அமைதி எங்கே?

நீரின்றி அமையாது உலகம் !

ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்?

அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும்

இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும்

அது வெற்றியின் எழுச்சியே !

புனித பூமியைப் படைத்த இறைவன்,
 
 பொறுமையையும் சேர்த்துதானே படைத்தான் !
 
 பொல்லாத உலகத்தில் முள்ளாக பல மதங்கள்,
 
 இல்லாத போதனையை எடுத்துரைக்கும் அவலத்தால்,
 
 சொல்லாலும் செயலாலும் சுயபுத்தி இழந்துவிட்டு,
 
 பல்லாயிரம் கலவரங்கள் பாருக்குள் ஊடுறு
வ,
 
 எல்லா விதத்திலும் இயன்றவரை ஊதிவிட்டு,
 
 கல்லா மாக்களாகி கடவுள் பயம் சிறிதுமின்றி,
 
 நல்லோர் பலரை நாட்டினிலே மாய்த்துவிட,
 
 போருக்கு வழிவகுத்து பொன்னான உயிர் பறித்து
 
 போர்க்களத்தின் தர்மத்தை புதைகுழிக்குள் தள்ளி விட்டு,
 
 புகலிடம் தேடும் இப்பூவுலக மானுடமே !
 
 இனியேனும் சிந்தித்து இதற்கொரு தீர்வு செய்வீர் !
 
 இறை படைத்த இவ்வுலகில் இருக்கும் அனைவருமே,
 
 “இறைவன் ஒருவன்” என்ற ஏகத்துவ கொள்கையினை,
 
 இங்கிதமாய் பின்பற்றி இணைந்து வாழ்ந்தால்,
 
 எல்லோரும் சோதரராய் இணையற்ற குடும்பமாகி,
 
 ஒருமித்த கருத்துடனே ஒற்றுமை புன்னகையில்,
 
 ஓர் தாய் மக்கள்போல் உவகை துள்ளும் வண்ம்
 
 உன்னதமாய் வாழ ஒரு வழியும் பிறந்திடுமே !
 
 இம் மனமாற்றம் என்றேனும் நிகழ்ந்து விட்டால்,
 
 இவ்வுலக வளமெல்லாம் எல்லோருக்கும் சொந்தமாகி,
 
 ஏற்றத் தாழ்வற்ற இறைகூறும் நல்லுலகம்,
 
 எளிதாய் தோன்றிவிடும் இறையருள் எவர்க்கும் கிட்டும்!
 
 மனித நேயம் மலர்ந்து மக்கள் எல்லாம் ஒன்றாகி,
 
 மமதையெனும் போர் ஒழிந்து மகிழ்ச்சியுள்ள உலகமாகி,
 
 ஆர்ப்பரிக்கும் கடலடங்கி அன்றாடம் கரையைத்தொட்டு,
 
 அமைதியை தேடுதல்போல் — இந்த அவனியிலே ,
 
 அமைதி தென்றல் வந்து அனைவரின் மனம் தொட்டால்,
 
 அமைதி கிட்டிடுமே ! அறவழியும் தழைத்திடுமே ! !
 
 எம்.அப்துல் ரஹீம், கோவை.

இதை வாசித்தீர்களா? :   90. மாநகர் !