ஊடகங்களில் தொடரும் இஸ்லாமோஃபோபியா..!

அறியாமையினால் விளையும் அச்சம் - இஸ்லாமோஃபோபியா!

இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாம் பற்றிய அச்சம் மற்றும் வெறுப்புணர்வை மேற்கத்திய ஊடகங்கள் 'தீனி' போட்டு வளர்த்து வருகின்றன என்பதை ஏற்கனவே ஆதாரப்பூர்வமாக அறிவித்திருந்தோம். இந்நிலையில் 'இஸ்லாம்' என்ற பெயர் கூட இவர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மறுபடியும் நிரூபனம் ஆகியுள்ளது.

 

'ஏஞ்சல் ப்ரொடக்ஷன்ஸ்' என்னும் பாரிஸ் நகர தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம், 'இஸ்லாம்' என்ற பெயரைக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவனை, அந்தப் பெயரைக் காரணம் காட்டி, தனது நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுக்க விடாமல் நீக்கியுள்ளது.

 

'ஃபிரான்ஸில் விரும்பப் படாத ஒரு மதத்தின் பெயரை அவன் கொண்டிருக்கிறான்' என்று அந்நிறுவனத்தினர் சொன்னதாக, அச்சிறுவனின் தாய் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

 

பாரிஸில் வசிக்கும் ஒரு அல்ஜீரியக் குடும்பத்தைச் சார்ந்த அச்சிறுவன், அத்தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்துக் கொண்டிருந்த இளையர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான இறுதிக் கட்ட தேர்வுக்காக தனது பெற்றோருடன் வந்திருந்தான்.  'இஸ்லாம்' என்ற அவனது பெயரை அறிந்த அந்த நிறுவனத்தினர், அதே பெயருடன் அவன் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாது என்று தெரிவித்தனர்.  வேண்டுமானால், 'முஹம்மது' அல்லது 'சுஃப்யான்' போன்ற வேறு 'அரபு'ப் பெயர்களை பயன்படுத்தும்படியும் அவர்கள் ஆலோசனை கூறினர்.

 

இந்த ஆலோசனையை ஏற்க மறுத்த 'இஸ்லாமின்' பெற்றோர், அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலேயே திரும்பிச் சென்றனர். அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள அந்நிறுவனம் எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

 

தன் மகனின் வாடிய முகம் கண்டு வெதும்பிய பெற்றோர், மனம் தளர்ந்து விடாமல் 'இஸ்லாம்' என்ற பெயரைக் காரணம் காட்டி பாரபட்சம் காட்டியதாக 'ஏஞ்சல் ப்ரொடக்ஷன்ஸ்' நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.   இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் பேச்சாளர், 'அந்தச் சிறுவன் திருப்பி அனுப்பப் பட்டது பெயருக்காக அல்ல.  குறைவான இடங்களே இருந்த சூழ்நிலையில் நிகழ்ச்சியில் பங்கெடுக்க நிறைய பேர் வந்திருந்ததே அதற்குக் காரணம்' என்று தெரிவித்தார்.  'எனினும் ஒரு சிறுவனின் மனதைப் புண்படுத்தக் கூடிய வார்த்தைகளை நிகழ்ச்சியின் பொறுப்பாளர் சொல்லியிருக்கத் தேவையில்லை தான்' என்பதோடு தன் கருத்தை முடித்துக் கொண்டார்.

 

'இஸ்லாமோஃபோபியா' ஊடகங்களினால் எந்த அளவிற்கு வளர்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சான்றாக இருக்கிறது.  

இதை வாசித்தீர்களா? :   அமைதியாகக் கழிந்த ஜமராத் கல்லெறிதல் நிகழ்ச்சி!