தங்களது வாழ்க்கையிலே பேணி நடந்து முழு மனித சமூகத்திற்குமான முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியும் சென்றார்கள். அவர்கள்தாம் நேர்வழி பெற்ற முன்மாதிரிச் சமூகம். இன்றும் சரி.., என்றும் சரி.., அவர்களைப்போன்று வரலாறு படைத்த சமூகத்தை இனி வரலாற்றில் காண்பதரிது.

இதை வாசித்தீர்களா? :   திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!


இஸ்லாமும் அதன் கொள்கைகளும் பிற மதத்தவர்களுக்கு ஏடுகளின் மூலம் அறிமுகமானதைவிட, பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம் அறிமுகமாகி உள்ளன. பிற மதத்தவர்களுடன் பண்பாடான முறையில் பழகுவதன் மூலம், இஸ்லாத்தைப் பற்றியதோர் அறிமுகத்தை அவர்களுக்கு ஊட்ட முடிந்திருக்கின்றது, அதன் மூலம் இஸ்லாமிய வழிகாட்டலை அவர்களுக்குப் படிப்பினையாக வழங்க முடிந்திருக்கின்றது என்பது வரலாறு. இவ்வாறான பழக்கவழக்கங்கள் இஸ்லாத்தின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த உலகத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடித்திடும் நல்ல பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற மறுமை நாளிலே அவருக்கு நற்கூலியைப் பெற்றுத் தரக் காத்திருக்கின்றன. மனிதனின் நற்பண்புகளைக் காட்டிலும் வேறெதுவும் மறுமை நாளிலே அதிக எடை கொண்டதாக இருக்காது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மறுமை நாளிலே இறைநம்பிக்கை கொண்டவனின் எடைத் தட்டுகளில் உள்ளவைகளில் நற்பண்புகளைத் தவிர வேறெதுவும் அதிக எடை கொண்டதாக இருக்காது. நிச்சயமாக, வீணான பேச்சுக்களையும், கெட்ட பேச்சுக்களையும் பேசுவோர்களை அல்லாஹ் வெறுக்கின்றான்”.

பிறரிடம் பண்பாடான முறையில் நடந்து கொள்வது என்பது இறைநம்பிக்கையில் ஒரு பகுதியாக இருக்கின்றது என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது. யார் பிறரிடம் நற்பண்பாடுடன் நடக்கின்றார்களோ, அவர்கள் இறைநம்பிக்கையைப் பூரணமாகப் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் :

“இறைநம்பிக்கையாளர்களில் மிகச் சிறந்தவர் யரென்றால், பிறரிடம் நல்ல முறையில் பண்பாடாக நடந்து கொள்பவரே”.

இன்னும் யார் பிறரிடம் பண்பாடான முறையில் நடந்து கொள்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமும், அவனுடைய அடிமைகளிடும் பண்பாடான முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருப்பார். இதனை உஸாமா பின் ஷுரைக் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

எங்கள் தலையில் பறவைகள் வந்து உட்கார்ந்து விடும் அளவுக்கு (அமைதியாக) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் அமர்ந்திருந்தோம். எங்களில் எவரும் மற்றவரிடம் பேசவில்லை. (அப்பொழுது) சிலர் அங்கு வந்து, ”அல்லாஹ்வின் அடிமைகளில் அவனுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பிறரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளக் கூடியவரே” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அத்தபரானி (அல் கபீர்),1-181,183.

பிறரை நல்ல முறையில் நடத்துவது என்பது இஸ்லாமிய சட்டங்களின் சிறப்பு அம்சமாக அமைந்திருக்கின்றது. உலகத்தில் வாழக் கூடிய படைப்பினங்களிடம் எவரொருவர் நல்ல முறையில் நடந்து கொள்கின்றாரோ அவர், தன்னுடைய இறைவனிடத்திலும் நல்ல அடியானாகக் காட்சியளிப்பார். இன்னும் மறுமை நாளிலே அதிக எடை கொண்ட நன்மைகளாகப் பண்பாடுகளும் நல்ல பழக்க வழக்கங்களும் கணக்கிடப்படுகின்றன. இன்னும் அவை தொழுகை, நோன்பு ஆகிய இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைத் தூண்களுக்கு நிகராகவும் மிளிர்கின்றன.

