பழகு மொழி (பகுதி – 1)

(1) எழுத்தியல்

நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து மறைந்த வெளிநாட்டுக் காரர்களும் அடங்குவர். தமிழில் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடிய வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர். தமிழில் பல நூல்களையும் இலக்கண விளக்கங்களையும் வழங்கியவர். இப்போது நாம் பயன் படுத்தும் ஏ,ஓ ஆகிய இரு தமிழ் எழுத்துகளும் கி.பி. 1720வரை எ,ஒ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு அமைக்கப் பட்டிருந்தன.

அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, “இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும்.

உலகின் வாழும் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் பேச்சுத் தொடக்கம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் அது வரிவடிவம் பெற்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் கூறுவர்.

சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும்.

(1):1 எழுத்து வகைகள்

தமிழெழுத்து நான்கு வகைப்படும்:

(1):1:1 உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12

(1):1:2 மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18

(1):1:3 உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12×18) = 216

(1):1:4 ஆய்த எழுத்து (ஃ) = 1

மொத்தம் 247 எழுத்துகள்.

“அட….. ஆனா ஆவன்னாக்குத்தான் இம்பூட்டு அலப்பறயா…..?” என்று தயை கூர்ந்து யாரும் கேட்டு விடாதீர்கள்.

தமிழ் வட்டெழுத்துகள் (வரிவடிவங்கள்) பற்றி நிறைய வேறுபட்ட கருத்துகள் உள்ளன. தமிழில் மொத்த உயிரெழுத்தே (அ,இ,உ,எ,ஒ) ஐந்துதான் என்ற வெடிக்கருத்தும் அதிலொன்று. எப்படி எனில், அ+அ=ஆ, இ+இ=ஈ, உ+உ=ஊ, எ+எ=ஏ, ஒ+ஒ=ஓ ஆக ஓரேயெழுத்து இரண்டு தடவை வந்தால் நெடிலாகி விடும் என்ற யுனிகோடு கணக்கோடு, அ+ய்=ஐ, அ+வ்=ஔ என்று வளைத்துக் கொண்டு வருவோரும் உண்டு. ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகள் பண்டைய தமிழில் இல்லாமலிருந்து பின்னர் வந்து இணைந்தவை என்ற கருத்தும் உண்டு. ஏனெனில், கி.பி 3-6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்தக் கல்வெட்டிலும் நடுகல்லிலும் ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகளும் காணப் படவில்லை. மீக்கூறியவாறு ஏ,ஓ ஆகிய இரு எழுத்துகளும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவை. அதுமட்டுமின்றி ஈ என்பது எழுத்தன்று; அஃது ஓர் ஓவியம் என்ற கருத்தும் உண்டு. காரணம், ஒரு நெடிலின் வரிவடிவம் அதன் குறிலை ஒத்திருக்க வேண்டும். காட்டாக, ஆ என்ற நெடிலின் வரிவடிவம் அ என்ற எழுத்தை ஒத்திருக்கிறது. ஈ என்ற நெடிலில் இ என்ற குறிலை ஒத்த வடிவமே இல்லாமல் முற்றிலும் வேறாக உள்ளது.

இதை வாசித்தீர்களா? :   மீண்டும் அம்மணமாகும் தினமணியின் நடுநிலை!

இருப்பினும் தொல்காப்பியரின் கூற்றுப்படி,

அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் …

ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் …


சேர்த்து 12உம் உயிரெழுத்துகள் என்றே நாம் கொள்வோம்.

எழுத்துகளோடு அவ்வப்போது கொஞ்சம் இலக்கணமும் பார்த்துக் கொள்ளலாம்:

“தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்” என்ற சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.

அதி. அழகு.


< பழகு மொழி (முன்னுரை) | அடுத்த பகுதி இன்ஷா அல்லாஹ் விரைவில் >