
கண் சைகையாலும்
கைச் செய்கையாலும்
வீண் பொய்களாலும்
வாய்ச் சொற்களாலும்
பிறர் நோகக் குறைசொல்லி
புறம் பேசி, சுகம் காணும்
மானங் கெட்ட மானிடன்
ஈனப்பட்டு இழிவடைவான்
நிரந்தரம் அற்ற வாழ்க்கையே
நிலைக்கும் என்றெண்ணி
அறம்தரம் அற்றுப் பொருளையே
அளவுமீறிச் சேர்க்கின்றான்
குவித்துவைத்தச் செல்வத்தை
குறையுமோ என்றஞ்சி
எடுத்து வைத்து மீண்டும்
எண்ணியெண்ணிப் பார்க்கின்றான்
மரணமென்ற சாசுவதம்
மறந்துவிட்ட அவனும்
காசுபணம் காக்கு மென்ற
கோணற் கணக்கில் திளைக்கின்றான்
நாணல் வேலி நதியை வகுக்குமா
கானல் நீர்தான் தாகம் தணிக்குமா
போட்டுவைத்தக் கணக்கு யாவும்
பிழையாகிப்போக, பொருளும் உதவாது
கூடிப்போனப் பாவச்சுமையால்
கொடிய நரகில் எறியப்படுவான்;
எத்தகைய அழிப்பிடம் அதுவென
எடுத்துச் சொல்வார் எவர்?
அல்லாஹ் மூட்டிய அணையா நெருப்பது
எல்லா உறுப்பையும் சூழும்
நச்சு எண்ணங்கள் நிறைந்த அந்த
நெஞ்சுக் குழியையேத் தீண்டும்
சூழ்ந்துவிட்ட நெருப்பில் அவனும்
வீழ்ந்தழிந்து போவான்
நீண்டு நிலைக்கும் கம்பங்களாய்த்
தீயும் தின்று தீர்க்கும்!
-Sabeer Ahmed abuShahruk
(மூலம்: அல் குர்ஆன் /சூரா: 104: அல் ஹுமஸா)