தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)

Share this:

லர்மன்னன் என்பவரின் “கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து அவர்கள் மவுனம் காத்து தங்கள் சார்பு நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டியது குறித்து முன்னுரையில் எழுதியிருந்தேன்.

முழுநேர இந்துத்துவா எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சும் விதமாக மலர்மன்னன் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசக் கருத்துக்களை அக்கட்டுரையில் எழுதியுள்ளார். வயிற்றுக்கு உணவின்றி எலிக்கறி திண்ணும் விவசாயிகளைப் பற்றியோ காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக இந்து அரசியல்வாதிகளைப் பற்றியோ கவலைப்படாமல், தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் மதச்சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் தலையிடுவதன் மூலம், அமைதியுடன் வாழும் தஞ்சை இந்து-முஸ்லிம்களிடையே மதமோதல்களுக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தை எழுப்புகிறது மலர்மன்னனின் சிஃபிக் கட்டுரை!

குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசபயங்கரவாதங்களுக்குப் பிறகும் ஓயாத சங்பரிவார நரமாமிச உண்ணிகள் தென்னிந்தியாவின் மங்களூர்-பெங்களூர் என தனது நச்சுக் கரங்களைப் பரப்பி, தற்போது தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட முஸ்லிம்களைக் குறி வைத்துள்ளார்கள். விஜயபாரதம் மற்றும் இணைய ஊடகங்கள் மூலம் பல நச்சுக் கருத்துக்களைப் பரப்பி, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் சதிக்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைத்து, கலவரங்களை ‘உற்பத்தி’ செய்து, பின்னர் ‘இந்து ஒற்றுமை மாநாடு’ என்ற வன்முறைக் கூட்டத்தை நடத்தி, அதன்மூலம் அப்பகுதி முஸ்லிம்களை அச்சுறுத்தி வைப்பதே சங்பரிவாரங்களின் கடந்தகால வரலாறாக இருக்கிறது. சமீப நிகழ்வான பெங்களூர் கலவரமும் இந்தவகையில்தான் ஏற்பட்டு, மத்திய அரசின் சாதுர்யமான துரித நடவடிக்கைகளால் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக அனைத்து புள்ளி விபரங்களையும் திரட்டி, முன்னேற்பாடாக தாக்கப்பட வேண்டிய முஸ்லிம் வீடுகள், வணிக நிறுவனங்கள் பற்றிய ஸ்கெட்ச் போட்டு வைத்தே கலவரங்களில் இந்து பயங்கரவாதிகள் கச்சிதமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

மலர்மன்னன் அவர்களின் முஸ்லிம்களைப் பற்றிய வன்ம எழுத்துக்களை ஆழ்ந்து நோக்கினால், மதக்கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான சதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதை ஓரளவு யூகிக்க முடிகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பக்ரீத் அன்று மாடுகளை வெட்டக்கூட மனம் வராத அளவுக்கு நமது பாரம்பரிய மரபுகளை மதித்த தஞ்சை மாவட்டத் தமிழ் முகமதியக் குடும்பங்கள் எங்கிருந்தோ ஒட்டகங்களை அதிக விலை கொடுத்து வரவழைத்துச் சட்டத்திற்குப் புறம்பாக வெட்டிக் கொண்டாடும் மனப்போக்கை இன்று மேற்கொண்டது ஏன்? – மலர்மன்னன்

ஆண்டாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு ஏழ்மை நிலையிலேயே இருந்த ஓட்டு வங்கி முஸ்லிம்கள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பன்னெடுங்காலம் பின்தங்கியிருந்து,சமீப பத்துப் பதினைந்தாண்டுகளில் வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் திறந்து விடப்பட்ட பிறகே எஞ்சியதில் தகுதியான கடைநிலைப் பணிகளின் மூலம் கிடைத்த சம்பளத்தில் பொருளாதார ரீதியில் சற்று நிமிர்ந்துள்ளனர் .

பொங்கல், தீபாவளி போனஸ் போன்றவற்றை அந்தந்த நேரத்தில் கொடுத்து சந்தோஷப்படுத்தும் அரசுகள் பெருநாள் போனஸ் என்று முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களில் கொடுத்து அவர்களும் பண்டிகையை கடனின்றி கொண்டாட ‘மதசார்பற்ற அரசுகள்’ வழி செய்வதில்லை. இந்நிலையிலேயே மதசார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது .

