சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 63

Share this:

63 நைல் வள பூமி

கிப்திலிருந்து தப்பி ஓடிய ஷவார் அடைக்கலம் தேடி வந்து சேர்ந்த இடம் சிரியா. அபயம் அளித்தார் மன்னர் நூருத்தீன். ஷவாருக்குச் சிறந்த மதிநுட்பம் இருந்தது. பேசி வளைக்கும் நாவண்மை வாய்த்திருந்தது. ஆனால் அவை யாவும் பின்னர் தீவினைகளுக்கு உறுதுணையாகிப் போயின என்பதே கேடு. அது, பிறகு.

சிரியாவில் தஞ்சமடைந்த ஷவார் எகிப்தில் தமது பதவியை மீட்டெடுக்க நூருத்தீனின் உதவியைக் கோரி என்னதான் வாய்கிழியப் பேசிய போதிலும் நூருத்தீன் கேட்டும் கேட்காதவராகவே இருந்து வந்தார். சிரியாவில் தாம் நிகழ்த்திவந்த இராணுவ நடவடிக்கைகளிலும் ஜெருசல இலக்கிலும்தான் தம் கவனத்தைக் குவித்திருந்தார். ஆனால், வலுக்கட்டாயமாக அவரது முகத்தை எகிப்துக்குத் திருப்பியது ஜெருசலம். திருப்பியவர் ஜெருசலத்தின் புதிய ராஜா அமால்ரிக்.

வஸீர் ஷவாரின் ஆட்டத்தை முடித்து வைத்தபின் எகிப்து, பூரண கிரகண பூமியாகக் காட்சியளித்தது. பதினொரு வயது ஃபாத்திமீ கலீஃபாவும் வஸீராக மற்றொரு துஷ்டன் திர்காமும் வீற்றிருக்கும் இந்நேரமே நமக்கு சரியான வாய்ப்பு; அங்கு நிலவும் குழப்பச் சூழல் நமது வெற்றிக்குப் போதுமான ஆதாரம் என்று படையைக் கிளப்பினார் அமால்ரிக். ஏதாவது ஒரு காரணம் வேண்டுமல்லவா? ‘நீங்கள் தர வேண்டிய அறுபதினாயிரம் தீனார்கள் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை, அதனால் இதோ படையெடுத்து வருகின்றோம்’ என்று எகிப்திற்குத் தெரிவித்துவிட்டார். நைல் வள பூமியை ஆக்கிரமிக்க அவருக்கு அந்த எளிய ஒற்றைக் காரணம் போதுமானதாயிருந்தது.

அமால்ரிக்கின் தலைமையில் கிளம்பியது ஜெருசல சிலுவைப் படை. சினாய் தீபகற்பத்தை மத்திய தரைக்கடலின் கடற்கரை ஓரமாகக் கடந்து வந்து பில்பீஸ் நகரை அது முற்றுகை இட்டது. நைல் நதியிலிருந்து கிளையாகப் பிரிந்த ஆற்றின் ஓரம் அமைந்துள்ளது பில்பீஸ். பரங்கியர்களின் படை தங்களைச் சுற்றிச் சூழ்ந்து நிற்பதையும் மும்முரமாக அவர்கள் முற்றுகை இயந்திரங்களை நிர்மாணிப்பதையும் பார்த்து அந்நகர மக்களுக்கு விழி விரிந்தது. வாயடைத்துப் போனது. அச்சத்தினால் அல்ல. வியப்பினால். காரணம்?

