அமாவாசை நிலாக்கள் – 1

“… சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் திண்ணமாக அழிந்தே தீரும்”  அல்-குர்ஆன் (17:81).

அமாவாசை நிலாக்கள் அத்தியாயம் – 1

இஸ்லாம்    

கி.பி 610 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவரும், மிகச் சிறந்த பண்புகளைக் கொண்டவரும், இன்று 160 கோடி முஸ்லிம் மக்களால் உயிரினும் மேலாக நேசிக்கப் படுகின்றவருமான நேர்மையான அரபு வணிகர் ஒருவருக்கு இறைவனின் மிகப் பெரும் கருணையினால் நடந்த ஒரு சம்பவம் உலகையே புரட்டிப் போட்டது.

அரேபிய நாட்டின் மக்கா நகரை அடுத்துள்ள ‘ஜபல் அந்நூர்’ குன்றின் மேலிருக்கும் ‘ஹிரா’க்  குகையில் தனித்து தியானத்தில் இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குமுன், வானவர் ஜிப்ரயீல் (அலை) தோன்றி, இறைவனின் இறுதி வேதமாகிய அல்-குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை அடியெடுத்துக் கொடுத்து, “ஒதுவீராக” என்று கேட்டுக்கொண்டதுதான் உலகை மாற்றிப்போட்ட அந்த நிகழ்வின் தொடக்கம். இஸ்லாத்தின் மீளெழுச்சியினுடைய தொடக்கமும்கூட.

விரிவான இஸ்லாமிய வரலாற்றைச் சொல்வது இத் தொடரின் சக்திக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது. ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒன்றிரண்டு சம்பவங்களின் வாயிலாக எளிமையானதொரு சிறிய அறிமுகம் மட்டுமே இங்கு விவரிக்கப் படுகிறது. விரிவான இஸ்லாமிய வரலாற்றையும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையையும் விரிவாகச் சொல்லும் பல சிறந்த நூல்கள் உலகின் எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. சில நூல்களின் பட்டியல் இறுதியில் தரப்பட்டுள்ளன.

oOo

மக்காவில் பதின்மூன்று ஆண்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குப்பின் கி.பி 622ஆம் ஆண்டு இறைவனின் தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து சுமார் 210 மைல் தொலைவிலுள்ள யத்ரிப் (இன்றைய மதீனா) நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ராவின் தொடக்கம் உலக வரலாற்றையே பின்னாளில் புரட்டிப் போடப் போகும், ஏறத்தாழ முழு உலகத்தையும் ஆட்சி செய்யப் போகும் பேரரசுகளை நோக்கிய மாபெரும் பயணத்தின் தொடக்கம், அந்த 210 மைல் தூரப் பயணத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது என்பதை அன்று உலகம் அறிந்திருக்கவில்லை.

ஹிஜிராவுக்கு முன்பாக கி.பி 610இல்,  முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிகச் சில முஸ்லிம்களுக்கு மக்காவின் செல்வந்தர்களான எதிரிகளின் தண்டனைகள் எல்லை மீறிக்கொண்டு போனது. சுடுமணலில் படுக்கவைத்து நெஞ்சில் பாறாங்கற்கள் சுமக்க வைத்து, இஸ்லாத்தை மறுக்க நிர்பந்திக்கப் பட்டனர். வசதியற்றவர்களும் ஏழைகளும் அடிமைகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பின் அவர்கள் எதிர்கொள்ளும் சொல்லவொணாத் துயரத்தைக் கண்ணுற்ற நபியவர்கள், முஸ்லிம்களின் குழு ஒன்றைத் தம் ஒன்றுவிட்ட சகோதரர் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களின் தலைமையில் அபிசீனியா(இன்றைய எத்தியோப்பியா)வுக்கு அடைக்கலமாக அனுப்பினார்கள். இதை அறிந்த எதிரிகள் அபிசீனிய அரசர் நஜ்ஜாஷிக்கு (The Negus of Abyssinia) அம்ரிப்னுல் ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ ஆகிய மக்காவின் இரண்டு முக்கியஸ்தர்களைப் பரிசுப்பொருட்களுடன், முஸ்லிம்களை அங்கிருந்து திரும்ப மக்காவிற்கே திருப்பித் துரத்திவிடப் பரிந்துரைக்கும் பொருட்டு தூதனுப்பிவைத்தனர். அம்ரிப்னுல் ஆஸ், அரசர் நஜ்ஜாஷியிடம் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்:

“எங்கள் சமூகத்திலிருந்து சில அறிவிலிகளான ஆண்களும் பெண்களும் இந்நாட்டில் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் மூதாதையரின் மதத்தைப் புறக்கணித்துவிட்டவர்கள். உங்கள் மதமான கிறுஸ்துவத்தையும் மறுதலிப்பவர்கள். நாங்களும் நீங்களும் இதுவரை கேட்டிராத புதிய மதத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்களின் உறவினர்கள், இவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், இவர்களைத் திரும்ப அழைத்துவர என்னைத் தங்கள் மேலான சமூகத்திற்கு அனுப்பியுள்ளார்கள்”.

