தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் – 2

கார்கரே கொலையைக் குறித்த காவல்துறையின் விளக்கத்தை கார்கரேயின் குடும்பம் உட்பட மக்கள், அப்படியே நம்பாமல் சந்தேகப் படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்முதலாகக் கார்கரே தாஜ் ஹோட்டலிலும் காந்தே மற்றும் ஸலஸ்கர் இருவரும் தாஜிற்கு அடுத்துள்ள மெட்ரோவிற்கருகில் வைத்தும் கொல்லப் பட்டதாகவே காவல்துறை கூறியிருந்தது. பின்னர், மூவரும் ஒரே இடத்தில் வைத்து ஒன்றாகவே கொல்லப்பட்டதாகக் காவல்துறையே மாற்றிக் கூறியது.

மும்பைத் தாக்குதல் தொடங்கிய வேளையில், கார்கரே தாதரிலுள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். காந்தே அன்று ஆஃப் டூட்டியில் இருந்தார். தாக்குதல் நிகழ்வை முதலாவதாக அறிந்த ஸலாஸ்கர், நேரடியாகத் தாஜ் ஹோட்டலுக்குத்தான் முதலில் வந்து சேர்ந்தார். தாஜ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த ஸலாஸ்கரை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா கொலாபா காவல்நிலையத்திற்கு வரும்படி கன்ட்ரோல் ரூம் வழியாக ஆணையிட்டிருக்கின்றார். தாஜிலிருந்து கொலாபா காவல்நிலையத்திற்குப் புறப்பட்ட ஸலாஸ்கருக்கு, ரமேஷ் மரியாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது – தீவிரவாதிகளின் தாக்குதலில் அடிஷனல் கமிஷனர் சதானந்த் தத்தா காயமடைந்திருப்பதாகவும் உடனடியாக ஸலாஸ்கர் காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அழைப்புக் கூறியது.

காமாவுக்குச் செல்லும் வழியில் ஸலாஸ்கர் கார்கரேயைச் சந்தித்தார். காந்தேயும் இவர்களுடன் இணைந்தார். அச்சமயம் ACP பிதோனாய் குவாலிஸ் வண்டியில் அங்கு வந்து சேர்ந்தார். குவாலிஸ் வண்டியினைத் தங்களுக்குத் தர வேண்டும் என காந்தே கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் நடந்ததாகக் காவல்துறை கூறிய கதை கீழ்கண்டவாறு:

“வண்டியை ஸலஸ்கர் ஓட்டினார். அவருக்கு அருகில் காந்தே உட்கார்ந்திருந்தார். ஜாதவும் மற்ற இரு கான்ஸ்டபிள்களும் கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர். இரண்டாவது வரிசை இருக்கையில் கார்கரே அமர்ந்திருந்தார். காமா மருத்துவமனைக்குப் புறப்பட இருந்த வேளையில் இவர்களுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. “செயின்ட் சேவியர் கல்லூரிக்கு அருகில் வைத்து, தீவிரவாதிகள் வண்டி ஒன்றைக் கடத்துவதற்கு முயற்சி செய்தனர்” என அந்த அழைப்பு கூறியது. அந்நேரம் ஓர் ஆள் அவர்களின் வண்டியின் குறுக்காக பாய்வதைக் கண்டனர். தற்பொழுது காவல்துறையின் கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப்தான் அவன். ஸலஸ்கர் தன் கையிலுள்ள கைத்துப்பாக்கியால் கஸபை நோக்கிச் சுட்டார். கஸ்பின் கையில் காயம் ஏற்பட்டது. திடீரென கஸபுடன் இருந்த இஸ்மாயில் இருளிலிருந்து கொண்டு தாறுமாறாக சுட்டான். வண்டியில் இருந்த கார்கரே உட்பட அனைவருக்கும் குண்டடி பட்டது. அனைவரையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, கஸபும் இஸ்மாயீலும் அவ்வண்டியில் தப்பியோடினர்; பின்னர் பிடிபட்டனர்.”

