இஸ்லாமியக் குடும்பச் சூழல்!


சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு


உலகத்தைப் படைத்து, பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற வல்ல இறைவன், தன் உயர்ந்த படைப்பாகிய மனித இனம், எண்ணற்ற புழுபூச்சியினங்கள், தாவரயினங்கள், பறவையினங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றை இவ்வுலகில் படைத்திருக்கின்றான். அனைத்துப் படைப்பினங்களும் இவ்வுலகில் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து அழிந்தாலும் ஆறறிவு கொண்ட மனித இனத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற சிறப்பும், உயர்வும் மற்ற இனங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மனித இனத்தை எடுத்துக் கொண்டால் இவ்வுலகில் எண்ணற்றப் பிரிவுகளாகவும் மதங்களை உடையவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், சிலைவணங்கிகள் மற்றும் நாத்திகர்கள் எனப் பல்வேறு கூட்டங்களாக வாழ்ந்து வந்தாலும் மற்ற மதங்களை, பிரிவுகளை ஒத்தக் குடும்பச் சூழலை ஏற்படுத்திக் கொள்ள இஸ்லாமிய மார்க்கம் அனுமதி மறுக்கின்றது. ஒருசில வரையறைகளை, கட்டளைகளை இஸ்லாம் கற்றுத்தந்து அதனடிப்படையில்தான் ஒரு முஸ்லிம், தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு அமைத்துக் கொண்டால்தான் ஈருலகிலும் நன்மைகளைப் பெற முடியும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனடிப்படையில் இஸ்லாமியக் குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வாறு இருக்கக் கூடாது? மற்றும் தற்பொழுது இஸ்லாமியக் குடும்பம் எவ்வாறெல்லாம் இருக்கின்றது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

அவன்தான் தன் அருளான மழையைப் பொழிவிப்பதற்கு முன்னர் குளிரும் காற்றை நற்செய்தியாக அனுப்புகிறான். அதைச் சூல்கொண்ட மேகங்களைச் சுமந்ததாக இறந்துபோன (வரண்ட) பூமிக்கு ஓட்டிச் சென்று அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கிறோம். அதிலிருந்தே காய்கனிகளை வெளிப் படுத்துகிறோம். இவ்வாறே (எளிதாக) இறந்தோரையும் வெளிப் படுத்துவோம். இதன் மூலம் நீங்கள் படிப்பினை பெறலாம்.

வளமான பூமி, தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிபடுத்துகிறது. கெட்ட களர் நிலமோ அற்பமானவற்றையே வெளிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 7: 57-58)

மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வளமான பூமியானது பயிர் பச்சைகளை வெளிப்படுத்துவதுபோல் நல்ல கணவன்மனைவி சேர்ந்து அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல் படுத்துவதன் மூலம் வளமான குடும்பத்தை உருவாக்க முடியும். இவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கும் மாற்றமாக நடப்பார்களேயானால் அதனால் வளம் குறைந்த குடும்பமே உருவாகும் என்பது எதார்த்தம்.

மக்கட்செல்வம்


அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான், உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருள்களிலிருந்து ஆகாரமும் அளிக்கின்றான் (அல்குர்ஆன் 16: 72)

திருமணமானதும் கணவன் மனைவியின் அடுத்த எதிர்பார்ப்பு மக்கட்பேறு ஆகும். கணவனும், மனைவியும் ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும் பொழுது அதன் பயனாக அந்த அன்பின் விளைவாகக் குழந்தை பிறக்கிறது. குழந்தைகளை ஓர் அருள் பேறாக, ரஹ்மத்தாக இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். குழந்தைகளைப் பேணி இஸ்லாம் சொல்லும் முறையில் வளர்த்திட வேண்டியது பெற்றோர் தம் தலையாய கடமையாகும். மேலும் குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் ஊட்டி உருவாக்குவதற்குப் பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள குழந்தைகளாக உருவாக்குதல் அவசியம்

குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது. அதன்படி குழந்தைகளை வளர்த்தால் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளரும். சிறுவயது முதலே அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுபோன்று உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்த வேண்டும். அந்த ஆசைக்கு அடித்தளங்களாக இறைதூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), லி (ரலி) மற்றும் நேர்வழிப் பெற்ற நபிதோழர்கள் பற்றிய சம்பவங்கள் குழந்தைகளின் உள்ளத்தைப் பண்படுத்த வல்ல.

