மொழிமின் – அத்தியாயம் 7 (நிறைவு)

நேர்மறையான தகவல் தொடர்பு

எதிர்மறையாக – negative approach – பேசுவதும் எழுதுவதும் எந்தளவு கேடோ, தவறோ, அதற்கு எதிர்மாறாய் நேர்மறையான தகவல் தொடர்பு – positive approach – ஆரோக்கியம், நலம்.

அது நாம் உறவாடுபவரிடம் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்து, சுமுகமான சூழ்நிலை உருவாக வழிவகுத்து விடுகிறது. இதற்கு அர்த்தம், இல்லாததைச் சொல்ல வேண்டும் பொல்லாததைப் புகழ வேண்டும் என்பதல்ல. எளிய நேர்மறைப் பேச்சு.

மதிப்பெண் ரிப்போர்ட்டை நீட்டுகிறார் உங்கள் வாரிசு. அனைத்துப் பாடங்களிலும் ஆக உயர்ந்த மதிப்பெண். ஒரே ஒரு பாடத்தில் மட்டும் சராசரி. அந்தப் பாடத்திலும் அவர் சிறப்பாக விளங்க அவரை உற்சாகப்படுத்த வேண்டும். என்ன செய்யலாம்? “பிரமாதம். எல்லாப் பாடங்களிலும் கலக்கியிருக்கே. வெரி குட். இந்தத் தமிழ்ப் பாடத்தையும் நீ சரிபண்ணிட்டா, ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துடுவே போலிருக்கே!” என்று சொன்னால் போதும். அது அவருக்குள் எத்தகைய மாற்றத்தை நிகழ்த்தும் என்று நினைக்கின்றீர்கள்?

நல்ல அம்சங்களை, ஒருவரிடம் நேர்மறையாகக் குறிப்பிட்டுப் பேசினாலே போதும், அவருக்கு நம்மிடம் இணக்கம் தோன்றும். தம்மைப் பற்றிய தன்னம்பிக்கை பெருகும். பிறகு அவர் நம்மிடம் மனம் திறந்து பேச, இணைந்து செயலாற்ற, பணியாற்ற தடை, தடங்கல் இருக்காது.

வாய்மை

மேற்சொன்னதின் தொடர்ச்சிதான் வாய்மை. நம் மனத்தில் உள்ளதை, நம் மனவோட்டத்தைத் தெரிவிக்க, பொய் கலப்பற்ற மெய்யான தகவல் பரிமாற்றமே சரியான வழி. இருவருக்கு இடையே கடுமையான பிரச்சினை, சிக்கல். அவர்கள் அதைக் களைய முற்படும்போது மிகையின்றி உண்மையை உரைப்பதே சிறப்பு. தம் பக்கம் பிழையிருந்தால் கூச்சமின்றி மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். மாறாக அதை மூடிமறைக்க சுற்றி வளைப்பதும் பொய் சொல்வதுதான் அருவருப்பு. மனம் திறந்து மெய் பேசும்போது பிரச்சினைகளின் கடுமையை அது இலேசாக்கி, தீர்வு காணவும் முடிவை எட்டவும் அது பேருதவி புரியும். பொய் எனப்படுவது தற்காலிக நிவாரணம் அளிக்கலாம், பிரச்சினையைத் திசை மாற்றலாம். ஆனால் விரைவில் பல்லிளித்துவிடும்.

ஃபோட்டோஷாப் மாய்மாலங்கள் விரைந்து நிறமிழப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

செவியுறல்

குறுக்கிடாமல் கவனமுடன் செவியுறுவது உரையாடலில் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய அம்சம். உரையாடுபவரது கருத்தை முழுக்க உள்வாங்க அது முக்கியம். மறுப்பதாகவே இருந்தாலும் அவர் பேசி முடித்தபிறகே நமது கருத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். நேர்மையான தகவல்தொடர்பு அவ்விதம்தான் அமைய வேண்டும். இடை புகுந்து வாய்ச் சவடால் புரிவது அநாகரிகம். அநீதியாளர்கள் பின்பற்றும் வழிமுறை. அவர்களை நீங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கவனித்திருப்பீர்கள்.

