
பாவ மன்னிப்பு என்ற பெயரில் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிவான கட்டுரைக்கான மறுமொழியில் சகோதரி வஹிதா எழுப்பியிருந்த ஐயத்திற்கான விளக்கத்தை சகோதரர் ஷரஃபுத்தீன் உமரீ அளித்துள்ளார்.
ஐயம்: சிறப்பான உரையை நிகழ்த்திய மெளலவி ஷரஃபுத்தீன் உமரிக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக! ஒரு சந்தேகம்.
இந்த உரையில் இஸ்திக்ஃபார் பாவமன்னிப்பு பற்றி நபி(ஸல்) அவர்களின் துணைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், லைலத்துல் கத்ர் இது தான் என்று நான் “தெரிந்து கொண்டால்” என்ன ஓத வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த ஹதீஸின் நிலை என்ன?
நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று தான் லைலத்துர் கத்ர் இரவு என எப்படி அன்னை ஆயிஷா(ரலி) “தெரிந்து கொண்டார்கள்”? – சகோதரி வஹிதா.
தெளிவு: அன்புச் சகோதரி, அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] தங்களின் கேள்வி நியாயமானதே. யாருக்கும் ஏற்படாத இந்த சிந்தனையை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தி எல்லோரையும் தெளிவு பெற கிருபை செய்திருக்கிறான். தாங்கள் சுட்டிக்காட்டிய பிறகு தான் இது சம்பந்தமாக யோசிக்கத் தோன்றியது. அதுவரை அது பற்றிய சிந்தனை இல்லை. அல்லாஹ் தங்களின் கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி தங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக.
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்து பின்னர் மறக்கடிக்கப்பட்ட லைலத்துல் கத்ர் என்கிற கண்ணியமிக்க இரவு ரமளான் மாதத்தில் எந்த இரவில் வரும் என்று குறிப்பிட்டு ஓர் இரவை எவராலும் சொல்ல முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர.
ஆயிரம் மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கத்ர் என்கிற அந்த ஓர் இரவில் நின்று வணங்கினால் அல்லாஹ் மகத்தான நன்மைகளை வாரி வழங்குவான்.
பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பான் என்றெல்லாம் ஸஹீஹான நபிவழி அறிவிப்புகள் ஆர்வமூட்டுகின்றன.
லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குவது ”இபாதத்” தொடர்பானது என்பதால், இறைத்தூதரின் வழிகாட்டல் மிக அவசியம். இதில் பிறர் எவருடைய கருத்துக்களும் ஏற்கதக்கவையல்ல! இவ்வகையில், லைலத்துல் கத்ரில் கேட்கப்படும் பிரார்த்தனையைக் குறித்து ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஸஹீஹானது, பிரபலமானது.
“நான் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த ஓர் இரவையும் (இதுதான்) லைலத்துல் கத்ர் என்று அறிந்து கொண்டால் (அந்த இரவில்) நான் என்ன ஓத வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபவ்ஃபு அன்னீ என்று ஒதுவாயாக” என நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி) நூற்கள்: அஹ்மத் 6/171&208, இப்னு மாஜா 3850, திர்மிதீ 3513, அல் பைஹகீ 3701, இன்னும் பல நூற்கள்.
இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸும் வருகிறது:
“அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ரை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது?” என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ” என்று பிரார்த்திப்பாயாக என பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூற்கள்: திர்மிதீ 2013, இப்னுமாஜா 2706, அஹமத் 6/171, ஹாகீம்1/530)
(பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
இவை இரண்டும் சரியான ஹதீஸ்களே அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இரண்டும் ஒன்றுக்கொன்று வலு சேர்க்கின்றன. “நான் அறிந்து கொண்டால்” என்பதற்கு “அடைந்து கொண்டால்” என்பதே விளக்கமாக இருக்கிறது. இந்த நாள்தான் லைலத்துல் கத்ர் – கண்ணியமிக்க இரவு என்று குறிப்பிட்டு அறிவிக்காமல், அந்த இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மறக்கச் செய்த லைலத்துல் கத்ர் குறித்த அறிவிப்புகள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டது. எனவே, நீங்கள் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன். [அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ [ரழி] நூல்: சஹீஹுல் புகாரீ [2016, 2018, 2027 முஸ்லிம் 2168, 2170, 2171, நஸயீ 1083, அபூதாவூத் 1174, அஹ்மத் 10610, முவத்தா 611]
மேற்கண்ட ஹதீஸ்படி, லைலத்துல் கத்ர் இரவு என்பது ரமளானின் இறுதிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களான 21, 23, 25, 27, 29 ஆகிய ஐந்து இரவுகளில் அடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.
