தோழர்கள் – 8 – அபூதர்தா – أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

 

அபூ தர்தாவை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்றார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் உவைமிர் அபூதர்தா. மதீனாவின் முஸ்லிம் ஆணுக்கும் புலம்பெயர்ந்து குடிவந்த முஸ்லிம் ஆணுக்கும் இடையில் சகோதர உறவை ஏற்படுத்தியிருந்தார் நபிகளார். குல வேற்றுமையை நீக்கி, ஒற்றுமையை வலுப்படுத்தவும் பொருளாதாரச் சுமைகளை இலேசாக்கவும் அத்தகைய ஏற்பாடு. அதனால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவிற்குப் பதிலாய் ஸல்மான் அல்-பாரிஸீ அபூ தர்தாவின் சகோதரனாகிப் போனார்.

நுழைந்த அந்த நொடியிலிருந்து நேரெதிர்த் திசைக்குத் திரும்பியது அவரது வாழ்க்கை. என்னவோ தெரியவில்லை, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய நபியின் மீதும் அவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை, வலுவாய், மிக வலுவாய் அவரது ஒவ்வொரு நரம்பினுள்ளும் அசகாய சக்தியுடன் ஊடுருவிப் பாய்ந்து விட்டது.

அபூதர்தாவின் தொழிலோ வியாபாரம். அதில் அவர் கெட்டிக்காரரும்கூட. திறம்பட வெற்றிகரமாய்த் தொழில் நடத்திக் கொண்டிருந்தவர் அவர். வெற்றிகரமான வியாபாரி இயற்கையாய்க் கணக்கிலும் கெட்டியாகத்தானே இருக்க வேண்டும். அதனால் அவர் என்ன செய்தாரென்றால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவுடன் ஓர் ஓரமாய் அமர்ந்து கணக்குப் போட ஆரம்பித்து விட்டார். தனக்கு முன் இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட தன் நண்பர்களையெல்லாம் யோசித்துப் பார்த்தார். எந்தளவு நற்காரியங்கள் அவர்கள் புரிந்திருப்பார்கள், எந்தளவு இஸ்லாத்தைக் கற்றுக் கொண்டிருந்திருப்பார்கள், எந்தளவு குர்ஆனில் தேர்ச்சிப் பெற்றிருப்பார்கள், எந்தளவு இறைவனை வழிபட்டுக் கூலி சேர்த்திருப்பார்கள் என்று கணக்குப் போட்டு, கூட்டக் கூட்ட, தன்மேல் அவருக்கு அளவற்ற கழிவிரக்கமே ஏற்பட்டு விட்டது. புதிதாய்ச் சேர்ந்த தன்னையும் அவர்களையும் ஒப்பிட்டால், இறைவனிடம் அவர்களுக்கு எத்தகைய கூலி சேமிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். “சே! எவ்வளவு தவற விட்டுவிட்டேன் நான். அன்றே இஸ்லாத்தில் சேராமல் போனேனே! நானும் இன்று அவர்களுக்கு இணையான தனவந்தனாகியிருப்பேனே!” என்றெல்லாம் அவர் மனம் அல்லாட ஆரம்பித்துவிட்டது. தனவந்தன் என்றால் பணத்தில் அல்ல! இவரிடம்தான் அது தேவையான அளவு உள்ளதே! விசனப்பட்டது தவறவிட்ட நற்கூலிக்கு.

பணம், காசு பார்த்து வெற்றியடைந்த வியாபாரி அதையெல்லாம் கட்டி ஓரமாக வைத்துவிட்டு, விசித்திரக் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். என்னவென்று சொல்வது அந்த ஈமானை? புரட்டிப் போட்டது அவரது வாழ்வை, அந்தச் சிந்தனையும் கணக்கும். உட்கார்ந்து இப்படி பச்சாதபப்பட்டுக் கொண்டிருந்தால் சரிவராது என்று ஒரு தீர்மானத்துடன் துள்ளி எழுந்தார் அபூதர்தா. இத்தனை நாள் விட்டுப் போனதை எப்படியும் ஈட்டியாக வேண்டும். என்ன செய்யலாம்? குறுக்கு வழியெல்லாம் இல்லை, ஒரே வழி. இரவு, பகலென்று பாராமல், அதிகம், அதிகமதிகம் முயற்சி செய்து  இறை வழிபாடு, நற்காரியங்கள் என்று மூச்சுவிடாமல்… இல்லை விடும் மூச்சையும் நற்செயல்களாக மாற்ற வேண்டியதுதான். இதுவே என் வழி என்று முடித்துக் கொண்டார். மிரள வைக்கும் தீர்மானம் அது.

