
இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி!
மும்பை தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்: அமெரிக்கா உளவுத்துறை தகவல்கள்!
பண்டிகைக் காலத்தில் பெருநகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை!
இவை அண்மைக்காலமாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்று வருகின்றன.
இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் தரும் தகவல்கள் உண்மைதானா? என்ற சந்தேகம் தற்போது எழத் தொடங்கிவிட்டது. குறிப்பாக மும்பை தாக்குதலுக்குப் பிறகு வெளிவரும் விஷயங்கள், அதற்கு முன்னர் அமெரிக்கா நடந்த கொண்ட விதங்கள் எல்லாம் இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா செய்த உதவிகள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு வந்து விட்டன.
மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய டேவிட் கோல்மென் ஹெட்லி அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனத்திற்கு முன்பு உளவு பார்த்தவன் என்றும், அதற்குப் பரிகாரமாக அவனது போதை கடத்தல் குற்றத்திற்கு அமெரிக்கா தண்டனையை குறைத்து விட்டது என்றும் சில ஊடகங்களில் வெளியான செய்தி மேலும் பல சந்தேகங்களை உருவாக்குகிறது. “சி.ஐ.ஏ.வுக்காக வேலை பார்த்தவர்கள்” என்ற கடந்த காலம் என்ற ஒரு நிலை எவருக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததாகும்.
மும்பை தாக்குதலுக்குப் பிறகு, லக்ஷ்கரே தொய்பா மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்கா அளித்த 80 சதவீதத் தகவல்கள் தவறானவை என்றும், நிரூபனம் செய்யப்பட முடியாதவை என்றும் இந்திய ஊடகங்கள் இப்போது கருத்துகளை வெளியிட்டுள்ளன.
மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் உளவு மற்றும் பகுத்தாய்வு முறை சார்ந்த வல்லமை அதிகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா, இந்திய உளவுப் பணியில் ஊடுருவி அதன் ஆதிக்கத்தை இறுகச் செய்து விட்டதாக அதிகாரிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று அமெரிக்காவின் இரண்டு உளவு நிறுவனங்களான சி.ஐ.ஏ மற்றும் எஃப்.பி.ஐ. ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த எச்சரிககையைத்தான் உளவு நிறுவனங்கள் மாநில காவல்துறைக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தந்து கொண்டிருக்கின்றன. ஹெட்லி அமெரிக்கப் புள்ளி எனவும், லஷ்கரே தொய்பாவில் ஊடுருவியுள்ளவன் எனவும் உளவு நிறுவனங்களுக்குத் தெரிய வந்தபின் அமெரிக்காவின் எச்சரிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மும்பை தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை ஹெட்லி மூலம்தான் அமெரிக்காவுக்குத் தெரிய வந்திருக்கும் என அதிகாரிகள் தற்போது நம்புகிறார்கள்.
அமெரிக்காவின் உளவு நிறுவனங்களின் மீதான சந்தேகம் ஹெட்லி விசயத்தில் இருந்து மட்டும் தொடங்கவில்லை. அதற்கு முன்பே ஜூலை 2008ஆம் ஆண்டில் அகமதாபாத் தாக்குதலின்போது “இந்தியன் முஜாஹித்” என்ற பெயரில் வந்த மின்னஞ்சல் அமெரிக்கப் பிரஜை கென் ஹேய்ட் என்பவனிடமிருந்து வந்தது எனத் தெரிய வந்தபோதே இந்திய உளவு நிறுவனஙகளுக்குப் பொறி தட்டத் தொடங்கியது. ஆனால் அதிகாரிகள் துப்பறிந்து கொண்டு இருக்கும் வேளையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தந்திருந்த போதிலும் அவன் தப்பிச் சென்றுள்ளான்.
இந்திய உளவு நிறுவனங்களான ஐ.பி, ரா, மற்றும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய உளவு நிறுவனங்களுக்கு அமெரிக்கா இரு வாரங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தாக்குதலுக்கான எச்சரிக்கை தந்துள்ளதுள்ளதில் ஏதோ தந்திரம் உள்ளதாக இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மும்பை தாக்குதலின் ஓராண்டு நிறைவுக்கு இரு வாரங்களுக்கு முன் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இந்தியாவின் டி.ஐ.ஏ.வுக்குத் தகவல் கூறியதாக வெளியான செய்தி அறிந்தவர்களின் புருவம் ஆச்சர்யத்தால் உயர்ந்தது. ஏனெனில் ஐ.பி. மற்றும் ராவுடன் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பு இல்லை எனில், தீவிரவாதிகள் தாக்குதல் போன்ற அதிமுக்கியமான தகவல்களை டி.ஐ.ஏ.வுக்கு அமெரிக்க ராணுவம் கூறியிருக்க முடியாது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வடகொரியக் கப்பல் ஒன்று அணு ஆயுதம் அல்லது அதுபோன்ற சரக்குகளைச் சுமந்து வருவதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து, அக்கப்பல் காக்கிநாடாவில் நிறுத்தி வைக்கப்பட்டு, கப்பலில் இருந்த சரக்குகள் இறக்கப்பட்டு, மும்பையில் இருந்து சென்ற அணு ஆயுத அதிகாரிகள் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் அதில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த நவம்பரில் மால்டாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்று ரேடியோ ஆக்டிவ் பொருட்கள் ஏற்றிச் செல்வதாக மீண்டும் அமெரிக்க உளவு நிறுவனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அக்கப்பல் சென்னையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டது. ஆனால் அக்கப்பலில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டாம் என இம்முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தியா மீது தீவிரவாத தாக்குதல்களை அதிகம் நடத்தும் அமைப்பாக அறியப்பட்டுள்ள லஷ்கரே தொய்பாவை உளவு பார்ப்பதில் இந்திய உளவு அமைப்பு எதுவும் நேரடியாக ஈடுபடவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க உளவு நிறுவனங்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைந்துள்ளன. “நமது உளவுக்கு அமெரிக்காவை நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானது” என்று இந்திய உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள். நம்மை நாமே முன்னேற்றிக் கொள்ளாமல், அமெரிக்கா சொல்வதற்ககெல்லாம் தலை ஆட்டத் தொட்ங்கி விட்டன இந்திய உளவு நிறுவனங்கள்.
மும்பைத் தாக்குதலுக்கு பிறகு இந்திய பாதுகாப்புக் கொள்கையில் அமெரிக்கா தொடர்ந்து மூக்கை நுழைத்து வருவதால், அமெரிக்கத் தகவல்களை உள்வாங்கியே இந்தியா செயல்படும் என்ற நிலை உருவாகிவிடும் என இந்திய அதிகாரிகள் தற்போது புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். தற்போது இந்திய உளவு நிறுவனங்கள் பல நிறுவன மையங்களில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளை ஆராயத் தொடங்கி, தகவல்களைச் சேகரித்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு வருகின்றன.
இது நல்ல முன்னேறம்தான். என்றாலும் நிறுவன மையங்கள் அனுப்பும் செய்திகளும் அமெரிக்காவில் இருந்து கசிந்தவைதான் என்பதை நமது உளவு அமைப்புகள் நினைவில் கொள்ள வேண்டும்.
மூலம்: மின் அஞ்சல்