சுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்!

Share this:

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் ‘மாற்று’ ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.

 

அவர் உரையாடலின் ஊடாக ‘ஸ்கேண்டிநேவியன்’ நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.

ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து. டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.

தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.

இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்.

ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.

சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH, உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ், லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.)

(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.)

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல, சுவீடனில் படிக்க Studera என்ற மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அதற்கான இணையத்தளம் www.studera.nu ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும்.

ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும். 

உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.
(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)

இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.

செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.

ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.

படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால், இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.

கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.

மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.

இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.

முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த ‘மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.

சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.

அதி முக்கிய இணையத்தளங்கள்:

1. Studyinsweden.se, சுவீடனில் மேற்படிப்புப்பற்றிய அனைத்து விபரங்களும் அறிய

2. சுவீடன் பல்கலைகழங்களுக்கு விண்ணப்பிக்கும் இணையத்தளம் Studera.nu

3. விசா விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் ஏனைய குடியேற்ற சட்டதிட்டங்கள் பற்றி அறிய

4. Blekinge Institute of Technology யில் மென்பொருள் சம்பந்தமாக படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பருக்கான அறிவுப்பு விரைவில் வரும்.

 

5. இந்த வருடம் விண்ணப்பித்த முறை, அதில் சந்தித்த சங்கடங்கள் ஆகியன …

 

6. விண்ணப்பித்தவர்களின் அனுபவங்கள் – புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குப் பயனுள்ளவை …(உறுப்பினராகி உள்ளே போக வேண்டும்).

நன்றி:  வினையூக்கி செல்வா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.