காவல்துறை கூறும் இக்கதை, நம்பமுடியாத ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கார்கரேக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து இருந்ததால், அவருடன் ஆயுதமேந்திய இரு போலீசார் நியமிக்கப் பட்டு, எந்நேரமும் உடன் இருந்தனர். ஆனால், இவர்கள் இல்லாமலேயே கார்கரே முதலில் CSTக்கும் பின்னர் காமா மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறுவதற்கு முந்தைய தினம், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், “மாலேகோன் குண்டு வெடிப்பு விசாரணையில் ஈடுபட்டிருப்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என கார்கரேக்குப் பாட்டீல் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே கார்கரேக்குப் பாதுகாப்பாக இரு போலீசார் நியமிக்கப் பட்டனர். இருப்பினும் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் துணையின்றி, கார்கரே தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனியாகச் சென்றது எப்படி? கார்கரே சி.எஸ்.டிக்கு வந்தபோது, ATSஇல் முன்னர் தலைவராக இருந்த பி.கே. ரகுவன்ஷி CSTயில் இருந்தார். இருப்பினும் இவரோ கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளோ சம்பிரதாய விசாரிப்புக்காகக்கூட கார்கரே  அருகில் செல்லத் தயாராகவில்லை. காந்தேயும் ஸலஸ்கரும் கார்கரேயுடன் காமாவுக்குப் புறப்படும் பொழுது, அவர்களது வண்டியில் ரகுவன்ஷி ஏறவில்லை; கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்லவில்லை.

இதை வாசித்தீர்களா? :   வீடு, நிலம், மனை வாங்கப் போகிறீர்களா? முக்கியமான 10 செக்கிங் பாயின்ட்ஸ்!

காமா மருத்துவமனைக்குத் தனியாகச் செல்லுமாறு யாராவது கார்கரேயிடம் கோரிக்கை/உத்தரவு விடுத்திருந்தனரா?

அச்சமயம் கார்கரேக்குத் தொடர்ச்சியப் பல தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததை அவரது இறுதியான அசைவுகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளிலிருந்து உறுதியாகக் கூறலாம். அந்நேரம் காவல்துறை கண்ட்ரோல் அறையில், ஜாயின்ட் கமிஷனர் ராகேஷ் மரியாதான் இருந்தார். இதே மரியாதான் தற்பொழுது மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரிக்கின்றார். கஸபை விசாரணை செய்த ஒரேயொரு அதிகாரியும் இவர்தான்.

கார்கரே கொல்லப்பட்ட நிகழ்வில் ஒரே சாட்சி அருண் ஜாதவ், மீண்டும் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போது கதையில் மாற்றம் வருகிறது. “தீவிரவாதிகள் கார்கரேயின் மீதும் மற்றவர்கள் மீதும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காந்தே, ஸலஸ்கர், கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு, காரைக் கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர். அதே காருக்குள் காயம் அடைந்திருந்த நான், இறந்தவன் போன்று வண்டியின் சீட்டிற்கு கீழே மறைந்து கிடந்தேன்” என்பதாக ஜாதவ் கூறுகிறார். “தீவிரவாதிகள் அவ்வண்டியை விட்டு மற்றொரு வண்டியைக் கடத்தித் தப்பிச் செல்வதுவரை நான் அவ்வண்டியின் சீட்டிற்கு கீழே கிடந்தேன். தீவிரவாதிகள் சென்ற பிறகு வயர்லெஸ் மூலமாக காவல்துறை கண்ட்ரோல் அறைக்குத் தகவல் கொடுத்தேன்” என்பது ஜாதவ் தரும் விவரணம்.

ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான கான்ஸ்டபிள் ஜாதவின் கையில் ஒரு கைத்துப்பாகி கூடவா இல்லாமல் இருந்தது?

தீவிரவாதிகள் முதலில் கடத்திச் சென்ற குவாலிஸ் வண்டியின் பின்சீட்டிற்குக் கீழே, தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் கிடந்த ஜாதவ்,  தீவிரவாதிகளைப் பின்பக்கமிருந்து சுட்டுத் தள்ளியிருக்கலாமே?

