உலக மகளிர் தினமும் மகளிருக்கான ஒதுக்கீட்டில் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பும்!

Indian Muslim Women demanding reservation
Share this:

 

இன்று (8.3.2010) அகிலம் முழுவதும் உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே! 1857ஆம் ஆண்டு இந்திய முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்தபோது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெண் தொழிலாளர்களுக்கான குறைந்த ஊதியத்தினை எதிர்த்து முதல்குரல் எழுப்பி, காவல் துறையினரின் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ரத்தம் சிந்திய தினம் இன்று.

 

ஆனால் அந்த உரிமை, கலப்பின இஸ்லாமிய வம்சாவழியில் வந்த பராக் உபாமா ஜனாதிபதியான பின்புதான் 2009ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக ஆண்களுக்கு சமமான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட்டது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலுல்லாஹ்வின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் சம உரிமை பெற்று, ஆண்களுக்குப் பெண்கள் ஆடையாகவும், பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும் வாழ்க்கையில் திகழ வேண்டிய நெறி முறைகளை அல்லாஹ் குர்ஆனிலே ஆணித்தரமாக எடுத்துச் சொல்லிவிட்டான்.

1996ஆம் ஆண்டு முதன்முதலில் தேவகௌடா பிரதமராக இருந்தபோது பெண்களுக்கான ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்து, மசோதாவில் முஸ்லிம்கள் மற்றுமுள்ள பிற்பட்டோருக்கு ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்பு 1998, 1999, 2002, 2003, 2008 ஆகிய ஆண்டுகளிலும் அதே மசோதா கொண்டு வரப்பட்டு அதே காரணத்திற்காக நிறைவேற்றப்படவில்லை. கடந்த நாடாளுமற்றத் தேர்தலில், யு.பி.ஏ மத்தியில் அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்ததால் ப.ஜ.க துணையோடு எப்படியாவது மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.


மகளிர் ஒதுக்கீடு மசோதா அரசியல் சட்டப் பிரிவு 81இன்படி கொண்டு வரப்படுகிறது. அந்தச் சட்டப்பிரிவு என்ன சொல்கிறது? நாடாளுமன்றத்தில் மக்களவையிலும் மாநிலத்தில் சட்டசபையிலும் மகளிர் ஒதுக்கீடு அரசியல் சட்டப்பிரிவு 15(3)இன்படி கொண்டு வரலாம். ஆனால் நாடாளுமன்ற ராஜ்ய சபாவிலோ, மாநில மேல்சபையிலோ ஒதுக்கீடு கொண்டு வர முடியாது. சரி, மகளிர் மசோதாவிற்கு என்ன அவசரம் என்று கேட்கலாம். அரசியல் சட்டம் இயற்றப்பெற்ற பிறகு 1952 முதல் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு 4.4 விழுக்காடுதான். 1977ஆம் ஆண்டு மக்களவைக்கு நடந்த தேர்தலில் பெண்களின் பங்கேற்பு வெறும் 3.5 விழுக்காடுதான். 2004ஆம் நடந்த மக்களவைக்கு நடந்த தேர்தலில்தான் பெண்களின் பங்கேற்பு மொத்தம் உள்ள 543 இடங்களில் 10 சதவீதத்தினை எட்டியது.  2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்கள் 59 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இதில் என்ன வேடிக்கையென்றால் 59 பெண் எம்.பிக்களில் 36 பெண்கள் மந்திரிகள், மற்றும் அரசியல் தலைவர்கள் வீட்டுப் பெண்கள் ஆவர்.  ஆகவேதான் யு.பி.ஏ.விலுள்ள தலைவர்களும் பி.ஜே.பியில் உள்ள தலைவர்களும் பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுத்தால் வாழ்க்கையின் மேல்தட்டில் இருக்கும் பெண்களும் மெஜாரிட்டியாக உள்ள இந்து மதப்பெண்களும் பலன் பெற முடியுமென என எண்ணி முண்டியடித்துக் கொண்டு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றி விடத் துடிக்கின்றன.