கவனமுடன் செவியுற வேண்டும் என்றதும் அதற்கு அர்த்தம் ஒன்றும் பேசாமல் வெறுமே வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி சிலைபோல் அமர்ந்திருப்பது என்று நினைத்துவிடாதீர்கள். பெற்றோரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ வசவு வாங்கும்போது அப்படித்தான் அமர்ந்திருப்போம். இது இருதரப்பும் கலந்துகொள்ளும் தகவல் தொடர்பு. எனவே மௌனமாய் செவியுறும்போதும் தலையசைப்பு, முக பாவம், சுருங்கி விரியும் கண்கள் போன்ற உடல் மொழிகளின் மூலம் நாம் அந்த உரையாடலில் பங்கு பெற வேண்டும். இயல்பாகவே இது நம்மிடம் அமைந்திருப்பதுதான். அதைச் செம்மையாக கருத்துணர்ந்து பயன்படுத்த வேண்டும். அவ்வளவே.

இதை வாசித்தீர்களா? :   மொழிமின் (அத்தியாயம் – 1)

‘நான்’ மொழி

பொதுவாக “நான்” என்பது அகம்பாவத்தை, கர்வத்தை வெளிப்படுத்தும் சொல். ‘நான்தான் செய்தேன்; நான்தான் சொன்னேன்; என்னால்தான் அது நடந்தது’ போன்றவற்றில் அடங்கியிருக்கும் ‘நான்’ அது. அதனால் சிலர் தன்னடக்கமாக ‘அடியேன்’ என்று குறிப்பிடுவதுண்டு. (அடியேனும் போலி தன்னடக்கம், தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று என் நண்பர் விளக்கி அறிவுறுத்தியது தனி விஷயம். வேறொரு கட்டுரைக்கான சமாச்சாரம்).

ஆனால் ‘நான்’ என்பதை நேர்மறையாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்த வேண்டும். மற்றவரைக் குறை சொல்வதைத் தவிர்க்க, குற்றம் சாட்டாமலிருக்க ‘நான்’ மொழியைக் கையாள வேண்டும். எப்படி?

மகளோ, கணவரோ ஒவ்வொரு நாளும் தாமதாகவே வீடு திரும்புகின்றார்கள். அதற்கு அவர்களுக்குத் தகுந்த காரணமும் இருக்கலாம். ஆனால் நாட்டு நடப்பு, சாலை விபத்து என்று பற்பல கவலை உங்களுக்கு. அதனால் அவர்கள்மீது பாச கோபமும்கூட.“தினமும் லேட்டாகவே வருகிறாயே. நேரத்தோடு வீட்டிற்கு வந்து சேர்” என்று அதட்டாமல் மாற்றிச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்? நான் மொழியை இங்குச் சேர்க்க வேண்டும்.

“நீ தாமதமாகவே வருவதால் நான் தினமும் கவலைகொள்ளும்படி ஆகிவிடுகிறது…” என்று ஆரம்பித்து அறிவுறுத்தும்போது இங்கு குறை மறைந்துபோய் உங்களது அன்புதான் வெளிப்படும்.

அடுக்களையில் எந்நேரமும் உழைத்துக் கொட்டும் இல்லாளை மேற்கொண்டு ஏவாமல், “நான் காய் நறுக்கித் தரவா? நான் இறைச்சியை சுத்தப்படுத்தவா?” என்று சொல்லிப் பாருங்கள். “அதெல்லாம் வேண்டாம். நீங்க உட்காருங்க” என்று சொல்லிவிட்டு, பிறகு அவர் உங்களுக்குப் பரிமாறும் உணவில் ஒருபிடி சுவை கூடுதலாகக் கலந்துள்ளதை உணரலாம்.

