ஸச்சார் அறிக்கை: முஸ்லிம்கள் சலுகைபெற சங்பரிவார் கடும் எதிர்ப்பு

புதுதில்லி: முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் அவர்களின் அறிக்கைக்கு எதிராக சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு மிரட்டல்களைத் தெரிவித்துள்ளன. ஸச்சார் அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதற்கான முயற்சிகளைத் தங்களது முழு ஆற்றல் கொண்டு எதிர்ப்போம் என பாஜக, விஹிப தலைவர்கள் அறிவித்தனர்.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நாட்டைப் பிளவுபடுத்தும் எனவும் எனவே அதனைத் தங்களது அனைத்து வித சக்திகளையும் பயன்படுத்தி எதிர்ப்போம் என பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் மிரட்டல் விடுத்தார். சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை மட்டுமே பாஜக வரவேற்கும். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை பாஜக ஒருபோதும் வரவேற்காது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சி நடக்கும் எனில் அதனை தங்களது அனைத்து வித சக்திகளையும் பயன்படுத்தித் தடைசெய்வோம் என அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் இதே கருத்தினை வலியுறுத்தினார். ஒரு பிரிவினர்களுக்கு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் தனி நிதி அனுமதிக்க இயலாது என முன்னாள் பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். ஆனால் அதே சமயம் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக ஆவேச அறிக்கைகளை விட்ட சங்க்பரிவார் தலைவர்களில் ஒருவர் கூட ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதைக் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையினைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஸச்சார் தலைமையிலான குழு கடந்த வெள்ளியன்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அளித்தது.

குடும்பக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தாமல் அதிகமான குழந்தைகளை உற்பத்தி செய்யும் முஸ்லிம்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் உள்ள இடஒதுக்கீட்டில் பங்குபெற எவ்வித தகுதியும் இல்லை எனவும் குடும்பக்கட்டுப்பாடை நடைமுறைப்படுத்தினால் இடஒதுக்கீடு வழங்குவதைக் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் விஹிப தலைவர் பிரவீன் தொகாடியா செய்தியாளர்கள் கூடியிருந்த அரங்கில் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இந்துக்களின் தேவைகள் அடங்கிய ஒரு பட்டியலையும் தொகாடியா தயாராக்கி வைத்துள்ளார்.

ஆதிவாசிகள், மலைஜாதியினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு காலகாலமாக அநீதம் இழைக்கப்ப்பட்டிருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறில்லை. முஸ்லிம்கள் இந்தியாவை ஆக்ரமிக்கவும், புத்தர், சமணர், இந்துக்கள் போன்றோரை குரூரமாக கொடுமைப்படுத்தவும் செய்திருக்கின்றனர். இதனை இவர்கள் ஷரீஅத் சட்டங்களின் வழிகாட்டுதல் படி செய்துள்ளனர்.

இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இதுவரை எதுவும் செய்திருக்கவில்லை. அவர்களால் ஒருபிரயோஜனமும் நாட்டிற்கு இதுவரை ஏற்பட்டிருக்கவில்லை. ஷரீஅத் சட்டங்களின் படி வாழும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது.

முஸ்லிம்கள் மிகமோசமான நிலையில் வாழ்கின்றனர் என்று கூறும் அறிக்கை ஹஜ் மற்றும் இஃப்தாரின் பெயரில் கோடிகள் செலவழிப்பதை கண்டுகொள்ளவில்லை. அஸிம் ப்ரேம்ஜி, ஹாஜி யஹ்கூப் குரைஸி போன்றவர்கள் எங்கு வசிக்கின்றனர் என்பதையும் விசாரிக்க வேண்டும். இந்துக்களுக்கு ஒப்பாக முஸ்லிம்களுக்கும் வங்கிக் கடன் கிடைக்க வேண்டுமெனில் அவர்கள் ஷரீஅத் சட்டதிட்டங்களை விட்டுவிட்டு முழுமையாக இந்திய சட்டதிட்டங்களை பின்பற்றவேண்டும் எனவும் தொகாடியா கூறினார்.

இதை வாசித்தீர்களா? :   ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்: மோடி