மகளிர் ஒதுக்கீடு தேவைதான்; அதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. ஆனால் சமுதாயத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் தலித் மக்களைவிட முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளார்கள் என்று நீதிபதி சச்சார் அறிவித்த பின்பும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலன் கருதி அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கைப்படி 27 சதவீத ஒதுக்கீடு கல்வியிலும், வேலையிலும் அவர்களுக்கு சலுகை கொடுத்த பின்பும் முஸ்லிம் மகளிர்க்கும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் உள் ஒதுக்கீடு மகளிர் மசோதாவில் இல்லை என்பதால் இந்தச் சமூகங்களின் மகளிரை ஏமாற்றும் மசோதாவாக இப்போது முன்வைக்கப்படும் மசோதாவைக் கருத வேண்டியுள்ளது. முன்னாள் மண்டல் கமிஷ நாயகர் வி.பி. சிங் நம்மிடையேயில்லை. அவர் இருந்திருந்தால் நிச்சயமாக முஸ்லிம் பெண்களுக்கும் பிற்பட்ட சமுதாயத்திற்கும் குரல் கொடுத்திருப்பார். ஆனால் அவர் சார்பாக சமஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஜே.டி.(யு) கட்சித் தலைவர் சரத் யாதவும், முன்னாள் பிரதமர் தேவகௌவுடாவும் உள் ஒதுக்கீடுக்காகப் போராடுகிறார்கள். “எங்கள் எம்.பி. பதவி போனாலும் பரவாயில்லை; நாங்கள் உள் ஒதுக்கீடு பெறாமல் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்” என உறுதியுடன் உள்ளனர். ஆனால் முன்னாள் மண்டல் கமிஷன் நாயகரான  வி.பி.சிங்கிற்கு சங்கடமான நேரத்தில் ஆதரவு கொடுத்த சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், “இப்போது பெண்கள் ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம். பின்பு முஸ்லிம்களுக்கும், பிற்பட்டோருக்கும் உள் ஒதுக்கீடு பற்றி யோசிப்போம்” எனக் கூறுகிறார்கள். ‘பார்க்கலாம்’, ‘யோசிக்கலாம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அல்லர் முஸ்லிம்களும் பிற்பட்ட மக்களும்.


ஆந்திர மாநிலத்தினைச்சார்ந்த மஜ்லிஸ் கட்சி எம்.பி. உவைஸி மசோதாவை எதிர்க்கிறார். மகளிர் மசோதாவில் முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் எனக் குரல் கொடுக்கிறார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இரண்டு எம்.பிக்களும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி எம்.பியும் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா?


1952 தேர்தலுக்கு முன்பு மாகாண-பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 15 விழுக்காடு பெற்றிருந்தனர். ஆனால் இன்று 543 எம்.பிக்கள் கொண்ட மக்களவையில் வெறும் 30 முஸ்லிம் எம்.பிக்கள்தாம் உள்ளனர். அது 5.5. விழுக்காடுதானே. அதில் பெண்கள் இருவர் உள்ளனர். அவர்களில் பி.எஸ்.பியினைச் சார்ந்த தபஸ்ஸும் பேகமும், காங்கிரஸைச்சார்ந்த மௌசம் நூரும் ஆவர். 543 எம்.பிக்கள் கொண்ட மக்களவையில 5..5 விழுக்காடுதான் முஸ்லிம் எம்.பிக்கள் இடம் பெற்றிருக்கின்ற நிலையில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் மூன்று விழுக்காடு எம்.பிக்கள்கூட அடுத்த மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படுவது சந்தேகமே!


