நான் அறிவாளியா? அடிமுட்டாளா?

பெரியாரின் தொண்டர் மணி என்ற சுப்ரமணி அவர்களுக்குச் சொந்தமான காலனியில் நான் குடியிருந்த காலகட்டத்தில் பெரியாரின் நூல்கள் பலவும் படிக்கக் கிடைத்தன. அதே காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துடன் எனக்குத் தோழமை ஏற்பட்டிருந்தது. நமச்சிவாயத்தை நட்பு வட்டாரத்தில் ‘நமசு’ என விளிப்போம். ஒரே மாவட்டம், ஒரே தொழில், சம வயது என்பதால் எனக்கும் நமசுவுக்கும் நட்பில் இறுக்கம் ஏற்பட்டுப் போனது. படிப்பதில் எனக்கிருக்கிருந்த ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு சிறு,சிறு நூல்களை எனக்கு நமசு தருவான். எல்லாம் ரஷ்ய மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறு நூல்கள்.

ஒருநாள் கனத்த நூல் ஒன்றைக் கொண்டுவந்து தந்து, “இதைப் படித்துப் பார்” என்றான் நமசு. முதல் வாசிப்பில் சரியாக விளங்கவில்லை. திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தபோது, முதலாளித்துவம், பொருளாதார அரசியல், உழைப்பின் கூடுதல் மதிப்பு, முதலாளித்துவச் சுரண்டல் போன்றவை கொஞ்சங் கொஞ்சமாக விளங்கின. கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு நமசுவுடன் நானும் சென்று கலந்துகொள்வது வழக்கமானது. நானும் ஏறத்தாழ ‘தோழர்’ ஆகிக்கொண்டு வந்ததாகத்தான் நினைக்கிறேன்.

எனக்கும் நமசுக்கும் பழக்கமான ‘தோழர்’ குடும்பம் ஒன்றிருந்தது. நான்கு பிள்ளைகள் இருந்த குடும்பத்தில், பெற்ற தாயை அவரது வயோதிக காலத்தில் எவருமே கவனிக்காமல் உதாசீனப்படுத்திவிட்டனர். இத்தனைக்கும் நால்வரில் மூவர் கம்யூனிஸ்ட்காரர்கள். இறந்துபோன குடும்பத் தலைவர், தம்  மனைவிக்கென்று எதுவும் சேர்த்து வைக்காததால் பிறரிடம் கையேந்தும் அவல நிலைக்கு அந்தத் தாய் தள்ளப்பட்டார்.

நாத்திகனா என் இன்னொரு நண்பன் செல்வம், நடனக்காரி ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான். ஒரே மகனைச் செல்லம் கொடுத்து வளர்த்து, ‘கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுவான்’ என எதிர்பார்த்திருந்த பெற்றோர் நிர்க்கதியாயினர்.

இந்த இரு அவல நிகழ்வுகளுக்கும் காரணம் கம்யூனிஸமும் நாத்திகக் கொள்கையும்தான் என்று நான் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நான் அறிவாளியா? அடிமுட்டாளா?

***

வினவு தளத்துக்கு இம்மாதக் கோட்டாவுக்கான இஸ்லாமிய சரக்குக் கிடைக்காமல், 1999 டிசம்பரில் புதிய கலாச்சாரம் இதழ் வெளியிட்ட ‘அபின்‘ என்ற ஒரு சிறுகதையை மறுபதிப்புச் செய்திருக்கின்றனர்.

  • சொந்த சகோதரன் ஊரில் பெரிய பணக்காரனாக இருந்தும் அப்பாஸ் என்பவர் மண்ணென்னை வண்டி ஓட்டிப் பிழைக்கும் ஏழையாக இருக்கிறார்.
  • பாகம் பிரித்துக் கொடுத்ததில் பணக்கார அண்ணன், தம்பி அப்பாஸை ஏமாற்றிவிட்டார். அப்பாஸ் ஒரு சர்க்கரை வியாதிக்காரர்.
  • ஊர்க்காரர்கள் அநியாயத்தைத் தட்டிக் கேட்கவில்லை.
  • ஏழை அப்பாஸுக்கு ஒருவரைத் தவிர வேறு யாரும் உதவி செய்யவில்லை.
  • அப்பாஸின் மனைவி, பேருந்தில் அடிபட்டுப் படுகாயமடைகிறார்.
  • சர்க்கரை வியாதியால் மிகுந்த வேதனைப்பட்டு, கடைசியில் அப்பாஸ் இறந்து போகிறார்.
இதை வாசித்தீர்களா? :   ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?


சோகமான கதைதான்!

கதையைவிடப் பெருஞ்சோகம் இன்னொன்றுண்டு.

மேற்காணும் அனைத்துக்கும் ‘இஸ்லாம்’ எனும் அபின்தான் காரணம் என்று கதாசிரியரான மருத்துவர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் கதையை முடிக்கிறார்.

மருத்துவர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் என்பவர் அறிவாளியா? அடிமுட்டாளா? என்பதை சக வாசகர்கள்தாம் சொல்லவேண்டும்.

– சஃபி