ஹிந்துத்துவவாதிகளால் சூறையாடப்பட்டது சூரத் பள்ளிவாசல்

கடந்த வியாழன்(13.07.2006)அன்று, சூரத் – குஜராத் மாநிலத்தில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளை எதிர்த்து விஷ்வஹிந்து பரிஷத்-பஜ்ரங்தள் தனது எதிர்ப்புப் பேரணியை நடத்தியது. இப்பேரணி உத்னதர்வாஸா பகுதியை கடந்தபோது அப்பகுதியிலுள்ள மோர்ச்சா பள்ளிவாசலில் அவ்வேளையின் தொழுகைக்கான அழைப்பு(பாங்கு) விடுக்கப்பட்டது. இது இப்பேரணியில் கலந்து கொண்டவர்களை எரிச்சலடையச் செய்தது.

அதன் பின்னர் அங்கு குழப்பமான சூழலும் பேரணியில் கலந்து கொண்ட தொண்டர்களின் ஒரு சமூகத்திற்கு எதிரான ஆவேசமும் மட்டுமே காணப்பட்டது. தங்களது அமைதி பேரணிக்கு பங்கம் விளைவிக்கும்படியான சப்தத்துடன் கூடிய பாங்கு அழைப்பை நிறுத்த வேண்டும் எனக் கூறிக்கொண்டு பேரணியில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பள்ளிவாசலின் உள்ளே புகுந்து கண்ணில் பட்ட மின்விளக்குகள், மின்விசிறிகள் மற்றுமுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

தாங்கள் பேரணியை மட்டுமே மனதில் நினைத்திருந்ததாகவும், பள்ளிவாசலைக் கடக்கும் நேரத்தில் உச்ச சப்தத்தில் கேட்ட பாங்கு அழைப்பின் சப்தத்தைக் குறைக்க கேட்டுக்கொண்டதை சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் விஷ்வஹிந்து பரிஷத்தின் சூரத் நகர பொதுச்செயலாளர் உத்கர்ஷ் பட்டேல் கூறினார்.

பள்ளிவாசலிலிருந்து பேரணியின் மீது கல்வீச்சு நடந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களோ பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் சமயமாதலால் அந்நேரத்தில் பள்ளிவாசலில் அதிகமானவர்கள் இல்லை எனவும், தொழுகைக்கு ஆட்கள் வருவதற்கு முன்பே ஆக்ரமிப்பும் சூறையாடலும் நடந்ததாகவும் கூறினர்.

சம்பவம் நடந்தபின்பு இப்பிரதேசத்தில் இரண்டு சமூகங்களுக்கிடையில் கடுமையான மோதல் சூழ்நிலை நிலவினாலும், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை கூறுகின்றது. மேலும், பள்ளிவாசலை சூறையாடிய கலவரக்காரர்கள் யார் என்பதை காவல்துறை தேடிக்கொண்டிருப்பதாகவும் டி.ஜி.பி வி. சந்திரசேகர் கூறினார்.

இதை வாசித்தீர்களா? :   சர்ச்சைக் கருத்து... வெறுப்பு அரசியல்... என்னவாகும் இந்திய - இஸ்லாமிய நாடுகள் உறவு?