துபை இந்தியத் துணைத்தூதரகத்தின் 24 மணிநேர உதவிப்பிரிவு ஆரம்பம்!

Share this:

“வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிப்பெண் வேலைக்காக வரும் இந்தியப் பெண்கள் தனது பணியிடங்களில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்திய அரசு, வளைகுடா நாடுகளின் தனது அனைத்து பிராந்திய தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரகங்களில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர உதவிப்பிரிவினை உருவாக்கியுள்ளது” என்று வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை (Ministry of Overseas Indian Affairs –  MOIA) உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வறுமையின் காரணமாக, நிர்க்கதியற்று வெளிநாடுகளில் வீட்டு வேலைகளுக்காக வரும் இப்பெண்களிடம் அவர்களின் எஜமானர்கள் தவறான முறையில் நடப்பதாகத் தொடர்ந்து பதிவாகி வரும் புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி துபையிலிருந்து வெளிவரும் தினசரியான கலீஜ் டைம்ஸ்(Khaleej Times)க்கு தொலைபேசியில் பேட்டியளித்த வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறையின் பொதுச்செயலாளரான நிர்மல் சிங், “இவ்வசதி வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்” என்றார். மேலும், “அனைத்து வளைகுடா நாடுகளிலும் உள்ள தூதரகங்களில் 24 மணிநேரமும் இயங்கும்படியாக இவ்வசதி அமைக்கப்பட்டு வருகிறது” என்றார். இதனிடையே இதுபற்றி பதிலளித்துப்பேசிய துபை இந்தியத் துணைத்தூதரத்தின் பொதுச்செயலாளரான வேணு ராஜாமணி, “தாம் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிக்கை இன்னும் பெறப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“இவ்வசதி அமைக்கப்படும் வரை, எந்த ஒரு இந்தியரும் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பதிவு செய்வதற்காக ஏற்கனவே 24 மணி நேரமும் இயங்கிவரும் துபை மையத்தின் தொலைபேசி எண்ணான 050- 9433111 மூலம் தொடர்பு கொண்டு புகாரைப் பதிவு செய்ய இயலும்” என்றார். “இந்த எண் மூலம் பதிவு செய்யப்படும் எந்த ஒரு புகாரையும் தாமதமின்றி உடனடியாக விசாரிப்பதற்காக தனி தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றும் ராஜாமணி தெரிவித்துள்ளார். இவ்வசதி அமீரகத்திலிருக்கும் ஆதரவற்ற பணிப்பெண்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புவோம்.

தகவல்: முதுவை ஹிதாயத்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.