தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 5)

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படும் செய்திகளில் முக்கியமான மற்றொன்று நான்காவது கலீஃபாவான நபித்தோழர் அலி(ரலி) அவர்கள் தெரிவிப்பதாக அறிவிக்கப்படும் ஹதீஸாகும். தற்போது இச்செய்தியினைக் குறித்து காண்போம்.


நபி (ஸல்) அவர்கள் அலி(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அலியே! உனக்கு அன்பளிப்பு வழங்கட்டுமா? என்றார்கள்…..(என்று முழு ஹதீஸையும் குறிப்பிட்டார்கள்) அப்போது நான் திஹாமா மலையளவு தங்கத்தை எனக்குத் தருவார்கள் என்று எண்ணினேன். அப்போது நீ தொழுகையில் நிற்கும் போது ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு என்று 15 தடவை கூறு! என்று கூறினார்கள்…….. (பின்னர் தஸ்பீஹ் தொடர்பான முழுமையான செய்தியைக் குறிப்பிட்டார்கள்) 

அறிவிப்பவர்: குஃப்ராவின் அடிமை உமர்,  நூல்: தாரகுத்னீ (மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 643)

இமாம் தாரகுத்னீ கிதாபு ஸலாத்துத் தஸ்பீஹ் என்ற நூலில் பதிவு செய்த அலீ (ரலி) அவர்களின் இச்செய்தியைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

மேற்கூறப்பட்ட ஹதீஸ் பலவீனமாகவும், தொடர்பு அறுந்தும் உள்ளது.  

(நூல்: மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1 பக்கம்: 643)

இச்செய்தியில் இடம் பெறும் குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவராவார். அவரைக் குறித்து பல ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்கள். 

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் பலவீனமானவராவார் என்று இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 81)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் பலவீனமானவராவார் என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 414)  

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவரின் ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம். ஆனால் அவர் பலம் வாய்ந்தவர் அல்ல என்று அஜ்லீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 414)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் பலவீனமானவராவார் என்று பின் ஹம்மாத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம்: 5, பக்கம்: 36)  

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் செய்திகளை மாற்றி அறிவிப்பவர்களில் ஒருவர். நம்பகமானவரிடமிருந்து உறுதியானவர்களின் ஹதீஸுக்கு ஒப்பில்லாததை அறிவிப்பார். இவரை ஆதாரமாகக் கொள்வது கூடாது. படிப்பினைக்காகவே தவிர அவரைப் பற்றி நூற்களில் எழுதக் கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.   (நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 81)

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்பது மேற்கூறப்பட்ட செய்திகளை படிக்கும் போது நமக்கு தெளிவாகியிருக்கும். இப்போது அச்செய்தியில் எவ்வாறு தொடர்பு அறுந்துள்ளது என்பதைக் காண்போம்.  

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் தாபியீன்களில் மிகவும் சிறிய வயதுடையவர். இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. மேலும் இவர் சிறிய வயதுடையவராக இருந்ததால் அவர் எந்த நபித்தோழரிடமும் எதையும் கேட்டதில்லை. 

குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் நபித்தோழர்களில் எவரிடமாவது கேட்டுள்ளாரா? என்று இப்னு மயீன் அவர்களிடம் கேட்டனர். அதற்கவர்கள், நபித்தோழர்களில் எவரிடமும் அவர் கேட்டதில்லை என்று பதிலளித்தார்கள்.

(நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம்: 3, பக்கம்: 220)

நபித்தோழர்களிடத்தில் கூட எந்தச் செய்தியையும் கேட்டிராத குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் தஸ்பீஹ் தொழுகையை அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாக அறிவிக்கிறார். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிறக்காத இவர், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை அறிவிப்பதால்தான் இச்செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  

எனவே அலீ (ரலி) அவர்கள் தெரிவிப்பதாக வரும் தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்தியை தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்கு ஆதாரமாக கொள்ள முடியாது.

இன்னும் வரும், இன்ஷா அல்லாஹ்.

< பகுதி-4 | பகுதி-6 >

இதை வாசித்தீர்களா? :   பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 7