அது செப்டம்பர் மாதம். ஆற்றில் நீர் கரை புரண்டு ஓடத் துவங்கும் காலம். அதை அறியாமல் முற்றுகை இட்ட அமால்ரிக்கின் படையை எதிர்க்க அவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. நகர அதிகாரிகள் செய்ய வேண்டியிருந்த வேலையெல்லாம் சில அணைகளைத் திறந்து விடுவது மட்டுமே. ஜெருசலப் படையைச் சுற்றிச் சூழ்ந்தது வெள்ளம். மூழ்கியவர் போக மற்றவர் ஃபலஸ்தீனுக்குத் தப்பிப் பிழைத்து நீர் தெறிக்க ஓடினர். வெகு எளிதாக முறியடிக்கப்பட்டது அந்த முற்றுகை. ஆனால் அமால்ரிக்கின் இந்தப் படையெடுப்புதான் நூருத்தீனின் கவனத்தைத் திருப்பியது, அமால்ரிக்கின் நோக்கத்தையும் அதில் பொதிந்திருந்த அபாயத்தையும் வெளிப்படுத்தியது.

ஒண்ட வந்த ஷவார் தனது சுயநலத்திற்காகப் பலவிதத்தில் நூருத்தீனின் கவனத்தைப் பெற முயன்ற போதும் எகிப்து அரசியலுக்குள் நுழைவதில் நூருத்தீனுக்கு ஏகப்பட்ட தயக்கம் இருந்தது. ஸன்னி முஸ்லிமாக இருந்த நூருத்தீன், பக்தாதின் அப்பாஸிய கலீஃபாவைத் தம் தலைமையாக ஏற்றிருந்தார். மிக வெளிப்படையாக ஃபாத்திமீக்களின் ஷிஆ வழிபாடுகளையும் நடைமுறைகளையும் எதிர்த்து வந்தார். எனினும், தமது முக்கிய இலக்காக ஜெருசலம் அமைந்திருக்க, எகிப்தின் குழம்பிய குட்டைக்குள் ஏன் கால் நனைக்க வேண்டும் என்று தவிர்த்து வந்தார். ஆனால், இப்பொழுது அமால்ரிக்கின் நோக்கம் புலப்பட்டதும், வளம் கொழிக்கும் எகிப்து, பரங்கியர்கள் வசமாவதை வெறுமே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்பது அவருக்குத் தெளிவானது. உள்நாட்டுக் குழப்பத்தால் பலவீனமாகிவிட்ட ஃபாத்திமீக்களின் ராஜாங்கம் அமால்ரிக்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது ஒடிந்து விழும். அப்படி எகிப்து மட்டும் பரங்கியர்கள் வசமாகிவிட்டால் கீழ்த்திசை நாடுகளில் இலத்தீன் கிறிஸ்தவர்கள் பெரும் சக்தி வாய்ந்தவர்களாக மாறிவிடுவர். அது கருத்து வேறுபாடுக்கு இடமற்ற பேரபாயம் என்ற எச்சரிக்கை மணி அவரது மனத்தில் ஓங்கி ஒலித்தது.

oOo

எகிப்தில் தஅலாய் இப்னு ருஸைக் என்றொருவர் வஸீராக இருந்தபோதே பரங்கியர்களுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க நூருத்தீனுக்கு உஸாமா இப்னு முன்கித் வாயிலாகத் தூது அனுப்பியிருந்தார். சிரியாவின் அலெப்போ, டமாஸ்கஸ் விவகாரங்களில் மும்முரமாக இருந்த நூருத்தீன் அச்சமயம் அதில் கவனம் செலுத்தவில்லை. பரஸ்பரம் தூதுவர்கள் வந்தார்கள்; கௌரவிக்கப்பட்டார்கள்; சென்றார்கள். இரு தரப்பிலும் அன்பளிப்புகள் பரிமாறப்பட்டன. அத்துடன் நின்று போயிருந்தது அவ்விவகாரம். ஆனால் இப்பொழுது? விடுவாரா ஷவார்? பில்பீஸ் முற்றுகை நிகழ்வைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். நூருத்தீன் எகிப்தை நோக்கிப் படை அனுப்ப வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை வாய்ப்பாடுபோல் ஒப்பிக்க ஆரம்பித்தார். இறுதியாக நூருத்தீனிடம் ஒப்பந்தமும் முன்மொழிந்தார். சத்தியமும் செய்தார்.