இதன் அடிப்படையில் ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் ஒற்றைப்படை இரவுகளாகிய ஐந்து இரவுகளையும் அடையும்போது, இபாதத்தில் முனைந்து ஈடுபடுவதோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுத் தந்த பாவமன்னிப்பு துஆவையும் கோரவேண்டும்!
எனவே, மேற்கண்ட கத்ர் இரவு தொடர்பான நபிமொழியை நேரடியாக விளங்காமல் மேலே விளக்கியுள்ளபடி பொருள் கொண்டால் முரண்பாடின்றி விளங்கலாம். ஏனெனில், ”லைலத்துல் கத்ரை நான் அடைந்துகொண்டால் அதில் என்ன துஆவை ஓதவேண்டும்? என்று கேட்டதற்கு, இதை ஓதுவாயாக என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆகவே, ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் ஒற்றை எண்ணிக்கையில் வரும் ஐந்து இரவுகளில் ஆண்டுக்கு ஆண்டு ஏதாவது ஓர் இரவில் மாறி மாறி கத்ர் இரவு வரும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
எனவே, ஆயிஷா (ரலி) அவர்கள் “லைலத்துர் கத்ர் இரவு என்பது இன்றைய இரவு தான் என்று அறிந்து வைத்திருந்தார்கள்” என்று தவறாக விளங்கிக் கொள்வதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!
இனி, கத்ர் இரவைக் குறித்து சில அடையாளங்களையும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளதைக் காண்போம்:
1] அந்த இரவானது குளிராகவும் இருக்காது சூடாகவும் இருக்காது.
2] அந்த இரவில் மேக மூட்டங்கள் காணப்பட மாட்டது.. புயல் காற்று வீசாது.
3] அந்த இரவில் ஒட்டுக் கேட்கும் ஷைத்தான்கள் எறியப்பட மாட்டார்கள்.
4] அந்த இரவு அமைதியாக இருக்கும் பிரகாசமாக இருக்கும்.
5] காலை சூரியன் உதிக்கும் போது வெப்பமே இல்லாமல். (சந்திரனைப் போன்று) உதிக்கும்.
6] அந்த இரவில் மழை பொழியும்.
மேற்கூறும் கூற்றிற்கான ஆதாரங்கள் பின் வருமாறு:
1) “நான் சங்கை மிக்க அந்த இரவு காட்டப்பட்டேன் (அறிவிக்கப்பட்டேன்) பின்பு அது மறக்கடிக்கப்பட்டேன். அ(வ்விரவான)து கடைசிப் பத்து இரவுகளில் உள்ளது. அவ்விரவு மிகவும் பிரகாசமானதாக இருக்கும். அதில் குளிரும் இருக்காது. வெப்பமும் இருக்காது” என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். [அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் [ரழி] நூற்கள்: சஹீஹ் இப்னு குஜைமா, அத்தபரானி]
2) “சங்கை மிக்க இரவின் அடையாளமாவது, அந்த இரவு (ஷைத்தானுடைய அட்டகாசங்கள், சேட்டைகள், ஆகியவற்றிலிருந்து) நீங்கியிருக்கும், (அளவுக்கதிகமான வானவர்களின் வருகையால்) ஒளிர்ந்து கொண்டிருக்கும். (அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தி தொடர்ந்து இறங்கிக்கொண்டிருப்பதால்) அமைதியாகவும், (காற்று இல்லாமல்) நிதானமாகவும் இருக்கும். அவ்விரவில் சந்திரன் (மேக மூட்டம் இல்லாத காரணமாக) பிரகாசித்துக் கொண்டிருக்கும். குளிரும் இருக்காது வெப்பமும் இருக்காது. நட்சத்திரங்களோ பொழுது விடியும் வரை ஷைத்தான்கள் மீது எறியப்பட மாட்டாது. மேலும் அன்றைய பொழுது புலர்ந்து சூரியன் உதிக்கும் போது அது தட்டையானதாக இருக்கும் அதில் வெப்பம் இருக்காது. அன்று அச்சூரியனோடு ஷைத்தான் வெளியேறுவது (அவனுக்கு) தடுக்கப்பட்டுள்ளது.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [அறிவிப்பாளர்: உபாதா பின் சாமித் [ரழி] நூற்கள்: அஹ்மத், அல் பைஹகீ]
3) “லைலத்துல் கத்ர் என்ற சங்கை மிக்க இரவின் காலையில் சூரியன் உதிக்கும் போது வெப்பம் இருக்காது. அது நல்ல உயரும் வரை கொப்பரை [Basin] போன்று இருக்கும்” என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபை பின் கஅப் [ரழி] நூற்கள்: [அஹ்மத், அபூதாவூத், இப்னு குஜைமா, இப்னு ஹிப்பான்)