இதை வாசித்தீர்களா? :   தோழர்கள் 66 - ஸுஹைல் இபுனு அம்ரு (பகுதி-2)

உலக இச்சைகளையெல்லாம் மூட்டை கட்டி எறிந்துவிட்டு இறைவழிபாட்டில் முழு முதற் கவனமும் இறங்கியது. தாகத்தால் உயிர் போகும் நிலையில் இருப்பவன் தண்ணீரை எப்படித் தேடி அலைவான்? அதைப் போல இஸ்லாமியக் கல்வி ஞானத்தை அள்ளி அள்ளிப் பருக ஆரம்பித்தார் அபூதர்தா. அதுவும் சுனை பெருக்கெடுத்து வருவதைப்போல நபிகளாரிடமிருந்து நேரடியாக வரும்போது வேறென்ன வேண்டும்? குர்ஆனை எடுத்து வைத்துக் கொண்டு ஓதினார்; மனனம் செய்தார்; அதன் அர்த்தம் புரிய இறங்கியவர் அதனுள் மூழ்கியே போனார்.

பதவி இச்சைக்கும் அதிகாரத்திற்கும் தொழில் வெற்றிக்கும் பணத்திற்கும் என்றுதானே போட்டி பார்த்திருக்கிறோம். அபூதர்தா தனியானதொரு தளத்தில் தான் நிர்ணயித்துக் கொண்ட ஓர் இலக்கை நோக்கி ஒருவித வெறியுடன் ஓடிக்கொண்டிருந்தார். அதை அறவெறி என்று வேண்டுமானால் சொல்லலாம். ரலியல்லாஹு அன்ஹு!

இப்படியெல்லாம் வாழ்க்கை மாறிப் போனால் ஒரு வியாபாரிக்கு என்ன ஆகும்? தொழிலில் எப்படி கவனம் குவியும்? தனது ஓட்டத்திற்கு வியாபாரம் மிகவும் இடைஞ்சலாகப் பட்டது அபூ தர்தாவிற்கு. கடை, பணம், வேலை, ஊழியம் -என்னது இது? இப்படிக் கல்வியிலும் வழிபாட்டிலும் மனதை லயிக்கவிட மறுக்கிறதே இந்த வர்த்தகம் என்று யோசித்தார். ஒரே முடிவு தான் தோன்றியது. கடையை இழுத்து மூடிவிட்டார்! இலாபகரமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்த கடையை ஏன் மூடிவிட்டார் என்று மக்களுக்குப் புரியவில்லை.

ஒருவர் வந்து கேட்டார், “என்ன அபூ தர்தா இது? ஏன் கடையை இழுத்துப் பூட்டி விட்டீர்?”

சாந்தமாக அவரைப் பார்த்தார் அபூதர்தா. தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா? சொல்கிறேன் வா என்பதைப் போல நினைத்தவர், “இதோ வந்திருக்கிறாரே அல்லாஹ்வின் தூதர், அவரை உணர்வதற்குமுன் நான் வணிகனாய் இருந்தேன். பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் தொழிலையும் இறைவனைத் தொழுவதையும் வழிபடுவதையும் ஒருங்கே செய்துகொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதில் என்ன பிரச்சனை என்றால் நான் நாடியதை என்னால் சரியான முறையில் அடைய முடியவில்லை. அதற்கு என்ன செய்வது? எனக்கு வழிபாடுதான் முக்கியம். அதனால் தொழிலைத் துறந்து விட்டேன். யாருடைய திருக்கரத்தில் எனது உயிர் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன், பள்ளிவாசலின் வாயில் அருகே எனக்கு ஒரு சிறுகடை இருந்தால் போதும். நான் ஏதோ என் வாழ்க்கைக்குத் தேவையான சிறு பொருள் ஈட்டிக் கொண்டு அதே நேரம் ஒருவேளைத் தொழுகையைக்கூடத் தவறவிடாமல் இருந்து விடுவேன்”