குழந்தைகள் கேட்கக்கூடிய அறிவுப்பூர்வமான கேள்விகளாகட்டும் மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட கேள்விகளாகட்டும் அவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுத்து விளங்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும். பெற்றோருக்கு நன்றி உடையவராகவும், பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடியவர்களாவும் சிறுவர்களுக்கு அன்பு பாராட்டக்கூடியவர்களாகவும் மற்றும் ஒழுக்ககேடான செயல்களைத் தவிர்ந்து இருக்கவும் வலியுறுத்த வேண்டும்.

வெளியில் சென்று கல்வி கற்றுவிட்டு வீடு திரும்பக்கூடிய நம் பிள்ளைகளை அடிக்கடிக் கண்கானித்துக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் பிள்ளைகளுடன் படிக்கக்கூடிய, பழகக்கூடியவர்களின் நிலையையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தொழுகை விஷயத்தில் கண்டிப்போடு நடந்து கொள்ள வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடையும்பொழுது தொழுகையைத் தொழுமாறு அவர்களுக்கு ஏவுங்கள். அவர்கள் 10 வயதை அடையும் பொழுது (தொழுகையை விட்டுவிட்டால்) அவர்களை (லேசாக) அடியுங்கள்! (அப்பருவத்தில்) அவர்களுக்கு மத்தியில் படுக்கைகளைப் பிரித்து விடுங்கள் (நூல்: பூதாவுது.)

லுக்மான்(அலை) தன் மகனுக்கு, “மகனே தொழுகையை நிலை நாட்டுவாயாக (அல்குர்ஆன் 31: 17)

இதை வாசித்தீர்களா? :   கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு!

என்று அறிவுறுத்துவதை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு உணர்த்தியிருக்கிறான்.

நீங்கள் தொழும்பொழுது குழந்தைகளை உங்கள் பக்கத்தில் நிறுத்திக் கற்றுத் தர வேண்டும். மேலும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு  குர்ஆனுடைய சின்னஞ் சிறு சூராக்களையும் அன்றாடம் ஓதக்கூடிய துஆக்களையும் காலைமாலை தஸ்பீஹ்கள் முதலியவற்றையும் சிறுகச் சிறுகச் சொல்லிக் கொடுத்து, அதனை அவர்கள்தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோரின் கவனம்

குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் பேசும்போது நல்ல வார்த்தைகளைக் கொண்டே பேச வேண்டும். வீணான சண்டை சச்சரவுகள் இருக்க கூடாது. குழந்தைகள் கண் முன்னால் பெற்றோர் சண்டையில் ஈடுபடுவது, மோசமான வார்த்தைகளால் ஒருவரை யொருவர் திட்டிக் கொள்வது உள்ளிட்ட செயல்கள் குழந்தைகளின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். அதன் எதிரொலியாக அவர்களின் நடத்தையிலும் பெரிய மாற்றங்கள் உண்டாகும். அவ்வாறு ஏற்படும் எதிர்மறை மாற்றங்களால் குழந்தைகளுக்கு நிம்மதி பறிபோகும். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் நீங்கும். பள்ளிப் பாடங்களில் நாட்டம் குறைந்து, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களை எடுக்க ஆரம்பிப்பார்கள். பெற்றோரின் தவறான முன்னுதாரணத்தினாலும் அணுகு முறையாலும் மனம் வெறுத்து, நல்லவற்றில் ஈடுபாடு குறையும் சூழ்நிலையில் அவர்களுக்குக் கெட்ட சகவாசங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதனைக் கொண்டு கெட்டப் பழக்க வழக்கங்கள் இவர்களுக்கும் தொற்றிவிடும் அபாயம் உண்டு.

கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு கலாச்சாரச் சீரழிவு

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் பள்ளி ஆண்டுவிழா என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு ஏற்ப ஆடிப்பாடக்கூடிய கலாச்சாரத்தை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள். பள்ளி நிர்வாகத்தினரை ஊக்குவிக்கும் விதமாகப் பிள்ளைகளின் பெற்றோர்களும் அதற்கு உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பது நிசர்சனமான வேதனையளிக்கும் உண்மை. இதனை யாரும் மறுக்க முடியாது. இருசாராரும் சேர்ந்தே சினிமாவில் கதாநாயகனும் நாயகியும் கட்டிப் பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து இவ்வாறான கலாச்சார (?) விழாக்களில் ஆட வைத்து, பள்ளிக்கூட நிர்வாகமும் பெற்றவர்களும் மற்றவர்களும் ரசிக்கிறார்கள். இது கலாச்சாரமல்ல; மாறாக, கலாச்சாரச் சீரழிவு என்ற விழிப்புணர்வு நம்மிடையே வர வேண்டும். இந்தப் புதுவரவான கலாச்சாரச் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும்.

மேலும் இன்றைய பல குடும்பங்களில் சினிமாப் பாடல்களும் இஸ்லாமிய சமூகக் கலாசாரத்தைக் குழி தோண்டிப் புதைக்கக்கூடிய தொலைக்காட்சித் தொடர்களும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. மேலும் வீணான பேச்சுகளும் ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேசுவதும் கேலி பேசி சிரிப்பதும், இன்னும் எத்தனையோ தீமைகள் நம் சமுதாய மக்களிடையே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.


தொலைக்காட்சித் தொடரை பார்த்து கொண்டிருந்ததின் விளைவாக சுன்னத் செய்து போடப்பட்டிருந்த குழந்தையின் மர்ம உறுப்பை பூனை கடித்துக் குதறியது, அதனால் குழந்தையின் மரணம் ஏற்பட்டுவிட்டதின் விளைவாக கணவன்மனைவி விவாகாரத்தில் போய் நிற்கின்றதுஎன்பது அண்மைச் செய்தி. இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க இஸ்லாமியக் குடும்பசூழல் அவசியம்.

மார்க்கம் கூறாதவற்றை மார்க்கமாக நினைத்துச் செய்யக்கூடிய செயல்களில் சில

மார்க்கம் அனுமதிக்காத மற்றும் மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பல புதிய செயல்கள் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய குடும்பங்களில் அரங்கேறி வருவதை அன்றாடம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். அவற்றில் நம் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் நடத்தப் படும் அனாச்சாரச் சடங்குகளும் அடக்கம். இஸ்லாமியக் குடும்பத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தால் 7ஆம்நாள் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருந்தால் ஓர் ஆடும் அகீகா கொடுத்து அன்று பெயர் வைக்கச் சொல்லி நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஆனால் நம் சமூகத்தவர்கள் “40ஆம் நாள் பெயர் சூட்டுவிழாஎன்று பத்தரிகைகள் அச்சடித்து, பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பெருவாரியான முறையில் வீண் விரயம் செய்து பெருமை பாராட்டுகிறார்கள். வசதியுள்ளவர்கள் செய்யக்கூடிய இந்த அனாச்சாரமான செயல்களால், “இதனைச் செய்யத் தவறினால் இஸ்லாத்தின் ஒரு கடமையை நிறைவேற்றாத குற்றத்துக்குள்ளாவோம்; நம்மைச் சமூகத்தவர்கள் மதிக்க மாட்டார்கள்என்ற தவறான முடிவுடன், ஏழை எளியவர்களும் தம்மால் சுமக்கமுடியாத அளவிற்குக் கடன்களை வாங்கி விருந்து நடத்தி விட்டு, கடனை அடைக்க முடியாமல் திண்டாடும் அவல நிலைக்கு ஆளாக்கப் படுகின்றனர்