பெரும்பாலும் குர்பானி கொடுப்பது போன்ற மார்க்கக் கடமைகளில், குர்பானி இறைச்சியைத் தருகின்ற நிலையில் மிகச் சிலரும் பெருநாள் உணவுக்கென பெறுகின்ற நிலையில் மிகப் பலருமாக முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளனர். குர்பானி பிராணிகளாக ஆடு, மாடு,ஒட்டகம் ஆகியவற்றில் எது வசதிப்படுகிறதோ அதைக் கொடுக்கலாம். ஆடாக இருப்பின் நபருக்கு ஒரு ஆடுவீதமும், மாடு, ஒட்டகம் இவற்றை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் குர்பானி கொடுக்கலாம்.(வசதியுள்ள தனிநபர் முழு மாடோ அல்லது ஒட்டகமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ கூட கொடுக்கலாம்).

சந்தையில் குர்பானிக்குத் தகுதியான ஒரு ஆட்டின் விலை சுமார் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கிறது . மாட்டின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலும், ஒட்டகம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரையிலும் உள்ளது. தனியாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதை விட ஏழுபேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ குர்பானி கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் மார்க்கக் கடமையை அதிகம் பேர் நிறைவேற்ற முடிவதோடு, பயன் பெறும் ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

சங்பரிவார வெறியர்கள் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளில் முடிந்த மட்டும் இடையூறு செய்தே வந்துள்ளனர். குர்பானிக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் போது இந்தப் போலி பசுநேசர்களின் இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல .(வடமாநிலத்தில் மாட்டை உணவிற்காக அறுத்ததற்காக சில தலித்துக்களைக் கொன்றவர்களும் இதே போலி பசுநேசர்கள்தான்.) மாட்டிற்குப் பகரமாக நம் நாட்டின் வடமாநிலச் சந்தைகளில் கிடைக்கும் ஒட்டகத்தை விலைக்கு வாங்கி குர்பானி கொடுக்கிறார்கள் .

பசுவை தெய்வமாக வணங்கும் இந்துக்கள், ஒட்டகக் குர்பானியை ஊக்குவிக்க வேண்டியதே யதார்த்தம்.

உலகிலேயே ஒரே இந்து நாடான நேபாளத்தில் சர்வ சாதாரணமாக மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் விற்கிறார்கள். அதனை எதிர்த்து எந்தவொரு போலிப் பசுநேசரும் குரல் கொடுப்பதில்லை. அவர்களின் குறியெல்லாம், இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும், தலித்களும்தாம்.

“முஸ்லிம்கள் மாடுகளைப் பலியிடுகிறார்கள்” என்ற கூப்பாட்டுக்காவது இந்து மதத்தின் ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் ‘கோமாதா’ என்ற மதநம்பிக்கை என்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஒட்டகத்தைப் பலியிட்டு பகிர்ந்து உண்பதால் வயிறு எரியும் மலர்மன்னன் என்ன காரணம் சொல்லப் போகிறார்? எக்காரணம் கொண்டும் நம்நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதைத் தவிர வேறுகாரணம் இருக்க முடியாது; அவ்வாறு ஒற்றுமையாக இருந்து விட்டால் சங்பரிவாரங்கள் அரசியல் பிழைப்புக்கு எங்கு செல்வார்கள்? என்ற சுயநலக்காரணமன்றி பண்பாட்டுக் கலாச்சார காரணமல்ல என்பதும் தஞ்சை மண்ணில் இந்துவும் முஸ்லிமும் மாமன்-மச்சானாய் வாழ்ந்து வருவது இந்து வெறியர்களின் கண்ணில் உறுத்துகிறது என்பதும் தெளிவு!

அடுத்து, அக்ரகாரங்கள் அழிந்து புதுப்புது மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதால் எழுந்த கவலையைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

ஆக்கம்:  N. ஜமாலுத்தீன்

முன்னுரை  |  பகுதி 1  |  பகுதி 2  |  பகுதி 3  >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.