‘நீங்கள் மட்டும் எகிப்தின் அரியணையை எனக்குக் காப்பாற்றித் தந்துவிட்டால், உங்களது படையெடுப்பிற்கு ஆகும் அனைத்துச் செலவுகளும் என்னுடையன. அலெப்போ, டமாஸ்கஸின் அதிபதியான தங்களின் அதிகாரத்திற்கு எகிப்து கட்டுப்படும். எகிப்தின் விளைச்சல் வருவாயில் மூன்றில் ஒரு பகுதி உங்களுக்குக் காப்பு வரியாக அளிக்கப்படும்’

நூருத்தீனின் இராணுவ ஆலோசகர்கள் அனைவரும் ‘எகிப்தில் நூருத்தீனின் இராணுவத் தலையீடு முக்கியம்’ என்ற முடிவுக்கு வந்தனர். அதில் வெகு முக்கியமானவர் ஸலாஹுத்தீனின் சிற்றப்பாவும் நூருத்தீனின் அணுக்கத் தோழருமான ஷிர்குஹ். நூருத்தீனுக்கும் ஷிர்குஹ்வுக்கும் இடையே நிலவிய நெருக்கம் ஒரு வினோதம் என்கிறார்கள் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள். வயதுக்கு ஏற்ப கம்பீரமும் கண்ணியமும் நிதானமும் அளந்து பேசும் தன்மையும் கொண்டவராக உருவானவர் நூருத்தீன். உயரம் குறைவான, பெருத்த உடலுடைய ஷிர்குஹ்வோ உண்பதிலும் பருகுவதிலும் பெரும் விருப்பமுடையவர். கோபத்தில் நிதானத்தை இழந்துவிட்டால் அவரது இயல்பு முழு மூர்க்கம்; எதிரியைக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை. இவ்வாறு நேரெதிர் குணம் அமைந்திருந்த இருவருக்கும் இடையே இழையோடியது நட்பு.

ஷிர்குஹ்வின் கோப வெளிப்பாடு என்னதான் கரடுமுரடாக இருந்த போதும் பலருக்கும் அவரைப் பிடித்திருந்தது. அவரது படையில் இருந்த வீரர்கள் தங்களுடன் ஒருவராக உண்டு, களித்து, சிரித்துப் பழகும் ஷிர்குஹ்வைப் பெரிதும் விரும்பிப் போற்றினார்கள். சிரியாவில் ஷிர்குஹ் பங்கேற்ற போர்கள் பல. அவற்றில் வெளிப்பட்ட அவரது வீரமும் வலிமையும் ஒப்பற்ற தளபதியாக அவரை நிரூபித்தன. ‘சிங்கம்’ என்ற அடைமொழியும் அவருடன் ஒட்டிக்கொண்டது.

சிலுவைப்படையினருக்கு எதிரான யுத்த நுணுக்க அடிப்படையில் பார்த்தாலும் சரி, தட்டுக்கெட்ட ஷிஆக் கோட்பாட்டின்படி பார்த்தாலும் சரி, இப்பொழுது எகிப்தும் நூருத்தீனுக்கு முக்கியமான இலக்கு என்றாகிவிட்டது. தனி கிலாஃபத் அமைத்து பக்தாத்தின் அப்பாஸிய கிலாஃபத்துக்கு எதிராகச் செயல்பட்டுவந்த ஃபாத்திமீக்களைத் தம் அதிகாரத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பது அவருக்கு முன்னுரிமையானது.

தலை அசைத்துக் கட்டளையிட, 10,000 குதிரைப்படையினருடன் ஷிர்குஹ்வின் தலைமையில் எகிப்துக்கு அணிவகுத்தது நூருத்தீனின் படை. வரவேற்றுக் காத்திருந்தன சுவையான திருப்பங்கள்.

தொடரும் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.