முன்மொழிதல்

குடும்பமோ, நிறுவனமோ பிறரிடம் வேலை வாங்க வேண்டியிருக்கிறது; அவர்களின் தவறான செயல்களைத் தடுக்க வேண்டியிருக்கிறது. இதில் பல சமயங்களில் நாம் முடிவெடுத்துப் பிறரை ஏவும் காரியம் உதவாக்கரையானதாகக்கூட இருக்கலாம். கட்டளையும் அதிகாரமுமாக நாம் அவற்றைத் தெரிவிக்கும்போது பின் விளைவுகள் சிறப்பாக இருப்பதில்லை. ஒன்று, காரியம் வேண்டா வெறுப்பாக நடக்கும். இரண்டாவது, நாம் ஏவும் காரியம், சொல்லும் கருத்து தவறானதாக இருந்தால் அச்சத்தாலோ, வெறுப்பாலோ அது நமக்குத் தெரியப்படுத்தப்படாமல் போகக்கூடும். ஆரோக்கியத் தகவல் தொடர்புக்குப் பெரும் இடைஞ்சல் இவை.

எனவே, “இதை இப்படி செஞ்சுத் தொலையேன்” என்பதற்குப் பதிலாய், “இதை இப்படி செய்தால் சிறப்பாக இருக்குமே!” என்று முன்மொழிவது நல்லது. அது இலகுவான தவல் பரிமாற்றம். நாம் அவரை மதிக்கிறோம் என்பதை உணர்த்தும் பக்குவம். விளைவு? அவர் அந்தக் காரியத்தை முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளாமல் செய்து முடிப்பார். அல்லது நாம் இடும் பணி, தெரிவிக்கும் கருத்து தவறெனில் அச்சமின்றித் தம் கருத்தைத் தெரிவிப்பார்.

இதை வாசித்தீர்களா? :   மொழிமின் (அத்தியாயம் – 6)

பச்சாதாபம்

பிறரிடம் பாச்சாதாபம் கொள்வது என்பது அவர்களை நாம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு. அவர்களுடைய நிலையில் நம்மை வைத்துப் பார்க்கும்போதுதான் அவர்களது கண்ணோட்டத்தில் பிரச்சினையை நாம் உணர முடியும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் தவறேதும் இழைக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும் இது முக்கியம். வெற்றிகரமான தகவல் தொடர்புக்குப் பிறரைப் புரிந்துகொள்வதும் அவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதும் அவசியம். அன்பும் அனுசரணையும் உருவாக, வளர அது உதவும். அவை இன்றி நாம் எதைச் சாதிக்க முடியும்? பிறரைப் பற்றிய கசப்புணர்வை நம் மனத்திலிருந்து நீக்கினால்தான் வெற்றிகரமான பயனுள்ள தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்த முடியும்.

oOo

தகவல் தொடர்பில் கூடாதவை, பின்பற்ற வேண்டியவை எனப் பட்டியலிட்டு நாம் இதுவரை பார்த்தவை சுருக்கமானவையே. அவை ஒவ்வொன்றும் நமக்குத் தெரிவிப்பவை சில குறிப்புகள் மட்டுமே. அதன் அடிப்படையில் அவரவர் இடம், பொருள், சூழலுக்கேற்ப, உறவு நட்புக்கேற்ப அவற்றைப் புத்திசாலித்தனமாய்ப் பயன்படுத்துவதில் நமது வெற்றி அடங்கியுள்ளது. அத் திறமைகளெல்லாம் ஒருமாதத்தில் கைகூடிவிடும், ஒரே ஆண்டில் உன்னதத்தை அடைந்து விடுவோம் என்று நினைப்பது அதீத நம்பிக்கை.

வாகனம் ஓட்ட விதிகளையும் முறைகளையும் கற்றுக்கொண்டாலும் அதன்பின் சாலைக்கும் குறுக்கே ஓடும் மாடுகளுக்கும் ஏற்பத்தானே தினம்தினம் வாகனத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அப்படித்தான் இதுவும். விபத்தற்ற வெற்றிகரமான தகவல் தொடர்பு என்பது கலை. அனைவருக்கும் சாத்தியப்படும் கலை. பயில்வோம். மொழிவோம்.

-நூருத்தீன்