
மு டியரசின் மன்னரவர்
மரணத்தைச் சந்திக்க
துடிதுடித்து மக்களெல்லாம்
துயரத்தைக் கொண்டாலும்
முடியதுவும் உதிர்வதுபோல்
மரணங்கள் இயல்பென்றே
குடிமைகளும் அறிந்ததனால்
கூப்பாடு போடவில்லை.
விடுமுறைகள் வேண்டவில்லை.
வீதியிலே கூடவில்லை
கொடுஞ்செயல்கள் வன்முறைகள்
கொலைகளவு நாடவில்லை.
படபடக்கும் கொடிகூட
பார்வைக்குத் தாழவில்லை.
அடம்பிடித்து படம்பிடித்து
ஆன்மநலம் தே(ற்)றவில்லை.
அரசநிலம் கைப்படுத்தி
அடக்கத்தைச் செய்யவில்லை.
முரசொலிக்க வானொலியில்
முழக்கங்கள் வழக்கமில்லை.
வரமிதுதான் வாழ்வென்ற
ஓருண்மை விளங்கிவிட
சிரம்பணிதல் என்றைக்கும்
சாகாத இறைவனுக்கே.!
ஒப்பாரிச் சாராயம்
ஒருவருமே அருந்தவில்லை.
துப்பாக்கி முழக்கங்கள்
துளைக்கின்ற சப்தமில்லை.
எப்போதும் போலத்தான்
இந்நாளும் செல்கிறது.
இப்பாரும் அதிசயிக்கும்
இயல்பான மாற்றமிதே.
பாமரனும் அரசனுமே
பக்கத்துப் பக்கத்தில்.
சாமரமா? சுழற்காற்றா?
செயலேட்டில் அவரெழுத்தே!
யாவருமே ஓர்நிறைதான்.
இடுகாட்டின் கணக்கீட்டில்.
‘பூ’வருமா? ‘தலை’ விழுமா?
புதைந்ததுவும் ரகசியமே!
தேசத்தின் அரங்குகளில்
திருப்புகழ்ச்சிப் பாட்டில்லை.
காசற்றோர் காசுள்ளோர்
கணக்குகளும் காணவில்லை.
மாசற்ற தன்மையன்றி
மதிப்புகளும் வேறில்லை.
பாசத்தால் இச்செய்தி
பாடங்கொள் பாரதமே!
– கவிஞர். ஃபக்ருத்தீன் இப்னு ஹம்தூன்