திர்மிதியில் வந்துள்ளதொரு நபிமொழியில்,


“பிறரிடம் பண்பாடாக நடந்துகொள்ளக் கூடியதன் மூலம் பெறப்படக் கூடிய நன்மைகள் மறுமைநாளிலே, நோன்பு மற்றும் தொழுகைக்குச் சமமாக எடைத்தட்டுக்களில் வைத்து நிறுக்கப்படும்” என்றும் இன்னுமொரு நபிமொழியில், “பிறரிடம் பண்பாடாக நடந்து கொள்ளும் ஒருவர், பகல் வேளைகளில் நோன்பு வைத்து வருகின்ற மனிதரைப் போலவும் இரவு நேரம் நின்று வணங்கி வருகின்றவரைப் போலவும் சம அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியவராக இருப்பார்”. (திர்மிதி 3-245) அல்பிர் அல் இஸ்லாஹ், 61.

இத்தகைய நற்பண்பாடுகள் தனது தோழர்களிடத்தில் பசுமரத்தாணி போலப் பதிந்து விட வேண்டும் என்று அதனை அடிக்கடி வலியுறுத்திக் கூறக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

ஒருமுறை அபூதர்(ரலி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ”ஓ அபூதர்..! மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதும் ஆனால் எடைத்தராசில் அதிக கனமானதுமான இரண்டு நற்பண்புகளைப் பற்றி நான் கூறட்டுமா?” என வினவினார்கள். “நிச்சயமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களே கூறுங்கள்” என்றார் அபூதர் (ரலி) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நீங்கள் பிறரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அமைதியை நீட்டித்துக் கொள்ளுங்கள். எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ (அவன் மீது சத்தியமாக), மேற்கண்ட இரண்டைக்காட்டிலும் மிகச் சிறந்ததொன்றை மக்களில் எவரும் அடைந்து கொள்ள முடியாது” (அஹ்மத், 3-502)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனை இது :

அல்லாஹும்ம அஹ்ஸன்த கல்கி ஃப அஹ்ஸின் குல்கி

பொருள்: (யா அல்லாஹ்), எனது உடல் தோற்றத்தை நல்லமுறையில் சீராக்கி வைப்பாயாக, இன்னும் எனது பண்பாட்டையும், பழக்கவழக்கத்தைம் சீராக்கி வைப்பாயாக..! (அஹ்மத் 1-403)


குறிப்பு: [[என்னை அழகுறப் படைத்த இறைவா, என் குணங்களையும் அழகாக்கிக் கொடு]] என்பதே சரியான மொழியாக்கம். – சத்தியமார்க்கம்.காம்


இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தமது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் தமது பழக்க வழக்கங்களைப் பண்பாடான முறையில் ஆக்கி வைக்கும்படி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் இறைவனும் தனது திருமறையில் தனது தூதரைப் பற்றி இவ்வாறு புகழ்ந்துரைக்கின்றான்.

இதை வாசித்தீர்களா? :   இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன் 68:04)

இறைத்தூதர் (ஸல்) அவர்களோ ஒரு பண்பாட்டுப் பாசறை..! ஆனால், அவர்களே இறைவனிடம் தனக்கு நற்பண்புகளைத் தந்தருளுமாறு வேண்டி நிற்கின்றார்கள்.

நீங்கள் எவ்வளவு பெரிய நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் உங்களைத் தடம் பிறழச் செய்து விடும். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஷைத்தானின் பிடியில் வீழ்ந்து விடாமல் இருப்பதற்கும் பண்பாடுகள் பேணப்படுவதற்கும் இறைவனது அருளாசிகள் தேவைப்படுகின்றன. எனவே, தடம் மாறாத வாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள் அவசியப்படுகின்றன.

பண்பாடுகள் என்பதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நாம் அடைத்து வரையறுத்து விடமுடியாத அளவுக்கு மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டுடனும் அது பிண்ணிப் பிணைந்தது. வெட்கம், அமைதி, பொறுமை, நேர்த்தி, மன்னிப்பு, சகிப்புத்தன்மை, உண்மை, நேர்மை, நேரந்தவறாமை, தூய்மையான உள்ளம் என்று பண்பாடுகளின் வகைகளை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

மேற்கண்ட பண்பாடாக, ஒழுக்கமான, இறையச்சமுள்ள வாழ்க்கையை வாழக் கூடிய மக்களாக நாம் மாற வேண்டும்.

