
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டது ஏன்; யாரால் என்ற வினாக்களுக்கு உரிய விடை, தேர்ந்த புலனாய்வு மற்றும் தெளிவான, தீர்க்கமான விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் முன்பே, முஸ்லிம்கள்தாம் குற்றவாளிகள் என ஒருபக்கச் சார்புடன் ஊடகங்கள் காட்டிய வழியில் காவல்துறையும் முன்னேறுகிறது.
ஆடிட்டர் கொலையில் அவசரம் அவசரமாக அரசியல் ஆதாயம் தேட அத்வானியும் வந்து சென்று விட்டார். அகில இந்திய அளவில் ரமேஷ் கொலை பேசப்படுவதால் ரவுடிகளும் கட்டப் பஞ்சாயத்துக் காரர்களும் அப்பழுக்கற்ற தேச பக்தர்களாகி விட்டனர்.
அப்பழுக்கற்றவர்களில் ஒரு தேசபக்தரான நாகை புகழேந்தியை முஸ்லிம்கள் கொன்று விட்டதாக தொலைக்காட்சியில் ‘ஸவுண்டு’ விடும் தமிழிசை ‘சவுண்ட’ரராஜன், நாகை புகழேந்தியைப் போன்றவர்களைப் பற்றி, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் ராமானுஜம் வெளியிட்ட அறிக்கையை வசதியாக மறந்து விட்டார்.
நாகை புகழேந்தி போலிப் பத்திரம் தயார் செய்து ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்து அதன் மூலம் சிறைக்குச் சென்றவர். இதுபற்றிய பத்திரிகைச் செய்தி:-
நாகை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (38). ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். அவர் தமக்குச் சொந்தமான ரூ.ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி (52) போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்துக் கொண்டதாகக் கடந்த 2011ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் புகழேந்தி மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தத் தகவல் அறிந்த புகழேந்தியின் மகன்கள் ரகுராமன், சிவராமன், புகழேந்தியின் நண்பர் கீவளூரைச் சேர்ந்த தினேஷ்பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப்பிரிவு போலீசார் புகழேந்தியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்தபோது முனீஸ்வரன் என்பவரால் கொல்லப்பட்டார்.
நன்றி: ஒன் இண்டியா
“படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தாம்!” என்று போராட்டம் நடத்திய ஹிந்துத்துவா இயக்கங்களே வெட்கப்பட்டு தலைகுனியும் படியாக, அக் கொலைகளுக்கான காரணம் முன் விரோதம், தொழிலில் போட்டி, கொடுக்கல் வாங்கல், பெண் தொடர்பு, கந்து வட்டி, அரசியல் இலாபம் என்று பல்வேறு பரிமாணங்கள் தொடர் விசாரணைகளில் வெளிவந்து பல் இளிக்கும் சூழலில், Facebook போன்ற சமூக வலைத் தளங்களில் ஆடிட்டர் ரமேஷின் படத்தைப் போட்டு மதவெறி வியாபாரம் அமோகமாக சூடு பறக்கிறது.
மேற்கண்டவையே இக்கொலைகளுக்குக் காரணம் எனக் காவல்துறை, புலனாய்வு அமைப்பு, நீதிமன்றம் ஆகியவை தீர விசாரித்துச் சொன்னாலும், ஹிந்துத்துவாவினர் ஒப்புக் கொள்ளத் தயாரில்லை என்றால், அமைதிப்பூங்காவான தமிழகத்தில் அடுத்து பெரிதாக “எதையோ” எதிர்பார்த்து இதைச் செய்கின்றனர் என்பதைச் சாதாரணப் பொது மக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்:
பா.ஜ.க., பிரமுகர் கொலையில், மூன்று இந்துக்கள் கைது (தினமலர்)
ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !
பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது
இச் செய்தி தொடர்பாக, எழுத்தாளர் அருணன் அவர்களின் கருத்துக்கள் (சன் நியூஸ்)
பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் கொலையின் பின்னணி – டி.ஜி.பி.விளக்கம்!
ஆடிட்டர் ரமேஷ் கொலையின் காரணமாக இந்துத்துவ பிரமுகர்களுக்குக் காவல்துறை பாதுகாப்புக் கொடுக்கப்படும் என அறிவித்து அதன்படி பாதுகாப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஹிந்துத்துவப் பிரமுகர்கள் என்ற பெயரில் ரவுடிகளும் கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளும் காவல்துறை பாதுகாப்புப் பெற்றுத் தம் உள்ளூர்ச் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முயல்கின்றனர்.
அதற்குச் சான்று நேற்று அம்பலமான ‘பானிபூரி வியாபாரி’யின் கடத்தல் நாடகம்
வலப்பக்கம் வெளியாகியுள்ளது, ஹிந்துத்துவ ஆதரவுப் பத்திரிகையான தினமலரில் ஆகஸ்ட் 2, 2013 அன்று வெளிவந்த செய்தி.
இதற்கு முன்தினம் இதே தினமலரில் வெளியான செய்தி:–
//அங்கு, நிருபர்களிடம் கூறியதாவது: நான், கோத்தகிரியில் இருந்து திரும்பி வந்து, கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டில், நிறுத்தப்பட்டிருந்த பைக்கை எடுக்கச் சென்றேன். அப்போது, ஒருவர் போலீஸ் உடையில் வந்தார். அவர், பாதுகாப்புக்காக வந்திருப்பதாகக் கூறி, காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது, இன்னொருவர், கர்சீப்பால் என் மூக்கை அடைத்தார். சிறிது நேரத்தில் நான் மயங்கி விட்டேன். கண் விழித்தபோது, நான் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருப்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். கடத்தப்பட்டதை தெரிந்து கொண்ட நான், கண்களை மூடி, பேசாமல் இருந்தேன். அவர்கள், “கல்லைக் கட்டி கடலில், இவனை வீசி விடலாம்’ என, பேசிக் கொண்டனர். அதிர்ச்சி அடைந்த நான், மெதுவாகச் சென்ற காரில் இருந்து குதித்து தப்பி, கோவை வந்து விட்டேன்.//
இப்படி இவர்கள் செய்யும் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளத்தொடர்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றும் எதிர்வினை, முஸ்லிம்கள் மேல் பழியாக வந்து குந்திக் கொள்கிறது.
ஒருவேளை, சக்திவேலின் நாடகம் அம்பலமாகி இருக்கா விட்டால்… நினைத்துப் பார்க்கவே குலை நடுங்குகிறது. “இந்து மக்கள் கட்சிப் பிரமுகரைக் கடத்திய முஸ்லிம்கள்” என்று அவரவர் கற்பனைத் திறனுக்கு ஏற்ப, கண்-காது-மூக்கு வைத்து ஊடங்களில் தலைப்பிடப்பட்டுச் செய்திகள் வெளியாகியிருக்கும். இது தான் சாக்கு என்று கண்ணில் கண்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் எல்லாம் பொய்வழக்கில் சிறை பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப் பட்டிருப்பார்கள்.
காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நடுநிலையாக ஆய்வு செய்து நிகழ்வுகளை அணுகும்போது இவைபோன்ற கள்ளக் கதைகளும் பொய்க் குற்றச்சாட்டுகளும் அம்பலமாகும்; அப்பாவிகள் பாதுகாக்கப் படுவார்கள். தமிழக முஸ்லிம்கள் மீண்டும் ஒருமுறை நிம்மதிப் பெருமூச்சு விடக் காரணமான நேர்மையான, விரைந்த புலனாய்வுக்கு நன்றி!
– மஹ்மூத் அல் ஹஸன்