நஜ்ஜாஷி, இப்படி பதிலுரைத்தார்: “இறைவன் மீது ஆணையாக! என்னுடைய பாதுகாப்பை நாடி, எனது தேசத்தை அடைக்கலமாகத் தேடி வந்தவர்கள் தீர விசாரிக்கப்படாமல் ஒரு நாளும் துரோகம் செய்யப்பட மாட்டார்கள். உமது வாதம் உண்மை என்று கண்டறியப்பட்டால் தம் உறவினர்களிடம் சேர்ப்பிக்கும் பொருட்டு அவர்கள் உம்மிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இல்லையெனில் எனது பாதுகாப்பை நாடும் வரை சகல வசதிகளோடும் இந் நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

கிறிஸ்தவப் பாதிரியார்களும் அமைச்சர்களும் இருக்கும் அரச சபைக்கு முஸ்லிம்கள் ஆஜராகக் கேட்டுக்கொள்ளப்பட்டு, ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் அரசவைக்கு வந்தனர்.

அரசர் நஜ்ஜாஷி, மக்காவிலிருந்து வந்த தூதர்களைக் காட்டி, “உங்களை இவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கேட்கிறார்கள்.”

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) : “அரசரே, நாங்கள் அவர்களின் அடிமைகளாயிருக்கிறோமா என்று கேளுங்கள்”

தூதர் : “இல்லை. அவர்கள் சுதந்திரமானவர்கள்தாம்

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) :நாங்கள் அவர்களுக்கு எந்தவிதத்திலாவது கடன் பட்டிருக்கிறோமா? அதை வசூலிக்கவேண்டுமா அவர்களுக்கு?”

இதை வாசித்தீர்களா? :   கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)

தூதர் : “இல்லை எந்தவிதத்திலும் கடன்பட்டிருக்கவில்லை. எதையும் வசூலிக்கவும் நாம் வரவில்லை”

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) : “அவர்களுள் எவரையேனும் இரத்தம் சிந்த வைத்திருக்கிறோமா?

தூதர் : “இல்லை. எங்கள் யாருடைய இரத்தமும் அவர்களால் சிந்தப்படவில்லை. பழி தீர்த்துக் கொள்ளவும் நாங்கள் வரவில்லை.”

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) : “பின் எதற்காக எங்களைக் கொண்டுபோக வந்திருக்கிறார்கள் அரசரே?”

தூதர் : “இவர்கள் எங்களுடையவும் எங்கள் மூதாதையருடையவுமான மதத்தைப் புறக்கணிக்கிறார்கள். எங்கள் கடவுள்களை அவமதிக்கிறார்கள். எங்கள் இளைஞர்களை வழி கெடுக்கிறார்கள். எங்களிடம் பிரிவினை வராதிருக்க அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். ”

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) வரலாற்று முக்கியம் வாய்ந்த தம் சிற்றுரையை அரச சபையில் நிகழ்த்தினார்கள்:
“அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்! சிலைகளை வணங்கினோம்! இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம்! மானக்கேடான காரியங்களைச் செய்தோம்! உறவுகளைத் துண்டித்து, அண்டை வீட்டாருக்குக் கெடுதிகளை விளைவித்தோம்! எங்களின் எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர்! இப்படியே நாங்கள் வாழ்ந்துவந்தபோது எங்களுள் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான்.

அவருடைய உயர் குலத்தை நாங்கள் அறிவோம். அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர், மிக ஒழுக்கசீலர் என்பதனையும் நாங்கள் அறிந்திருந்தோம்!

அவர் எங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நாங்களும் எங்கள் மூதாதையரும் வணங்கிவந்த கற்சிலைகள் மற்றும் புனித அடையாளச் சின்னங்களை விட்டு நாங்கள் விலகவேண்டும்! உண்மையை உரைக்க வேண்டும்! அடைக்கலம் காக்கவேண்டும்! உறவினர்களுடன் சேர்ந்து வாழவேண்டும்! அண்டை வீட்டார்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும்! அல்லாஹ் தடை செய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என்பதேயாகும்!

மேலும் மானக்கேடானவை, பொய்பேசுதல், அனாதைகளின் சொத்துகளை அபகரித்தல், பத்தினியான பெண்களின் மீது அவதூறு கூறுதல் ஆகியவற்றைவிட்டும் அவர் எங்களைத் தடுத்தார்! அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்! அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது! தொழவேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்று பல கட்டளைகளை எடுத்துக் கூறி விளக்கினார்!

நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம்! விசுவாசித்தோம்! அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம்! அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்! அவனுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டோம்! அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக்கொண்டோம்! அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக்கொண்டோம்!

இதனால் எங்கள் இனத்தவர்கள் எங்கள் மீது அத்துமீறினர்! எங்களை வேதனை செய்தனர்! அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு முன்பு போலவே சிலைகளை வணங்கும்படிக் கோரினர்! முன்பு போலவே கெட்டவற்றைச் செய்யும்படிக் கட்டாயப்படுத்தி எங்கள் மார்க்கத்திலிருந்து எங்களைத் திருப்ப முயன்றனர்! எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி, எங்கள் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுவதற்கும் மதச்சுதந்திரத்திற்கும் அவர்கள் தடையானபோது உங்கள் நாட்டுக்கு நாங்கள் வந்தோம்! உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்! உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம்! அரசே, எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்படமாட்டாது என்று நம்புகிறோம்!” எனக்கூறி முடித்தார்!.

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் அவர்களின் இந்த உரைக்குப்பின்னே ஒரு பேருண்மை பொதிந்து கிடக்கிறது. அவருடைய உரை, அபிசீனிய அரசவைக்கு மட்டும் சொன்ன உரையன்று. மாறாக, உலகத்துக்கே இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்களைப் பற்றி வெளிப்படையாச் சொன்ன முதல் செய்தி என்றுங்கூட அதை எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான் சரித்திர ஆசிரியர்கள், இஸ்லாமிய வரலாற்றின் ஒரு முக்கியமான உரையாக இந்த உரையைப் பதிவு செய்கிறார்கள்.

இவ்வளவு எளிமையானதுதான் இஸ்லாம். இதைத்தான் நபிகள் எங்களுக்குப் போதனை செய்கிறார்கள். எங்கள் வாழ்வில் இந்தப் போதனைகள் ஒளியூட்டுகின்றன. கற்பனைக்கெட்டாத தீமையிலிருந்து நன்மைக்கும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும் வந்திருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எதிரிகளல்லர். அன்னை மரியம்(அலை) மற்றும் அவர் மைந்தர் ஈஸா (அலை) அவர்களையும் உயர்ந்த இடத்தில் கண்ணியத்துடன் வைத்திருக்கிறோம். இலத்தீனியத் தேவலாயங்கள்கூட அன்னை மேரியின் மாசற்ற நேர்மையை, குர்ஆனைவிட உயர்ந்ததாகச் சொல்லவில்லை [1]. முஸ்லிம்களுக்குள் பிரிவினைகள் இல்லை [2]. அடிமை-ஆண்டான் எனும் வேற்றுமை இஸ்லாத்தில் இல்லை. பிறப்பால் மனிதர்கள் எல்லோரும் சமமானவர்களே. இந்த மகத்தான செய்தியைத்தான் இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறியாக, முதன்முதலில் போதிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுதான் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் அவர்களின் பேச்சில் மிளிர்ந்தது.

இந்தப் போதனைகள்தாம், அறியாமையின் உச்சத்தில் இருந்த ஒரு சமூகத்தைச் சொற்ப ஆண்டுகளில் ஏறத்தாழ உலகம் முழுவதையும் வெற்றிகொண்டு ஓர் உன்னத நாகரிகத்தை உருவாக்கிய சமூகமாக ஆக்கியது. “அரேபியத் தூதரின் நுண்ணறிவும் நடத்தையும் பண்பாடும் சமயத்தில் காட்டிய ஈடுபாடும், கிழக்கின் சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்ததற்கான காரணிகளில் அடங்கும். உலகில் மறக்க முடியாத நீண்டு நின்ற ஒரு புரட்சியை நாம் கண்பதற்கான காரணமும் அதுவே” என்பதாக ‘ரோமானியப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்’ எனும் தம் புகழ்பெற்ற ஆய்வு நூலில் குறிப்பிடுகின்றார் வரலாற்று ஆசிரியர் எட்வர்ட் கிப்பன் [3].

இதை வாசித்தீர்களா? :   ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10)

அண்ணலாரைக் கல்லால் அடித்தும் கடுஞ்சொற்காளால் பேசியும் தொழுது கொண்டிருக்கும்போது அழுகிய ஒட்டகத்தின் குடல்களை மாலையாக அணிவித்தும் அவமானப்படுத்தினர் குறைஷிகுலத் தலைவர்கள். கொல்வதற்கும் திட்டம் தீட்டினர். அதைச் செயலாக்குமுன் தெரிந்துகொண்டு, மதீனாவுக்குப் பிரயாணம் செய்து, பின் பத்து ஆண்டுகள் கழித்துத் திரும்ப மக்காவை வெற்றிகொள்ளும்போது பெருமானார் (ஸல்) அவர்களுக்குப்பின் பதினாயிரக்கணக்கில் முஸ்லிம்கள் அணிவகுத்து வந்தனர். அரேபிய மண்ணிற்கு அந்நியமாக இருந்த விவேகமும் அறிவும் பண்பாடும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு பெருங்கூட்டம் மக்காவிற்குள் நுழைந்தது.