இயற்கையின் நியதியாகிய பெண் மக்களின் பூப்பெய்தலையும்ஒரு மாபெரும் விருந்து போட்டுக் கொண்டாட வேண்டும்என்று அடம்பிடிக்கக் கூடியவர்களும் இல்லாமலில்லை. ஆண் குழந்தைகளாக இருந்தால் சுன்னத், மலர் மாலை சூட்டுதல், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் 3, 7, 10, 40ஆம் நாள் ஃபாத்திஹாக்கள் மட்டுமின்றி, ஒரு தொடர்கதையைப் போன்று, “ஃபாத்திஹாக்கள் ஓதி விருந்துண்டால் தான் திருப்திஎன்றும்இறந்தவருக்கு ஃபாத்திஹா ஓதி, மய்யித்துக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டோம்; மார்க்கத்தை முழுமையாகக் கடைப் பிடித்து விட்டோம்என்று வீணாக மார்தட்டிக் கொள்ளக்கூடிய நம் சமுதாயச் சொந்தங்கள் இல்லாமலில்லை.

நூலகம் அமைத்தல்

இதை வாசித்தீர்களா? :   வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை நினைவு கூரக்கூடிய இல்லங்கள்தாம் விரும்பத் தகுந்த இல்லங்கள். அல்லாஹ்வை நினைவு கூரா இல்லங்கள் (இருளடைந்த) மண்ணறைக்குச் சமமானவை“. அனைத்து வழிகளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பங்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய குடும்பமாக, அவனை நினைவு கூரக்கூடிய இடமாக மாற்ற வேண்டும். மேலும் உள்ளத்தாலும் சொல்லாலும் தொழுகைகளின் மூலமாகவும் திருமறை குர்ஆன் ஓதுவதன் மூலமாகவும் இன்னும் இஸ்லாத்தைப் பற்றிக் கலந்தாலோசனை செய்யக்கூடிய தளமாகவும் அல்லது இன்னும் பல வகைகளாக இஸ்லாமிய நூல்களைப் புரட்டி வாசிக்ககூடிய தளமாகவும் நமது இல்லங்கள் திகழவேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றியும் அதன் சட்டங்கள் பற்றியும் எளிதாக அறிந்து கொள்வதற்கு உங்கள் குடும்பத்து உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உங்களது வீட்டில் அமைக்கப்படும் நூலகம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அது மிகப் பெரிதாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இல்ல நூலகத்துக்காக நல்ல புத்தகங்களைத் தேர்தெடுப்பது, அவற்றை மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் அமைப்பது இன்னும் குடும்பத்தவர்களை அதிகம் படிப்பதற்கு ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள், நம் குடும்பத்தில் இஸ்லாமியச் சூழல் உருவாகப் பெரிதும் உதவும்

படுக்கை அறை மற்றும் விருந்தினர் அறை என்று வீட்டில் அமைப்பது போன்று நூலகத்திற்கென ஒரு பகுதியை ஒதுக்கி வைப்பதன் மூலம் மிக எளிதாக அவற்றை எடுத்து குடும்பத்தவர்கள் பயன்படுத்த வசதியாக இருக்கும். மேலும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிப்பதன் மூலம் புத்தகங்கள் படிக்கும் நல்ல பழக்கத்தின்பால் அவர்களை ஈடுபடுத்த முடியும்.

தொழுமிடம்

உங்கள் இல்லங்களில் தொழுகைக்கான கிப்லாவை அமையுங்கள். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்:

ஆகவே மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்து கொடுங்கள். உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள். மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக என்று வஹீ அறிவித்தோம் (அல்குர்ஆன் 10: 87).