ராஜீவ் பிரதமராக இருந்தபோது ‘பஞ்சாயத்து ராஜ்’ என்ற பஞ்சாயத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு கொண்டு வந்தார். அதன் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பஞ்சாயத்துகளிலும், நகரசபையிலும் முஸ்லிம் பெண்கள் தலைவர்களாக வந்தனர். ஆனால் மாநகராட்சிகளான சென்னையிலும் கோவையிலும் பெண்கள் மாநகராட்சிகளான திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றிலும் முஸ்லிம் பெண்கள் மேயராக வரமுடியுமா? அரசியல் கட்சித் தலைவர்களும் மெஜாரிட்டி ஜாதிப் பெண்களைத்தான் அந்தப்பதவிக்கு போட்டிபோடத் தேர்ந்தெடுப்பர். அதுதான் மேற்குறிப்பிட்ட  மாநகரங்களில் நடப்பில் உள்ளது என்பது கண்கூடாகத் தெரியும்போது, பிற்பட்ட மைனாரிட்டி சமூகத்தினைச் சார்ந்த பெண்கள் அந்த 33 விழுக்காடு ஒதுக்கீடில் போட்டிப் போட்டு வெற்றிபெற முடியுமா? நிச்சயமாக முடியாது.


உதாரணத்திற்கு 1962ஆம் ஆண்டு எங்களூர் இளையாங்குடியினை உள்ளடக்கிய மானாமதுரை சட்டமன்றத் தேர்தலுக்கு எங்களூரைச் சார்ந்த அமீன் நைனார் ஹவுத் அவர்களைக் காங்கிரஸ் கட்சி, தன் வேட்பாளராக நிறுத்தியிருந்தது. தேவர் இனத்தினரும் சுதந்திராக் கட்சியைச் சார்ந்தவருமான சீமைச்சாமியினை அந்தக்கட்சி நிறுத்தியிருந்தது. முஸ்லிம்களும், தலித் யாதவ மக்களும் அமீன் நைனார் ஹவுத் அவர்களுக்கு ஓட்டுப் போட்டிருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் அமீன் நைனார் ஹவுத் தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்பு இளையாங்குடி தனித்தொகுதியாக 1967ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்வரை முஸ்லிம் அல்லாதவர்கள்தாம் அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏக்களாக இருந்து உள்ளனர். இவ்வளவிற்கும் அந்த எம். எல். ஏக்கள், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இளையாங்குடியினையோ அல்லது ஆர்.எஸ்.மங்களத்தையோ சார்ந்தவர்களல்லர். அதேபோன்றுதான் கீழக்கரை கடலாடித் தொகுதியிலிருந்தபோது எந்த முஸ்லிமும் எம்..எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. முஸ்லிம் ஆண்களுக்கே முஸ்லிம் சார்ந்த ஊர்களில் எம்.எல்.ஏ கனவு எட்டாக்கனியாக இருக்கும்போது முஸ்லிம் பெண்கள் நிலையைச் சற்றே யோசித்துப் பாருங்கள்; பரிதாபமாகத் தெரியவில்லையா?


தமிழக்தில் 234 எம்.எல்.ஏக்கள் உள்ள சட்டமன்றத்தில் 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீனத் சர்புதீன் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன் பின்பு அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏவாக பதர் செய்யது 2006 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் இதைவிட மோசம். 34 பெண் எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட முஸ்லிம் பெண்ணல்ல. ஆகவே முஸ்லிம் பெண்கள் அத்திப்பூத்தது போன்றுதான் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழக சட்டமன்றத்திலே முஸ்லிம் பெண்கள் இடம்பெற்ற இடைவெளி 15 ஆண்டுகள் ஆனது என்றால் நாடாளுமன்றத்தில் இடம்பிடிக்க, குதிரைக்குக் கொம்பு முளைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அதுவும் இந்த இட ஒதுக்கீடு மசோதா 15 ஆண்டுகளுக்குப் பின்பு காலாவதியாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நியாயமான திருத்தங்கள் ஏதுமின்றி, மசோதா நிறைவேறிவிட்டாலும் ‘பார்க்கலாம்’, ‘யோசிக்கலாம்’ போன்ற வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு நமது அரசியல்வாதிகளுக்கு 15 ஆண்டுகளை ஓட்டுவதில் சிரமம் ஏதுமிருக்காது.