இக்கேள்விக்கு ஜாதவின் பதிலைக் கேளுங்கள்:

“என் கைவசமிருந்த கைத்துப்பாக்கியைக் காமா மருத்துவமனையில் வைத்து நான் வேறோர்(?) அதிகாரிக்குக் கொடுத்து விட்டேன்”.

எவரும் நம்ப முடியாத பதில்!.

ஜாதவைப் போன்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தனது கைத்துப்பாக்கியை மற்றொருவருக்கு கொடுப்பது என்பது மட்டுமல்ல, கலாஷ்நிக்கோவ் துப்பாக்கிகளுடன் நிற்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு அனுபவமிக்க ஓர் என்கவுண்டர் அதிகாரி வெறுங்கையுடன் செல்வது என்பது உலகமகா காமடியாகும்.

அதுமட்டுமல்ல, காமா மருத்துவமனைக்கு எதிரில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் காயம் பட்டதாகக் கூறும் ஜாதவ், அதற்கு முன்பு காமா மருத்துவமனைக்கு எப்பொழுது சென்றார்?. காமா மருத்துவமனைக்கு முன்பாக வண்டியிலிருந்து இறங்கும் முன்னரே தீவிரவாதி இஸ்மாயில் தாறுமாறாகச் சுட்டதாகவும் கையில் குண்டடி பட்டிருந்த கஸபும் இஸ்மாயீலும் கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து இழுத்து வெளியே போட்டு விட்டு வண்டியைக் கடத்திச் சென்றதாகவும் அந்நேரம், தான் வண்டியின் பின் இருக்கையின் கீழே குண்டடி பட்டு இறந்தது போன்று கிடந்ததாகவும் இதே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவம் நடந்த சமயத்தில் காமா மருத்துவமையின் முன்பாக வண்டியிலிருந்து கீழே இறங்காத ஜாதவ், எப்பொழுது காமா மருத்துவமனையில் வைத்து மற்றொரு அதிகாரிக்குத் தனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தார்?. ஜாதவின் கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அந்த மர்ம அதிகாரி யார்?

இதை வாசித்தீர்களா? :   தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! - 1

ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான ஜாதவிற்கு, ஸலஸ்கருடன் செல்லும் சாதாரண வேளைகளில்கூட கையில் துப்பாக்கி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இருப்பினும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளச் செல்லும் வேளையில், கையில் துப்பாக்கி இல்லாமல் சென்றார் என்பது உச்சகட்ட நகைப்பாகும்.

கொல்லப்படுவதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்னர், கார்கரே மாலேகோன் வழக்கின் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ரோஹிலி சாலினியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். மாலேகோன் வழக்குத் தொடர்பான மேலதிக விஷயங்கள் குறித்து அடுத்தநாள் விரிவாகப் பேசிக் கொள்ளலாம் என இருவரும் தீர்மானித்திருந்தனர். கிட்டத்தட்ட அதே நேரம், பூனே காவல்துறைக்கு ஒரு மொட்டை தொலைபேசி மிரட்டல் வந்தது. “அடுத்த இரு தினங்களுக்குள் கார்கரே குண்டுவெடிப்பில் கொலை செய்யப்படுவார்” என அம்மிரட்டல் கூறியது. அம்மிரட்டலை விடுத்தவர் தூய மராட்டி மொழியில் பேசியுள்ளார். கார்கரே கொல்லப்பட்டார்; நாட்களுக்குள் அல்ல, சில மணிநேரங்களுக்குள்ளேயே! கார்கரேயின் அருகில் செல்வதற்கோ அவருடன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குவாலிஸ் வண்டியில் அவருடன் ஏறிச் செல்வதற்கோ தயாராகாத முன்னாள் ATS தலைவர் ரகுவன்ஷி உடனடியாக மீண்டும் ATS தலைவராகப் பதவியேற்றார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…