தினமலருக்கு மூன்றாவது (பெரிய) அடி!

Share this:

01.09.2008 :

முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.


கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக முஸ்லிம்கள் அறிவித்தனர்.


02.09.2008

தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களின் எதிர்ப்புகள் பதிவாயின.


வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு குவிந்து போராட்டத்தைத் துவக்கினர்.


“கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்” என்றும் “இந்து-முஸ்லிம் இடையே பகையைத் தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்” என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.


“முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கேலிச் சித்திரம் வெளியிட்ட”தைக் கண்டித்து, சேலத்தில் தமுமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தினமலர் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் கோஷமிட்டனர். 28 பெண்கள் உள்பட 294 கைது செய்யப் பட்டனர்.


04.09.2008

தமுமுக, மனிதநீதிப் பாசறை, ஜாக், சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கோவையில் நடத்தினர்.


மதுரையில் மனிதநீதிப் பாசறையும் தமுமுகவும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக தினமலர் நாளிதழை முஸ்லிம்கள் தீயிலிட்டுப் பொசுக்கினர்.


ததஜவினர் மதுரையிலும் சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



06.09.2008

ததஜவினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமுமுக திருச்சியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.


08.09.2008

“திருந்தாத தினமலர் இருந்தென்ன..?” என்ற தலையங்கத்தில் தினமலரின் இஸ்லாமிய விரோதப் போக்கைக் குறித்து சத்தியமார்க்கத்தின் தலையங்கம் வெளியானது.


10.09.2008

ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலர்.காம் என்ற இணைய தளம் முடக்கப் பட்ட செய்தியை, தினமலருக்கு முதல் அடி என்ற தலைப்பில் சத்தியமார்க்கம் வெளியிட்டது.


15.09.2008

தினமலர்.இன் என்ற மாற்று இணைய தளம் ஐக்கிய அரபு அமீரகங்களில் தடை செய்யப் பட்ட செய்தியை தினமலருக்கு இரண்டாவது அடி என்ற தலைப்பில் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டு, “அடிகள் தொடரும்” என்று முடித்திருந்தது.


16.09.2008

குவைத்தில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களின் முயற்சியால், இன்று முதல் தினமலர் அச்சுப் பதிப்புக் குவைத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.


இனியேனும் திருந்தி, தினமலர் மன்னிப்புக் கேட்குமா?


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.