குறைஷிகளின் தலைவர்கள் பாதுகாப்பற்றுப் பயந்தவர்களாகப் பணிகிறார்கள். “துரோகமிழைத்த நாங்கள் உங்களிடமிருந்து என்ன கருணையை எதிர்பார்க்க முடியும்? நீங்கள் எங்களின் உறவினர்கள், உயர்பண்புடையவர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறோம் எங்களை விட்டுவிடுங்கள்” என்று மன்றாடுகிறார்கள். “உங்கள் நம்பிக்கை வீண்போகாது. போங்கள்!. நீங்கள் பாதுகாப்பானவர்கள். சுதந்திரமானவர்கள்.” என்று அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. மார்க்கம் இஸ்லாம் ஆனதால் மக்காவாசிகள் அன்று மன்னிக்கப்பட்டார்கள்.”

உலகின் இந்த முதல் பொதுமன்னிப்பைக் குறித்து, மேற்கண்டவாறு கிப்பன் பதிவு செய்துள்ளார் [3].

“முஹம்மது (ஸல்) ஒரு பெரும் முஸ்லிம் படையுடன் மக்காவிற்குள் நுழைகிறார். மக்க மாநகரம் தனது தோல்வியை அங்கீகரித்து மக்காவின் எல்லாக் கதவுகளையும் தானாகவே திறந்துகொடுக்க, முஹம்மது (ஸல்) ஒரு துளி இரத்தம் சிந்தாமலும் [4] யாரையும் மதம் மாறக் கட்டாயப் படுத்தாமலும் அந் நகரத்தை எடுத்துக் கொள்கிறார்”. என்பது காரன் ஆம்ஸ்ட்ராங்கின் வியப்பு.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு தமது 63ஆம் வயதில் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார்கள். துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அரபாப் பெருவெளியில் மனிதகுலத்திற்காக இறைவனின் இறுதித் தூதர் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள், “மக்களே!, மனிதர்களே!” என்று அழைத்துதான் அந்த உரையைத் தொடங்கினார்கள். “முஸ்லிம்களே!” என்றோ “நம்பிக்கையாளர்களே!” என்றோ அழைக்கவில்லை. அதனால்தான் அந்த உரை முழு மனிதகுலத்திற்காக உரைக்கப்பட்டது என்பது இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு. உரையிலிருந்து சில அம்சங்கள் :

O

மனமுவந்து தராத தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல.

O

ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரைக் காட்டிலும் ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரைக் காட்டிலும் ஒரு கருப்பருக்கு, சிவப்பரைக் காட்டிலும் ஒரு சிவப்பருக்குக் கருப்பரைக் காட்டிலும் எந்தச் சிறப்பும் இல்லை – இறையச்சத்தைத் தவிர!

O

அறியாமைக் காலத்துப் பழி வாங்குதல் அனைத்தும் ரத்துச் செய்யப்படுகின்றன.

O

இரவல் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே! கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும்.

O

வட்டி அனைத்தும் தடை செய்யப்படுகின்றது.

O

உங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள். உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களுள் அதிகாரம் உடையவருக்குக் கட்டுப்படுங்கள். உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்.

O

அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள். அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள். திருடாதீர்கள். விபச்சாரம் செய்யாதீர்கள்.

O

உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் காலமெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.

O

பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களை அனுபவிக்கின்றீர்கள்.

O

ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார். தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான்; மகன் செய்யும் குற்றத்திற்குத் தந்தை பொறுப்பாளியாக மாட்டார்.

oOo 

இஸ்லாமிய வரலாற்றின் மைல்கற்களான இந்த நிகழ்வுகளை இங்குக் குறிப்பிடக் காரணமே, இத்தகைய எளிய சிறந்த பண்புகளைத்தான் இஸ்லாம் சொல்கிறது; இதுதான் இஸ்லாமிய வாழ்வின் சாரம் என்பதைச் சொல்வதற்காகத்தான்.

நிலாக்கள் தோன்றும், இன்ஷா அல்லாஹ்.


[1] http://en.wikipedia.org/wiki/Mary_in_Islam

[2] The last Sermon of Prophet Mohamed (pbuh).

[3] History.of.the.Decline.and.Fall.of.the.Roman.Empire – Edward Gibbon.

[4] Islam A Short Histroy – British Author  Karen Armstrong.