இஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?

Share this:

முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல் அதைப் போக்கும் காரணிகளையும் விளக்குகிறது.

அது போலவே பர்தா (ஹிஜாப்) விஷயத்திலும் இஸ்லாம் கட்டாயப் படுத்தவில்லை. இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது.

மனிதனின் இயற்கையான உணர்வான வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரித்தான உயர்ந்த சிறந்த பண்பாகும். வெட்கமின்றிச் செயல்படுதலை இஸ்லாம் நடை, உடை, பாவனை என எல்லா காரியங்களிலும் தடை செய்கிறது.

நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அத்தகைய சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் பெற்றுத் தரும் உடை விஷயத்தில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகிறது. உடை என்பது சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. எனவேதான் ஒருவர் உடை அணியும் விதம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பாத விதத்தில் இருப்பதற்கும், தங்களது மறைவான பகுதிகள் வெளியில் தெரியும்படியான இறுக்கமான ஆடைகளை தவிர்க்கும்படியும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இது இருபாலருக்குக்கும் பொதுவானதுதான்.

பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் கை மணிக்கட்டுக்கு கீழ் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு மறைப்பதற்கு ஏதுவான உடையாக தற்காலத்தில் வடிவமைத்திருக்கும் பர்தா இருப்பதனாலேயே இஸ்லாம் கூறும் அறிவுரையை மனப்பூர்வமாக பேணும் பெண்கள் இதனை அணிகின்றனர். கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பர்தா போன்ற உடை அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறை திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப்பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் சமூகத்தில் மோசமானவர்களால் விளையும் தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் தான் பர்தா போன்ற உடையை உபயோகிக்க இஸ்லாம் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறது. இது பற்றிய விரிவான விளக்கத்தை இவ்வலைப்பதிவில் காணலாம்.

இறைவன் மிக அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.