4) லைலத்துல் கத்ர் எனும் மாட்சிமை மிக்க இரவு ரமளான் மாதத்தின் 27வது இரவுதான் என்பது நபித்தோழர் உபை பின் கஅபு (ரலி) அவர்களின் உறுதியான கருத்தாகும். ரமளானின் 27வது இரவுதான் லைலத்துல் கத்ர் என்று எவ்வாறு நீங்கள் அறிந்து கொண்டீர்கள்? என்று உபை (ரலி) அவர்களிடம் கேட்டபோது, அ(து லைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், ”அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்” என்று உபை (ரலி) கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம் 1397, திர்மிதீ 723, அபூதாவூத் 1170, அஹ்மத் 20249)
5) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் ”அன்றைய (காலையில்) சூரியன் சுடர் இன்றி உதிக்கும்” என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்து கொண்டேன்) என்று உபை (ரலி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2175)
6) நான் உபை பின் கஅபு (ரலி) அவர்களிடம், அபுல் முன்திர்! அது (லைலத்துல் கத்ர் ரமளான் மாதத்தின்) இருபத்தேழாம் இரவுதான் என்று எவ்வாறு நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”ஆம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அது ஓர் இரவு. அந்த இரவை அடுத்து வரும் காலைப் பொழுதில் சூரியன் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்’ என்று எங்களிடம் கூறியுள்ளார்கள். அதை நாங்கள் எண்ணிக் கணக்கிட்டு மனனமிட்டுள்ளோம்… என்று உபை (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) நூல்: திர்மிதீ 723)
மேற்கண்ட அறிவிப்புகளின் அடையாளங்களை வைத்து எவரும் கத்ர் இரவை ஓரளவுக் கணிக்க இயலும். கத்ர் இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் ஒளியிழந்திருப்பதைத் துல்லியமாக கவனத்தில் கொண்டு அறிந்துகொண்டாலும், லைலத்துல் கத்ரை அடைந்து, கடந்த பின் வரும் காலைப் பொழுதின் இந்த அடையாளம் முன்னறிவிப்பாக இல்லாமல் கடந்த இரவு லைலத்துல் கத்ர் என்பதை இந்த அறிவிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்!
இறுதியாக,
ரமாளான் மாதம் கடைசிப் பத்து நாள்களில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும் இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆனால், அந்த ஒற்றைப்படை இரவுகளில் இதுதான் லைலத்துல் கத்ர் என்றும் சில நபித்தோழர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர். அவற்றில் ரமளானின் 27ம் இரவு லைலத்துல் கத்ர் என்பது உபை பின் கஅபு (ரலி) அவர்களின் சொந்த கூற்றாகும். இதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லை. அவ்வாறு கத்ர் இரவு வேறுபட்ட இரவுகளில் உள்ளது என்று குறிப்பிட்டுச் சொல்லும் நபித்தோழர்களின் கருத்துகளும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமளானில் மாறி மாறி கடைசி ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை அவர்கள் அடைந்திருக்கலாம் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை!
எடுத்துக் காட்டாக: மேலே குறிப்பிட்டுள்ள புகாரி 2016 ஹதீஸில் ரமளானின் 21ம் இரவு லைலத்துல் கத்ராக இருந்தது, என ஈரமான களிமண்ணில் சிரவணக்கம் செய்வதைக் கனவில் காட்டி, நபியவர்களின் கனவின் மூலம் அன்றுதான் லைலத்துல் கத்ர் என்பது அந்த ஆண்டு ரமளான் மாதத்தின் லைலத்துல் கத்ராகும். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து வெவ்வேறு இரவுகளில் லைலத்துல் கத்ர் வரும் என்பதையே ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, ரமளான் இறுதி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஒரு சில அடையாளங்களை வைத்து தோராயமாக நாம் கணிக்க இயலும் என்றாலும், புனிதமிக்க இரவு எதுவென்பதைத் துல்லியமாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ்வைத் தவிர, எவரும் அதை அறிய முடியாது! என்பதே குர்ஆன், சுன்னாவின் நிலைப்பாடு.
(இறைவன் மிக்க அறிந்தவன்)