உண்மையே பேசுவோம்

ஒரு முஸ்லிம் பெண்மணி தன்னைச் சார்ந்த சமுதாயத்தவர் அனைவரிடமும் வாய்மையுடன் நடந்து கொள்வாள். ஏனென்றால் அவள் இஸ்லாமிய அடிப்படையின் கீழ் வாழக் கூடியவள்; அதனைக் கற்றறிந்தவள். அவள் கற்றறிந்திருக்கின்ற அவளது மார்க்கப் போதனைகள் யாவும் அவளை வாய்மையுடன் வாழவே பயிற்றுவித்திருக்கின்றன. அவ்வாறு வாழ்வதே அவளுக்கு உற்சாகம் அளிக்கின்றது. அதேநேரத்தில் பொய்யாக நடப்பதும் பேசுவதும் தீமையானது; கெட்டது. உண்மையில் வாய்மை என்பது நல்லவற்றை நோக்கிக் கொஞ்சங் கொஞ்சமாகக் கொண்டு சென்று, இறுதியில் சுவனத்தை அதன் பரிசாகப் பெற்றுத் தரும், ஆனால் பொய்மையோ தீமையின் பக்கம் அழைத்துச் சென்று இறுதி இருப்பிடத்தை நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்”. (புகாரீ 6094)

என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

எனவே, முஸ்லிம் பெண்ணானவள் எப்பொழுதும் வாய்மையாகப் பேசுவதை விரும்பக் கூடியவளாக இருக்க வேண்டும். இன்னும் அவள் தனது சொல்லாலும் செயலாலும் அதற்குச் சான்று பகர்பவளாக இருந்து, இறைவனுடைய விருப்பத்திற்குரிய நல்லடியாளாக மாற முயற்சி செய்ய வேண்டும். இதனை உண்மையில் அல்லாஹ்வை அஞ்சி நடக்கக் கூடிய – வாய்மையையே தன் வாழ்வில் கடைபிடித்து வருகின்ற பெண்மணிகளால் மட்டுமே சாதிக்க முடியும். அத்தகைய பெண்மணிகளைத் தான் அல்லாஹ் தனது பதிவேட்டில் வாய்மையாளர்கள் – சித்தீக்கீன் என்று பதிவும் செய்கின்றான்.

தவறான தகவல்கள் வேண்டாமே:


உண்மையான, சத்தியத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் பெண்ணானவளின் தோற்றமும் ஆளுமையும் பண்புகளும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றக் கூடியவள் என்று அவளை இனங்காட்டக் கூடியதாக இருக்கும். இத்தகைய பெண்மணிகள் தவறான தகவல்களைப் பரப்புவதில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதொன்று என்று அவர்கள் அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

“பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்”

இன்னும் தவறான சாட்சியங்கள் கூறுவதும், இஸ்லாத்தில் ஹராமாக – தடுக்கப்பட்டவைகளாக இருக்கின்றன. இது ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்புடையதல்ல. அது அவளது கண்ணியத்தைச் சீர்குலைத்து விடும்; அவளது நன்மதிப்பையும் கெடுத்து விடும்; அவளை திரித்துக் கூறுபவளாகப் பிறர் தூற்றுவர். இன்னும் சமூகத்தில் எந்தவித பெருமதியும் இல்லாதவளாகவும் மாறி விடுவாள் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்).

இறைவனுடைய அடியார்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஆண்களும், பெண்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து வித காரியங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

“அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக(ஒதுங்கி)ச் சென்றுவிடுவார்கள்”. (அல்குர்ஆன் 25:72)

இறைத்தூதர் (ஸல்) மிகப் பெரும் பாவங்களில் இறைவனுக்கு இணை வைத்தலையும், இன்னும் பெற்றோர்களுக்குக் கீழ்படியாமையையும் குறிப்பிட்டுக் கூறி இருக்கின்றார்கள். இன்னும் அவை குறித்து முஸ்லிம் சமுதாயத்தை எச்சரிக்கவும் செய்திருக்கின்றார்கள்.

 

முடிவுரை:

 

நம்முடைய சமூகப் பொறுப்புகளை உள்ளபடி உணர்ந்து, அனைவருடனும் அழகிய பண்பாடுகளோடு பழகி, உன்னதச் சமுதாயம் உருவாவதற்கு நாம் அனைவரும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்; அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.


ஆக்கம்: சகோதரி ஆயிஷத்து ஜமீலா.


2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரி ஆயிஷத்து ஜமீலா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.