எனில் வணிகம் தடுக்கப்பட்டதா? பொருளீட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? என்னவிதமான வாதம் இது என்று நம் மனதினுள் கேள்வி எழுமல்லவா? கேள்வி கேட்டவருக்கும் அந்த ஐயம் எழுந்திருக்கக் கூடும். ஆயினும் அவர் கேட்பதற்குமுன் அபூ தர்தாவே பதில் கூறிவிட்டார்:

இதை வாசித்தீர்களா? :   தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

“அல்லாஹ் வியாபாரத்தை, தொழிலை தடைசெய்துள்ளான் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அவன் குர்ஆனில் சிலரை விவரித்திருக்கிறானே, ‘அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு அவர்களை வணிகமும் கொடுக்கல்-வாங்கல் செய்வதும் தடுக்கவில்லை’ என்று, அந்தச் சிலரில் நான் ஒருவனாகி விட விரும்புகிறேன்”

தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, வகுப்பிலேயே முதலாவதாக வர வேண்டும்; இல்லையில்லை பள்ளியிலேயே முதலாவதாக வர வேண்டும்; அதுகூட போதாது. மாநிலத்திலேயே முதலாவதாக வரவேண்டும் என்றெல்லாம் மாணவருக்கும் பெற்றொருக்கும் ஓர் இலக்கு, ஆசை, குறிக்கோள் இருக்குமே அது புரிந்தால் இது ஓரளவு புரியும். அவரது மன ஓட்டத்தை அவருடன் ஓடிப் பார்க்க முடிந்தால் மட்டுமே முழுவதும் புரிய முடியும். ரலியல்லாஹு அன்ஹு!

கடையை மூடியதுடன் நிறுத்தவில்லை அவர். உலக வாழ்க்கையின் யதார்த்த இச்சைகளையும் முழுவதுமாய் ஒதுக்கி விட்டார். உலகின் ஆடம்பரம், கவர்ச்சி இதனையெல்லாம் பார்த்து, “நீ வேண்டாம் போ” என்று புறங்கையால் தள்ளிவிட்டு, மிக எளிமையான உணவு, மிக எளிமையான ஆடை, இது போதும் இவ்வுலக வாழ்க்கைக்கு என்று அமைத்துக் கொண்டார். சுமை அதிகமிருந்தால், தான் மேற்கொண்டுள்ள பயணத்திற்கு அது மிகவும் கடினம் என்பது அவருடைய தீர்மானம். அவருடைய தாயார் ஒருமுறை, “என் மகனுக்கு வாழ்க்கையின் அனுபவத்தைப் படிப்பதும் உணர்வதுமே பிடித்தமான ஒரு செயலாகி விட்டது” என்று பெருமிதப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு ஞானத் தேடலே அவர் வாழ்க்கையின் ஓர் அம்சமாகிவிட்டது.

அதெல்லாம் சரி – மனைவி, பிள்ளைகள்? அதுதான் அடுத்த சிறப்பு. அவர்கள் குறைபட்டு அழுததாகவோ, இதென்ன பஞ்சத்தனமான வாழ்க்கை என்று முரண்டு பிடித்ததாகவோ குறிப்புகள் இல்லை. அமைதியாய், அனுசரனையாய் கூடவே வாழ்ந்திருக்கிறார்கள் அவர்களும். எவ்வளவு பெரிய கொடுப்பினை! இப்படியான புதியதொரு வழித்தடத்தில்,

தொடர்ந்தது அவரது வாழ்க்கை.