ஆண்கள் தங்களது ஐவேளைக் கடமையான தொழுகைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது வீட்டில் உள்ளவர்களுக்குதொழுகையை முடித்துவிட்டு வருகின்றேன்என்பதை உணர்த்தும் விதமாக நடந்துக் கொண்டால் அதனால் வீட்டிலுள்ளவர்களும் தொழுகைக்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும். மட்டுமின்றி, தொழுகைப் பயிற்சியில் உள்ள பிள்ளைகளுக்கும் அது ஆர்வமூட்டும்.

ஆன்மீகப் பயிற்சி

குடும்பத்துப் பெண்களை தாதர்மம் செய்யத் தூண்டுங்கள். அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகரிக்கும். இறைதூதர்(ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வயுமூட்டியிருக்கிறார்கள்: ஓ பெண்களே! தானதர்மம் வழங்குங்கள். நரகத்தில் உள்ளவர்களில் நீங்கள்தான் அதிகமாக எனக்குக் காட்டப் பட்டீர்கள்“. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

மேலும் வெள்ளை நாட்கள் என்றழைக்ககூடிய (அய்யாமுல் அப்யத்) நாட்களில் அதாவது எல்லா மாதத்தின் பிறை 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களிலும் வாரத்தின் திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் ஆஷுரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10,11) மற்றும் அரபா நாள் மற்றும் முஹர்ரம், ஷஃபான் மாதங்களில் முடிந்தளவு சுன்னத்தான மற்றும் நபிலான நோன்புகளை நோற்பதற்கு உங்கள் குடும்பத்தினரை ஆர்வமூட்டுங்கள். மேலும் திக்ர் மற்றும் துஆக்களை ஓத ஆர்வமூட்டுங்கள். இஸ்லாமியக் குடும்பச் சூழல் உருவாவதற்கு இவை பெரிதும் உறுதுணையாக அமையும்.

குடும்பத்தை இறைநம்பிக்கை கொண்டு அலங்கரியுங்கள்:

திருமணம் முடிக்கத் தகுந்த உறவுமுறை உள்ள (மஹ்ரமல்லாத), வயதுக்கு வந்த ஆண்பெண்கள், தம் உறவினர்/நண்பர்களது வீடுகளுக்குச் செல்லும்போது இஸ்லாமிய வரையறைகளை அலட்சியமாகப் புறக்கணிப்பதும் தாங்கள் விரும்பிய வீட்டிற்குள் ஹிஜாப் முறையைப் பேணாது பெண்கள் நுழைவதும் தங்களது மறைக்க வேண்டிய பாகங்களை வெளிக்காட்டிக் கொள்வதும் இன்னும் இது போன்ற இஸ்லாம் தடுக்கின்ற நடைமுறைகளைச் செய்வதுமான இல்லமாக நம்முடைய இல்லங்கள் இருக்கலாகாது.

உருவப்படங்கள் மற்றும் நாய்கள் அற்றவையாக நம் வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். உருவப் படங்களும் நாய்களும் உள்ள  வீடுகளில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்ற நபிமொழியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது இல்லங்களை அல்லாஹ்வை நினைவு கூரக்கூடிய இல்லங்களாக மாற்றி அமைக்க முயற்சி செய்ய வேண்டும்.அல்லாஹ் உங்கள் மீது அருள் பொழிவான்.


இஸ்லாமியக் குடும்பச்சூழலை ஏற்படுத்தி வெற்றி பெற்ற மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக! ஆமீன்.


ஆக்கம்: சகோதரி. உம்மு ரம்லா


சகோதரி உம்மு ரம்லா அவர்கள் ஜித்தா செனாயியா பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய சென்டரில் பெண்களுக்காக நடைபெறும் வாரவகுப்புகளில் கலந்து கொண்டு மார்க்க அறிவினை பெற்றுக் கொள்ளும் மாணவி ஆவார்.

2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற சகோதரரி உம்மு ரம்லா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்


2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.