| கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1) |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் |
| சனி, 18 ஆகஸ்டு 2007 17:24 |
|
ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும். மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!
"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது. அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம். அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன. "முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது." "ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள். சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும். உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும். அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம். ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம். முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா? வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன. கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள். சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன? ஆக்கம்: அபூ ஸாலிஹா கருத்துக்கள் (6)
![]()
அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.
உண்மை தான் இந்த ஆக்கதை படிக்கும்போதே மனசில் இருக்கம் பல வண்ன வண்ன கனவுகளை சுமந்து வெளிநாடு என்னும் மய வலைக்குல் சிக்கி மனைவி,குழந்தைகள்,அம்மா.அப்பா,இப்படி தொடரும் உறவுகளை மகிழ்விக்க தான் எண்னங்களையும்.வலிபத்தையும் ஆண்டுகள் பல வெளி நாட்டில் தொலைத்து கடைசியில் கப்பலுக்கு போன மச்சான் பொரும் ஏக்கத்துடன் தான் தயகம் வரவேண்டியுள்ளது ,இன்னும் 100க்கு85 நபருக்கு இந்த நிலை தான்,
இப்படிக்கு சொந்த [மனைவி மக்கள்]
உறவுகளுக்கும் பசங்களூக்கும் ஏங்கும் ஒரு ஜீவன்
1
August 19, 2007 06:21
ஆழமான, கண்ணீர்த்துளிகளின் வலியை உணர்ந்த வரிகள் பல இதில்... மிகவும் அழுத்தமான கட்டுரை.
இங்கே வருவதற்கு முன்பு செண்ட் மணமும், பாலீஷ் போட்ட ஷூவுமே கல்ஃப் என்று எண்ணிக்கொண்டு இருந்த என் போன்ற பலருக்கு இது உதவும். இத்தகைய உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள். - mubarak, seashore trd & conrg
2
August 19, 2007 08:31
Very, Very super Essay this , This message is good, I sent to all my Friends...
3
August 21, 2007 13:47
இது போன்ற கட்டுரைகள் என்னை போல் வளைகுடா நாடுகளில் வளைந்து நிற்கும் இளைஞர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும்...
4
October 28, 2008 10:49
மிகவும் உருக்கமான நிகழ்வுகளை ஒருங்கிணைத்த ஆக்கம். தொடர்புடைய ஒரு கதை (மடலில் வந்தது)
வளைகுடா மாப்பிள்ளை
=======================
துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம்.
அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..
என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது.
அன்புள்ள கணவனுக்கு...
தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன். அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.
நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று
விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களைப்போல ஆடம்பரமாக இருக்கலாம்.
மனைவியின் கடிதத்தைக் கண்டு 'அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்' என்று நினைத்து இன்னும்
ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.
பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.
அன்புள்ள மனைவிக்கு,
நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே. நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.
உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.
கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.
ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,
அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை
வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.
புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது
மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது:
'மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள்...'
5
November 05, 2008 07:53
கருத்து எழுதுக :
|