பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழச் செல்லலாமா?

பதில்:

பெண்கள் பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை. மாறாக பெண்கள் பள்ளி வாசலுக்குத் தொழச்சென்றால் அவர்களைத் தடுக்காதீர்கள் என்றுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.

அதற்கான ஆதாரங்கள்:

உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் '(உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் "பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்" என்று பதிலுரைத்தார்.

அறிவிப்பவர்: இப்னு உமர்
நூல்: புகாரி(900)

மேலும்

உங்களின் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)
நூல்: புகாரி(873)

இதே போன்ற ஹதீஸ் முஸ்லிம்(666,667,668,672), திர்மிதீ(520), நஸாயீ(699), அபுதாவுத்(499), இப்னு மாஜா(16), அஹ்மத்(4293,4328,4426,4695) ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கிறது.

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன்பஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி(578)

________________________

"உங்களில் ஒரு பெண் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்" என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி)
நூல் : புகாரி(707)

________________________

இதை வாசித்தீர்களா? :   கோன் மருதாணி (Cone henna) போடலாமா?

நபி(ஸல்) அவர்களை விட தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பரிபூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்
நூல் : புகாரி(708)

________________________

நபி(ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் சிறிதாக இருந்த தங்களின் கீழாடையைப் பிடரிகளின் மீது கட்டிக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுபவர்களாக இருந்தனர். (ஸஜ்தாவின் போது) ஆண்கள் ஸஜ்தாச் செய்து உட்காரும் வரை நீங்கள் உங்கள் தலையை உயர்த்த வேண்டாம் என்று பெண்களுக்குக் கூறப்பட்டிருந்தது.

அறிவிப்பவர் : சஹ்ல் இப்னு சஃது
நூல் : புகாரி(814)

________________________

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு வஹாப் குறிப்பிடுகிறார்.

அறிவிப்பவர் : உம்மு சலமா(ரலி)
நூல் : புகாரி(837)

மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் பெண்கள் பள்ளிவாயிலுக்கு சென்று ஆண்களுக்கு நடத்தப்படும் ஜமாஅத்துடன் சேர்ந்து தாமும் ஜமாஅத்தாக தொழுதுள்ளார்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இதிலிருந்து பெண்கள் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் செல்வதற்கு இஸ்லாம் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை என்பதோடு அவர்கள் பள்ளிவாயிலுக்குச் சென்று தொழ விரும்பினால் அச்செயலைத் தடுக்கவும் கூடாது என வலியுறுத்துவதையும் அறியலாம்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.