ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?

Share this:

‘ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?”

இந்தக் கேள்வியை நண்பர் அப்துல்லா என்னிடம் கேட்டார். ஏறத்தாழ 14 வருடங்கள் முடிந்தபிறகும் இன்னும் அந்தக் கேள்வியில் இருந்த வருத்தம் எனது நினைவில் உள்ளது.

கேட்ட நாள் 1992, டிசம்பர் 6.

அன்று மாலை இன்னும் சில இஸ்லாமிய நண்பர்களுடன் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரது உணர்வை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலுக்கு எனது பெயரில் ‘ராம்’ இருப்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி கொடுத்த வருத்தத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதற்குமேல் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போது புரியவில்லை. இப்போது சச்சார் கமிட்டியின் ஆய்வு முடிவுகள், அந்த வார்த்தைகளின் முழு பரிமாணத்தைப் புரிய வைக்கின்றன.

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதத்தினர் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு; இந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் சிறப்பு என்று பல வருடங்களாக நாம் போதிக்கப்பட்டு வருகிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லும்போது வேறுபட்ட கருத்தும் வாழ்க்கை முறையும் கொண்டவர்கள் ஒன்றாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் அடிப்படை ஆதாரங்களை ஒற்றுமையுடன் சமமாகப் பகிர்ந்து வாழ்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறோம். பெரும்பான்மையானவர்களின் அந்த எண்ணத்தில், சச்சார் கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2005 ஆம் வருடம் மார்ச் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இந்தியாவில் இஸ்லாமியர்கள் கல்வி ரீதியாகவும், சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் எப்படி இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை சென்ற வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை பிரதமரிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் அதன் முக்கிய அம்சங்கள் வெளியாகி விட்டன என்பது வேறு விஷயம்!

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில் 1870 களில் மியோ பிரபு உத்தரவின் பேரில் முஸ்லிம்கள் குறித்துக் கணக்கெடுப்பு தொடங்கியது. அதன்பிறகு 1978 இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி ஒரு சிறுபான்மை ஆணையத்தை நியமித்தது. மீண்டும் 1980 இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, டாக்டர் செய்யது முகமது தலைமையில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு கமிஷன் அமைத்தார். டாக்டர் செய்யது முகமது வேறு பணிக்காகச் சென்றதும், கோபால்சிங் தலைமையில் இயங்கிய அந்த கமிஷன் தனது அறிக்கையை 1983 இல் அளித்தது. ஆனால், இதுவரை எந்த அரசும் இந்த அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதில் வி.பி.சிங், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அரசுகளும் அடக்கம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரை எத்தனை ஆய்வுகள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கின்றன. அதாவது கல்வி, அரசுப் பணி, ஆட்சிப் பணி, காவல்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை…

இஸ்லாமியர்களின் காவலராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களும் இந்த நிலையில் இருந்து விதிவிலக்காக இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.

உண்மை நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய சமூகம் முழுவதிலும் ஆழமாக ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யும் அரசியலை நடத்தி வருகின்றன என்ற பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், உண்மை நிலையோ வேறுவிதமாக இருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பிறகும் முஸ்லிம்களின் நிலை இதுதானா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த அவசியமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

சில தனிமனிதர்களுக்கும் சில பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் சில சலுகைகளைச் செய்துவிட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத் துக்குச் செய்த பணிகளாக சிலர் சித்திரிக்கிறார்கள். அவற்றையே எதிர்முகாமும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளாகச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், இந்த சில அடையாள நடவடிக்கைகளால் முழு இஸ்லாமிய சமூகமும் பயன்பெறவில்லை என்பதை சச்சார் கமிட்டி தெரிவிக்கும் தகவல் உறுதி செய்கிறது.

மற்ற காங்கிரஸ் அரசுகளைப் போல் இல்லாமல் டாக்டர் மன்மோகன் சிங் அரசு இந்த விஷயத்தில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அடிப்படையான சில மாறுதல்களில் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. அரசுப் பணிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல அங்கங்களிலும் முஸ்லிம்களுக்கு ‘நியாயமான’ பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியிலும் பலர் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு குறித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். மதரீதியிலான இட ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை என்று எதிர்க்குரல்களும் கேட்கின்றன.

இஸ்லாமிய சமூகம் வளர்ச்சியடையாமல் பின்தங்கியதற்கு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைதான் காரணம் என்று குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள். மைய நீரோட்டத்துடன் கலக்காமல் அவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்தத் தடைகளையும் தாண்டி முதலில் அவர்களுக்கு உரிய கல்வி வசதி மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் ஜனநாயகப் பண்பையும் அளவிடுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் அங்கு சிறுபான்மையினர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது. இந்தியாவில் அந்தக் காரணி படிப்படியாக எதிர்மறையாகப் போய்க் கொண்டிருக்கிறது.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் மக்கள்தொகைக்கு நிகரான இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்காத இந்திய அரசு, அவர்களுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிக சதவிகித இடங்களைக் கிடைக்கச் செய்திருக்கிறது.

ஆம்! சிறைச்சாலைகளில் மட்டுமே அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த அவலநிலையைப் போக்குவது அரசின் கடமை. இல்லையெனில் அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று அரசே நினைப்பதாக அவர்கள் கருதிவிடக் கூடும்!

– ஜென்ராம்

நன்றி: ஜூனியர் விகடன் (03-12-2006)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.