பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 4

Share this:

மெரிக்காவின் தேசிய பொது வானொலியில்(National Public Radio – NPR) 19 அக்டோபர் 2000 அன்று ஜெருசலத்தினைக் குறித்து ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. “இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையிலுள்ள பிரச்சினையில் மதத்தின் பங்கு” என்பது அதன் தலைப்பாக இருந்தது. இதில் ஜெரூசலமின் டெம்பிள் மவுண்ட் மற்றும் ஹரம் ஷரீஃப் முக்கிய விஷயங்களாக முன் வைக்கப்பட்டது. இவ்வறிக்கையில் அரசியல் விமர்சகராக பிரபல பட்லன்(Butlan University) பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஜெரால்டு ஸ்டீன் பெர்க் அவர்கள் இடம்பெற்றிருந்தார். இப்பேட்டியில் அவர் பாலஸ்தீனர்களின் மேல் பாரதூரமான ஒரு பழியை சுமத்துகிறார்.

கடந்த நாட்களில் அல் அக்ஸா பள்ளிவாசலில் நடந்த பிரசங்கங்கள் கடினமான யூத மத எதிர்ப்புப் பிரச்சாரமாக இருந்தன எனவும் அது ‘யூதர்களுக்கெதிரான செமிட்டிக் இன எதிர்ப்பு (Anti-Semitic) அக்கிரமம்’ எனவும் குற்றம் சாட்டுகிறார். இது ஸியோனிஸ ஆதரவு நபர்களின் தந்திரம் நிறைந்த சொற்பிரயோகங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்றாகும்.

இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிரான எவ்வித விமர்சனத்தையும் செமிட்டிக் இன எதிர்ப்பு(Antisemitic) என்று கூறுவது தான் இவர்கள் வழக்கம். ஃபலஸ்தீனர்களின் எந்த ஒரு நடவடிக்கையும் யூத இனத்துக்கு எதிரான இனக்காழ்ப்பு என பழி சுமத்துவது தான் இவர்கள் உத்தி. ஆனால் உண்மையில் ஸியோனிஸத்தைத் தான் பாலஸ்தீனர்களும், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைக் கழகத்தினரும் எதிர்க்கின்றனரே அல்லாமல் யூதர்களையோ யூத மத நம்பிக்கையையோ அல்ல. இவை இரண்டையும் போட்டுக் குழப்பி இஸ்ரேலின் அக்கிரமங்களை நியாயப்படுத்துவதற்குத் தான் ஜெரால்டு ஸ்டீன் முயற்சிக்கிறார்.

மேலும் “ஜெரூசலம் மத ரீதியான விஷயங்களை முன்னிலைப் படுத்தியுள்ளது” என்றும் கூறுகிறார். இது தற்போது பாலஸ்தீனர்கள் யூதர்களை மத ரீதியில் தான் எதிர்க்கின்றனர் என்று மக்களை நம்ப வைக்க முயல்வதாகும். ஆனால் யதார்த்தத்தில் ஜெரூசலமிற்கு மதரீதியில் விளக்கம் கூறி பிரச்சினைகளுக்கு துவக்கம் குறித்தது யார்? ஸியோனிஸவாதிகளா? அல்லது பாலஸ்தீனியர்களா? காலம் காலமாக பாலஸ்தீனியர்கள் வசித்து வந்த பிரதேசத்தை மதரீதியாக யூதர்களுக்குச் சொந்தமானது என்ற வாதத்தினை முதன் முதலில் உயர்த்தியது ஸியோனிஸவாதிகளே.

அதாவது ஜெரூசலமிற்கு மதரீதியான விளக்கங்கள் கொடுத்து அது தங்களுக்குத்தான் சொந்தம் என்ற வாதத்தினை முன் வைத்தது பாலஸ்தீனியர்களல்லர். இஸ்ரேலிய ஸியோனிச வாதிகளே ஆவர்.

பாலஸ்தீனில் ஆரம்ப காலத்திலிருந்து வசிப்பவர்கள்தான் பாலஸ்தீனியர்கள். இவர்களில் யூத, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் அனைவரும் அடங்குவர். இவர்களுக்கிடையில் முதன் முதலில் மத அடிப்படையில் அந்நாட்டிற்கு சொந்தம் கொண்டாடியவர்கள் யார்? ஸியோனிஸ்டுகளான யூதர்கள் தான்.

ஆனாலும் சியோனிஸ மற்றும் இஸ்ரேலிகளின் நிலைபாடுகளில் மதரீதியிலான பங்கினைக் குறித்து ஜெரால்டு ஸ்டீன் அவர்கள் ஒரு வரி கூட குறிப்பிடவே இல்லை. அதற்கு பதிலாக இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிரான பாலஸ்தீனர்களின் நடவடிக்கைகளில் உள்ள மத ரீதியான பங்கினைக் குறித்து கூறி இல்லாத பழியினை பாலஸ்தீனர்களின் மீது சுமத்தி இஸ்ரேலிகளின் நிலைபாட்டினை நியாயப்படுத்தவும் பாலஸ்தீனர்களை மத வெறியர்களாக காட்டவும் தான் முயல்கிறார்.

இறைநம்பிக்கை இல்லாத சியோனிஸ தலைவர்கள் தான் யூதர்களின் மதவெறியினைத் தூண்டி விட்டு இஸ்ரேல் உருவாவதற்கு பாடுபட்டவர்கள். உண்மையில் பேராசிரியர் ஸ்டீனின் பேட்டியில் பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினைகளுக்கு காரணகர்த்தாக்களாக இவர்கள் தான் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் தான் ஒரு பேராசிரியர் என்ற நிலையினையும் மறந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை இஸ்ரேலியர்களுக்கு சாதகமாக தருகிறார்.

டெம்பிள் மவுண்டினைக் குறித்து பேராசிரியர் ஸ்டீன் கூறும் தவறான தகவல்களையும் அதனைக் குறித்த சரியான விவரங்களையும் வரலாற்றிலிருந்து தொடர்ந்து வரும் பகுதியில் காணலாம்.

–அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.