நமது பிரதமர் 7.3.2010 ஒரு மகளிர் நிகழ்ச்சியில் டெல்லியில் பேசும்போது, “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாலினபாகுபாடு எதிரொலிக்கிறது. பொருளாதார வளர்ச்சியினால் ஆண்களில் 51 சதவீதம் பயனடைந்துள்ளனர்; ஆனால் பெண்கள் 25.7 சதவீதம்தான் பயனடைந்துள்ளனர் என்ற புள்ளி விபரத்தினையும் சொல்லியிருக்கிறார். அந்த 25.7 சதவீதப் பெண்களில் எத்தனை சதவீதம் முஸ்லிம் பெண்களென்றால் ஒருகையின் விரல்களுக்குள் எண்ணக்கூடியதாகவே இருக்கும். பொருளாதாரத்திலே மொத்தப் பெண்களும் பின்தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லும்போது நீதிபதி சச்சார் சொன்னதுபோல, அரசியலில் இன்று முஸ்லிம் பெண்கள் படுபாதாளத்தில் உள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை. அதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழக, ஆந்திர சட்டமன்ற, மக்களவை முஸ்லிம் பெண்கள் பங்கேற்பினை உதாரணமாக வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.


ஒருவேளை எதிர்ப்புக்களிடையே மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம் பெண்களினை அரசியல் விழிப்புணர்வு ஊட்டத் தயாராக வேண்டாமா? அவர்களுக்குப் பொதுக்கல்வியுடன் அரசியல் கல்வியும் பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் புகட்ட வேண்டும். அவையாவன எனப்பார்க்கலாம்:

  1. மக்களவை-சட்டமன்றங்களில் உறுப்பினர் ஆவதற்கு என்னன்ன தகுதிகள் வேண்டும்?

  2. சட்டமன்ற-மக்களவை அமைப்புமுறை எவ்வாறு இருக்கிறது?

  3. நமது நாட்டின் பிரதமர், மாநில முதல்வர், மத்திய-மாநில அமைச்சர்கள், சபாநாயகர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவர்களது பொறுப்புகள் யாவை? அவர்களின் ஊதியம் எவ்வளவு?.

  4. மக்கள் பிரதிநித்துவச் சட்டம் சொல்வது என்ன?.

  5. அரசியலைமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டிகள் சம்மந்தப்பட்ட முக்கிய பிரிவுகள் யாவை?

  6. வேட்புமனு தாக்கல் செய்வது எவ்வாறு?. அதற்குத் தேவையானவை யாவை? பத்திரங்கள்-உறுதிமொழிகள்.

  7. வாக்காளர் பட்டியலில் எவ்வாறு பெயர்களைச் சேர்ப்பது?.

  8. வார்டு-பூத் வாரியாக எப்படிப் பிரித்தமைத்து ஆதரவு தேடுவது?.

  9. மக்களவை-சட்டமன்றத் தேர்தல் செலவு வரம்புகள் யாவை?, தேர்தல் முடிந்ததும் செலவினங்களை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டிய முறை.

  10. தேர்தல் விதிமுறைகள் யாவை?.

மேற்கூறியவை சில அறிவுரைதாம். அனுபவத்தில் தெரிந்து கொள்ளவேண்டியது ஏராளமாக உள்ளது. அவற்றை அனுபவங்கள் மூலமாகத் தெரிந்து கொள்வதற்கு நமது சமுதாயப் பெண்கள் அரசியலில் பங்காற்றத் துணிய வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் பெண்கள் நாட்டின் கண்களாக மட்டுமல்லாது, சமூதாயத்தினை நிலை நிறுத்தும் தூண்களாகவும் மாறமுடியும் என் சொந்தங்களே!

 

முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.